பிலிப்பீன்சு (ஆங்கில மொழி: Philippines; /ˈfɪl[invalid input: ‘ɨ’]piːnz/ (கேட்க); பிலிப்பினோ: பிலிப்பினாஸ் [ˌpɪlɪˈpinɐs]), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு (பிலிப்பினோ: ரீபப்பிலிக்கா இங் பிலிபினாஸ்) தென்கிழக்காசியாவிலுள்ள, மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இறைமையுள்ள தீவு நாடாகும். லூசோன், விசயாஸ் மற்றும் மின்டனாவு எனப் பொதுவாக மூன்று பிரதான புவியியற் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சு 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகராக மணிலாவும், அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகக் குவிசோன் நகரமும் உள்ளன. இவ்விரு நகரங்களும் மணிலா பெருநகரத்தின் பகுதிகளாகும்
பிலிப்பீன்சின் எல்லைகளாக வடக்கே லூசான் நீரிணைக்கு அப்பால் தாய்வானும்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பால் வியட்னாமும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பால் புரூணை தீவுகளும்; தெற்கே இந்தோனேசியாவின் ஏனைய தீவுகளிலிருந்து பிலிப்பீன்சைப் பிரிக்கும் செலேபெஸ் கடலும்; கிழக்கில் பிலிப்பீன் கடலும் பலாவு எனப்படும் ஒரு தீவு நாடும் உள்ளன. பிலிப்பீன்சு பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும் நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும் பூகம்பங்களும் சூறாவளிகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இருந்தாலும், ஏராளமான இயற்கை வளங்களையும் உலகின் மிகப்பெரிய உயிரியற் பல்வகைமையையும் இந்நாடு கொண்டுள்ளமைக்கும் இவை காரணமாக அமைந்துள்ளன. அண்ணளவாக 300,000 சதுர கிலோமீட்டர்கள் (115,831 sq mi) பரப்பளவைக் கொண்ட பிலிப்பீன்சு உலகில் 72 ஆவது-பெரிய நாடாக விளங்குகின்றது.
அண்ணளவாக 100 மில்லியன் மக்கள்தொகையுடன் பிலிப்பீன்சு, ஆசியாவில் ஏழாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும், உலகில் 12 ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும் விளங்குகின்றது. மேலதிகமாக 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. தீவுகளெங்கும் பல்வேறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் காணப்படுகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலத்தில், தீவுக்கூட்டத்தின் ஆரம்பக்குடிகளுள் சிலராக நெகிரிட்டோக்கள் காணப்பட்டனர். அவர்களின் வருகைக்குப் பின்னர் ஆஸ்திரோனேசிய மக்கள் அலைஅலையாக வந்து குடியேறினர். சீன, மலாய, இந்திய மற்றும் இசுலாமிய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்தன. பின்னர், டாத்துக்கள், ராஜாக்கள், சுல்தான்கள் அல்லது லக்கன்களின் கீழ் பல்வேறு அரசுகள் நிறுவப்பட்டன.
1521 இல் பெர்டினென்ட் மகலன் ஹொமொன்கொன், கிழக்கு சமருக்கு வருகைதந்தமை எசுப்பானியக் காலனியாதிக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1543 இல், எசுப்பானிய நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார். மெக்சிக்கோ நகரத்திலிருந்து மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பியின் வருகையுடன் 1565 இல் இத்தீவுக்கூட்டத்தின் முதலாவது எசுப்பானியக் குடியிருப்பு நிறுவப்பட்டது. பிலிப்பீன்சு 300 வருடங்களுக்கு மேலாக எசுப்பானியப் பேரரசின் பகுதியாக இருந்தது. இதன் விளைவாகக் கத்தோலிக்கம் நாட்டின் முக்கியமான சமயமானது. இந்தக் காலத்தில், ஆசியாவுடன் அமெரிக்காக்களை இணைத்த பசுபிக்கினூடான மணிலா – அகபல்கோ வணிகத்தின் மேற்கத்தைய மையமாக மணிலா உருவானது.
19 ஆம் நூற்றாண்டு நிறைவடைந்து 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பிக்கும் காலத்தில், குறுகியகாலமே நிலவிய முதலாவது பிலிப்பீன் குடியரசு தோன்றக் காரணமான பிலிப்பைன் புரட்சியும் அதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்–அமெரிக்கப் போரும் நிகழ்ந்தன. சப்பானியக் குடியேற்றக் காலத்தைத் தவிர்த்து இத்தீவுகள் மீதான இறையாண்மையை 1945 வரை ஐக்கிய அமெரிக்கா தக்கவைத்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிலிப்பீன்சு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதிலிருந்து, ஒரு சர்வாதிகாரத்தைத் தோற்கடித்த மக்கள் அதிகாரப் புரட்சி உள்ளடங்கலாக, மக்களாட்சி தொடர்பில் பல கொந்தளிப்பான அனுபவங்களை பிலிப்பீன்சு எதிர்கொண்டது.
பாரிய மக்கள்தொகை அளவும், பொருளாதார உள்ளாற்றலும் இந்நாட்டை ஒரு இடைநிலை வல்லரசாக வகைப்படுத்தப்படக் காரணமாக அமைந்துள்ளன. இது ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, மற்றும் கிழக்காசிய உச்சிமாநாடு ஆகியவற்றை நிறுவிய உறுப்பு நாடுகளுள் ஒன்றாக விளங்குகின்றது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. பிலிப்பீன்சு ஒரு வளர்ந்து வரும் சந்தையாகவும் புதிதாகக் கைத்தொழில்மயப்பட்ட நாடாகவும் கருதப்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த பொருளாதாரம் தற்போது சேவை மற்றும் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றமடைந்து வருகின்றது.
பெயர் வரலாறு
எசுப்பானிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் நினைவாக பிலிப்பீன்சு என்ற பெயர் இத்தீவுக் கூட்டத்திற்குச் சூட்டப்பட்டது. எசுப்பானிய நாடுகாண்பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் தனது 1542 ஆம் ஆண்டு பயணத்தின் போது அன்றைய எசுப்பானிய முடிக்குரிய இளவரசரின் நினைவாக லெய்ட்டித் தீவு, சாமார்த் தீவு ஆகிய தீவுகளுக்குப் “பிலிப்பினாசு” என்ற பெயரைச் சூட்டினார். இறுதியாக லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் என்ற பெயர் இத்தீவுக்கூட்டம் முழுவதுக்கும் பொதுவானதாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பெயர் பொதுவானதாக மலர்வதற்கு முன்னர், ஐலாஸ் டெல் பொனியென்டே (மேற்குத் தீவுகள்) என்றும் சான் லாசரோ தீவுகளை பேர்டினண்ட் மகலன் என்றும் எசுப்பானியர்கள் வழங்கி வந்தனர்.
பிலிப்பீன்சின் அதிகாரபூர்வப் பெயர் பலமுறை மாற்றத்திற்குள்ளானது. பிலிப்பீனியப் புரட்சியின் போது மலொலோஸ் காங்கிரஸ் ரிப்புப்ளிக்கா பிலிப்பினா அல்லது பிலிப்பீன் குடியரசை நிறுவுவதாகப் பிரகடனப்படுத்தியது. எசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898) மற்றும் பிலிப்பீன்-அமெரிக்கப் போர்க் (1899–1902) காலத்திலிருந்து பொதுநலவாயக் காலம் (1935–46) வரை அமெரிக்கக் காலனித்துவ அதிகாரிகள் எசுப்பானியப் பெயரின் மொழிபெயர்ப்பான பிலிப்பீன் தீவுகள் என இந்நாட்டைக் குறிப்பிட்டனர். 1898 பாரிசு உடன்படிக்கை ஏற்பட்டதிலிருந்து பிலிப்பீன்சு என்ற பெயர் தோன்றி நாட்டின் பொதுவான பெயராகவும் மாறியது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பிலிப்பீன்சு குடியரசு என்பது அலுவல்முறைப் பெயராக வழங்கப்பட்டு வருகின்றது.
வரலாறு
ஆரம்ப வரலாறு
இதுவரை இத்தீவுக்கூட்டத்தில் கண்டறியப்பட்ட மனித எச்சங்களுள் கலாவோ மனிதனின் எச்சமே மிகப்பழமையானது. கலாவோ மனிதனின் கணுக்கால் எலும்புகளை யுரேனியத் தொடர் நாட்கணிப்பிற்கு உட்படுத்திய போது 67,000 ஆண்டுகள் பழமையானது என நம்பகமான முறையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இச்சிறப்பை, கார்பன் நாட்கணிப்பின் மூலம் 24,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்ட, பிலிப்பீன்சின் மாகாணமான பலாவனைச் சேர்ந்த, தபொன் மனிதன் பெற்றிருந்தான். நெகிரிட்டோக்களும் இத்தீவுக்கூட்டத்தின் முற்காலக் குடியேறிகளுள் ஒரு குழுவினராக இருந்த போதிலும் அவர்களின் முதல்குடியேற்றம் பிலிப்பீன்சில் எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் நம்பகமான முறையில் கணிக்கப்படவில்லை.
பண்டைய பிலிப்பினோக்களின் மூதாதையர்கள் பற்றிப் பல வேறுபாடான கோட்பாடுகள் நிலவுகின்றன. “தாய்வானில் இருந்து வந்தோர்” என்னும் கருத்தே மொழியியல் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. இதன்படி தாய்வானிலிருந்து வந்த ஆஸ்திரோனேசியர்கள் முன்னர் வந்தவர்களை இடம்பெயரச்செய்து, கி.மு. 4000 இல் பிலிப்பீன்சில் குடியேறினர். கி.மு. 1000 அளவில், வேட்டையாடும் பழங்குடியினர், போர்வீரர்கள், மலைநாட்டின் பணம் படைத்த செல்வக்குழுக்கள் மற்றும் கடலோரத் துறைமுக ஆட்சிப்பகுதியினர் என நான்கு வகையான சமூகக் குழுக்களாக மக்கள் வாழலாயினர்.
மரபு வழி அரசுகள்
தீவுகளில் பரவியிருந்த சில சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதிலும் அவற்றில் பல சமூகங்கள் அரசுகளாக மாற்றமடைந்து, புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சப்பான் மற்றும் ஏனைய ஆஸ்திரோனேசிய தீவுகள் உள்ளடங்கலாக கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுடன் கணிசமான வணிகம் முதலான தொடர்புகளை வளர்த்துக்கொண்டன. முதலாவது ஆயிரம் ஆண்டுகாலத்தில் கடலோரத் துறைமுக ஆட்சிப்பகுதிகள் எழுச்சியுற்று தன்னாட்சி கொண்ட பராங்கீசுகளை உள்ளடக்கிய கடல்சார் நாடுகளாக உருவெடுத்தன. இவை சுதந்திரமானவையாக அல்லது டாத்துக்கள் தலைமையிலான மலாய் கடலாதிக்க அரசுகள், குவாங்குகளால் ஆளப்பட்ட சீனத்தின் சிற்றரசுகள் அல்லது ராஜாக்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தியப்பண்பாட்டுச் சார்புடைய அரசகங்கள் போன்றவை பெரிய நாடுகளைச் சார்ந்தவையாக இருந்தன.
எடுத்துக்காட்டாக, அட்டியின் தலைவனான மரிகுடோவிடமிருந்து மட்ஜா-அஸ் -இன் கெடாத்துவானை டாத்து புட்டி மன்னர் விலைக்கு வாங்கி ஆட்சி செய்தார். மட்ஜா-அஸ், அழிக்கப்பட்ட அவர்களது தாயகமான பன்னய் அரசைத் தழுவிப் பெயரிடப்பட்ட பனய் தீவில் நிறுவப்பட்டது. புட்டுவான் இராச்சியம் ராஜா ஸ்ரீ பட ஷாஜாவின் ஆட்சியின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. டொண்டோ அரசகம் லகன்டுலா மரபு வழி அரசர்களாலும். செபு அரசகம் ராஜமுதா ஸ்ரீ லுமாயினாலும் ஆளப்பட்டது.
இக்காலத்தில் காணப்பட்ட ஏனைய நாடுகளாக, குவாங் கட் சா லி-ஹானால் நிர்வகிக்கப்பட்ட சீனமயமாக்கப்பட்ட மா-இ இராச்சியம் மற்றும் இசுலாமியமயம் ஆவதற்கு முன்னர் இந்திய இராச்சியமாக முதலாவது ஆட்சியாளரான ராஜா சிபாட் தி ஓல்டரின் கீழ் இருந்த சூலு என்பன விளங்கின. மாபெரும் காப்பியங்களான ஹினிலவொட், டரங்கன் மற்றும் பியாங் நி லாம்-அங் என்பன இக்காலத்தில் தோன்றியவையாகும்.
1300 களில் பிலிப்பைன் தீவுக்கூட்டத்தில் இசுலாம் நுழைந்து பரவியது. 1380 இல், கரிம் உல் மக்தும் சூலுவில் இசுலாத்தை அறிமுகப்படுத்தினார். ஜொகோரில் பிறந்த அராபிய வர்த்தகரான சையத் அபூ பக்கர் மலாக்காவிலிருந்து சுலுவிற்கு வந்து சுலுவின் ராஜாவை மதம் மாற்றியதுடன், அவரது மகளைத் திருமணம் செய்து சூலு சுல்தானகத்தை நிறுவி, ஷாரிபுல் ஹாசெம் என்னும் பெயருடன் அதன் முதல் சுல்தான் ஆனார். 15 ஆம் நூற்றாண்டின் முடிவிலே, ஜொகூரின் செரிப் முகமது கபங்சுவான் மின்டனவு தீவில் இசுலாமை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, இரனுன் இளவரசியான பரமிசுலியை திருமணம் முடித்து, அவர் மகுயின்டனவு சுல்தானகத்தை நிறுவினார். சுல்தானக வடிவிலான அரசாங்கம் லனவு வரை மேலும் விரிவடைந்தது.
இறுதியில் இசுலாம் தெற்கில் மின்டனவுக்கும் வடக்கில் லூசோனுக்கும் பரவியது. 1485 முதல் 1521 வரை பொல்கியா சுல்தானின் ஆட்சிக்காலத்தில் மணிலா கூட இசுலாமிய மயமாக்கப்பட்டது. அதேவேளை புருணை பேரரசு ராஜா சலாலிலாவை இசுலாமிற்கு மாற்றியதன் மூலம் டொண்டோ இராச்சியத்தை அடிமைப்படுத்தியது. இருந்த போதிலும், விலங்குகளை வழிபடும் இகோரொட், மலாய மட்ஜா-அஸ், சீனமயமாக்கப்பட்ட மா-இ, மற்றும் இந்தியமயமாக்கப்பட்ட புட்டுவன் போன்ற அரசுகள் தமது பண்பாடுகளைத் தொடர்ந்து பேணினார்கள். சில இராச்சியங்களில் இசுலாமிய எதிர்ப்பு உணர்வு காணப்பட்டது. இதன் விளைவாக, டாத்துக்கள், ராஜாக்கள், குவாங்குகள், சுல்தான்கள், மற்றும் லக்கன்களுக்கிடையில் போட்டிகள் உருவாயின. இறுதியில் எசுப்பானியக் காலனியாக்கத்திற்கு இலகுவில் வழிகோலியது. எசுப்பானியப் பேரரசுக்குள் இவ்வரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு எசுப்பானிய மயமாக்கமும் கிறித்தவ மயமாக்கமும் நடைபெற்றன.
எசுப்பானியக் காலனியாக்கம்
1521 ஆம் ஆண்டு, போர்த்துக்கேய தேசாந்திரியான பேர்டினண்ட் மகலன் பிலிப்பைன்சை வந்தடைந்து இத்தீவுக்கூட்டத்தை எசுப்பானியாவிற்கு உரித்துடையதாக்கினார். எசுப்பானிய தேசாந்திரியான மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி 1565 ஆம் ஆண்டு மெக்சிக்கோவிலிருந்து இங்கு வந்து, முதலாவது ஐரோப்பியக் குடியேற்றங்களை செபுவில் அமைத்தார். அப்பொழுதிலிருந்து காலனியாதிக்கம் ஆரம்பமானது. பனய் தீவுகளிற்கு எசுபானியர்கள் இடம் மாறினர். பிறகு உள்நாட்டு விசயன் தலைமையில் கூடிய கூட்டுப்படையையும் எசுப்பானிய படைவீரர்களையும் கூட்டணியாக ஒருங்கிணைத்தனர். அதற்குப்பின் எசுபானியர்கள் இசுலாமிய மணிலாவை நோக்கிப் படையெடுத்தனர். எசுப்பானிய ஆட்சியின் கீழ், 1571 ஆம் ஆண்டு எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைநகரமாக மணிலாவைப் பிரகடனப்படுத்தினார்கள். அங்கு டொண்டோ சதித்தி்ட்டத்தை முறியடித்து சீனக் கடற்கொள்ளைப் போர்ப் பிரபுவான லிமஹொங்கைத் தோற்கடித்தனர்.
எசுப்பானிய ஆட்சியானது இத்தீவுக்கூட்டத்தின் பிரிவுபட்ட பிராந்தியங்களின் மத்தியில் அரசியல் ஒற்றுமையைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. 1565 இல் இருந்து 1821 வரை பிலிப்பைன்ஸ் தீவானது புதிய எசுப்பானியாவின் உப அரசின் ஒர் பிரதேசமாக ஆட்சிசெய்யப்பட்டு, மெக்சிக்கோ சுதந்திரப் போரின் பின்னர் மட்ரிட்டிலிருந்து (எசுப்பானியாவிலுருந்து) நேரடியாக ஆட்சிசெய்யப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை மணிலா கலியன் என்ற கப்பலும் பெரிய கடற்படையும் மணிலாவிற்கும் அக்கபல்கோவிற்கும் இடையே ஒரு வருடத்தில் இருமுறை பயணித்தது. இவ்வர்த்தகம் சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், மிளகுத்தூள், அன்னாசி போன்ற அமெரிக்காவில் இருந்து வந்த உணவுகளை இங்கு அறிமுகப்படுத்தியது. உரோமன் கத்தோலிக்க மதப்பரப்புரையாளர்கள் பெரும்பாலான வறிய ஏழை மக்களை கிறித்தவத்திற்கு மதம் மாற்றியதுடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் வைத்தியசாலைகளையும் அமைத்தனர். எசுப்பானிய ஆணையின் மூலம் 1863 ஆம் ஆண்டு இலவசப் பொதுப்பள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கக் காலகட்டத்திலேயே வெகுசன பொதுக்கல்வி முறையின் முயற்சிகள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தன.
எசுப்பானியா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு உள்ளூர் புரட்சிகளை எதிர்கொண்டதுடன் சீனக் கடற்கொள்ளையர்கள், டச்சுக்கள், போர்த்துகேயர்கள் முதலியவர்களிடமிருந்து பல்வேறு குடியேற்றச் சவால்களையும் எதிர்கொண்டது. ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழு ஆண்டுகள் போரின் ஒரு நீடிப்பாகப் பிரிட்டனின் படைகள் 1762 இல் இருந்து 1764 வரை மணிலாவைக் கைப்பற்றிக்கொண்டனர். 1763 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து எசுப்பானியாவின் ஆட்சி மீட்டெடுக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் துறைமுகங்கள் உலக வர்த்தகத்திற்காகத் திறந்துவைக்கப்பட்டதில் இருந்து பிலிப்பைன்ஸ் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பல எசுப்பானியர்கள் பிலிப்பைன்சில் பிறந்தனர் (கிரியொல்லோ). அத்துடன் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தோர் (மெஸ்டிசோஸ்) செல்வந்தர்களாக மாறியதுடன், ஐபேரியன் குடாநாட்டில் (பெனின்சுலரிஸ்) பிறந்த எசுப்பானியர்கள் பாரம்பரியமாக வகித்துவந்த அரசாங்கப்பதவிகள், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த குடியேற்றக்காரர்களும் திறந்துவிடப்பட்டது. புரட்சிக்கான சிந்தனைகளும் தீவுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தன. 1872 ஆம் ஆண்டு கவைட் கலகத்தில் ஏற்பட்ட கிரியொல்லோ அதிருப்தி பிலிப்பைன்ஸ் புரட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தது.
மூன்று பாதிரியார்களான-மரியானோ கோமேஸ், ஜோஸ் பர்கோஸ் மற்றும் ஜாசின்டோ ஜமோரா (கூட்டாக கொம்பர்சா என அறியப்படுகின்றனர்) ஆகியோர் காலனித்துவ அதிகாரிகளால் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட பின்பு, புரட்சிகர உணர்வுகள் 1872 ஆம் ஆண்டில் தூண்டுதல் பெற்றன. இச்சம்பவம் மார்செலோ எச். டெல் பிலார், ஒசே ரிசால், மற்றும் மரியானோ பொன்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட எசுப்பானியாவிலுள்ள பரப்புரை இயக்கம், பிலிப்பைன்சில் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பரப்புரைசெய்ய ஊக்குவித்தது. இறுதியில் ரிசால் கிளர்ச்சிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு டிசம்பர் 30, 1896 அன்று தூக்கிலிடப்பட்டார். சீர்திருத்த முயற்சிகள் எதிர்ப்பைச் சந்தித்ததால், ஆயுதக் கிளர்ச்சி மூலம் எசுப்பானியாவிடமிருந்து சுதந்திரம் பெற முயன்ற ஆண்ட்ரஸ் பொனிபாசியோ, 1892 இல் கடிபுனன் என்ற இரகசிய அமைப்பை நிறுவினார்.
பொனிபாசியோவும் கடிபுனனும் பிலிப்பைன் புரட்சியை 1896 இல் ஆரம்பித்தனர். இறுதியில் கடிபுனனின் ஒரு பிரிவான, கவிட்டே மாகாணத்தின் மக்டலோவால் புரட்சியின் தலைவரான பொனிபாசியோவின் நிலைக்குச் சவால் விடப்பட்டதுடன் எமிலியோ அக்கினால்டோ அப்பதவியை எடுத்துக்கொண்டார். 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போர் கியூபாவில் ஆரம்பித்து பிலிப்பைன்சை வந்தடைந்தது. சூன் 12, 1898 இல் கவிட், கவிட்டே என்ற இடத்தில் அக்கினால்டோ எசுப்பானியாவிடமிருந்து பிலிப்பைன்சின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதுடன், அடுத்த வருடம் முதலாவது பிலிப்பைன் குடியரசு பரசோயின் தேவாலயத்தில் வைத்து நிறுவப்பட்டது.
அமெரிக்கக் காலம்
எசுப்பானிய அமெரிக்கப் போரில் எசுப்பானியா தோற்றதால் எசுப்பானியா இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது. 1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் இதற்கு இழப்பீட்டுத் தொகையாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிற்கு வழங்கியது. அப்போது புதிதாக உருவான முதலாவது பிலிப்பைன் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.
அமெரிக்கர்கள் முதலாவது குடியரசின்போது காணப்பட்ட உப-அரசுகளான: நலிவுறும் சூலு சுல்தானகம், கிளர்ச்சி கொள்ளும் தகலாகு குடியரசு, விசயாசிலுள்ள நெக்ரோக்களின் குடியரசு மண்டலங்கள், மின்டனவுவிலுள்ள சம்பொவங்கா குடியரசு என்பவற்றை அடக்கினார்கள். இந்தக் காலத்தில், பிலிப்பைன் பண்பாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன் பிலிப்பைன் திரைத்துறை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஒரு விரிவாக்கம் நிகழ்ந்தது. மணிலாவை நவீன நகரமாக மாற்றும் பொருட்டு டானியல் பெர்ன்ஹாம் ஒரு கட்டுமானத் திட்டத்தை வடிவமைத்தார்.
1935 ஆம் ஆண்டு, மானுவல் குவிசோன் சனாதிபதிப் பொறுப்பை ஏற்றதுடன் பிலிப்பைன்சிற்குப் பொதுநலவாய அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர் தேசிய மொழியொன்றை நியமித்ததுடன் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் சப்பானியப் பேரரசு படையெடுத்தது. மேலும் ஜோஸ் பி. லாரல் தலைமையில் இரண்டாம் பிலிப்பைன் குடியரசு சப்பானின் கூட்டு நாடாக நிறுவப்பட்டது. ஆகவே இந்தக் காரணங்களால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்கள் தடைப்பட்டன. பட்டான் மரண அணிவகுப்பு மற்றும் மணிலாப் போரின் போது உச்சக்கட்டத்தை அடைந்த மணிலா படுகொலை போன்ற பல அட்டூழியங்களும் போர்க் குற்றங்களும் யுத்தத்தின் போது இழைக்கப்பட்டன. 1944 இல் அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் குவிசொன் இறந்ததுடன் செர்ஜியோ ஒஸ்மெனா அவரைத் தொடர்ந்து சனாதிபதி ஆனார். நேச நாடுகளின் படைகள் 1945 ஆம் ஆண்டு சப்பானியர்களைத் தோற்கடித்தனர். போரின் முடிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பனிப்போர்க் காலம்
ஒக்டோபர் 24, 1945 இல், பிலிப்பைன்ஸ் ஐக்கிய நாடுகள் அவையினை நிறுவிய அங்கத்தவர்களுள் ஒருவரானதுடன், அடுத்த வருடம் சூலை 4, 1946 இல் மனுவேல் ரொக்சாசின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவால் சுதந்திர அரசாக அறிவிக்கப்பட்டது. பொதுவுடமை இயக்கமான குக்பலகப்பிடம் நடவடிக்கைகளில் பிரிந்தவர்கள் நாட்டுப்புறங்களில் கட்டுப்பாடின்றி உலவத் தொடங்கினர். அவர்கள் சனாதிபதி எல்பீடியோ குவிரினோவிற்குப் பின்வந்த ரமன் மக்சேசேயால் அடக்கப்பட்டனர். மக்சேசேக்குப் பின்வந்த கார்லஸ் பி. கார்சியா பிலிப்பினோ முதன்மைக் கொள்கையை ஆரம்பித்தார். இது டியொஸ்டாடோ மகபகலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன் சுதந்திர விழாக் கொண்டாட்டம் சூலை 4 இல் இருந்து எமிலியோ அகுயினால்டோவின் பிரகடனத் திகதியான சூன் 12 இற்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில், வட போர்னியோவின் கிழக்குப் பகுதிக்கான உரிமை கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
1965 இல், சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோசிடம் மகபகல் தோல்வியடைந்தார். மார்க்கோசு அவரது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் பல்வேறு பொதுத் திட்டங்களை ஆரம்பித்த போதிலும் பொது நிதிகளில் பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்தார். இதுபோன்ற பாரிய ஊழல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டார். பாரிய சமூகக் கொந்தளிப்பிற்கும் தனது ஆட்சி முடிவடைவதற்கும் இடையில் மார்க்கோஸ் இராணுவச் சட்டத்தை செப்டம்பர் 21, 1972 இல் பிரகடனம் செய்தார். அவரது இந்த ஆட்சிக் காலம் அரசியல் ஒடுக்குமுறை, தணிக்கை முறை, மற்றும் மனித உரிமை மீறல்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது. பெரும்பாலான பிலிப்பினோக்கள் வறுமையுடன் இருந்தபோது அவரது மனைவி இமெல்டா மார்க்கோசு ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்.
ஆகஸ்ட் 21, 1983 இல், மார்க்கோசின் முக்கியப் போட்டியாளரான எதிர்க்கட்சித் தலைவர் பெனிக்னோ அக்கீனோ இளையவர், மணிலா பன்னாட்டு விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். மார்க்கோஸ் இறுதியில் 1986 இல் முன்னறிவிப்பற்ற சனாதிபதித் தேர்தலுக்கு அக்கீனோவின் மனைவியான கொரசோனுக்கு எதிராக அழைப்பு விடுத்தார். இதில் மார்க்கோஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்திருக்கின்றது என்று பரவலாகக் கருதப்பட்டது. இந்நிலைமை மக்கள் அதிகாரப் புரட்சிக்கு வித்திட்டது. மார்கோசும் அவரது கூட்டாளிகளும் ஹவாய்க்குத் தப்பியோடியதுடன் அக்கினோ சனாதிபதியாக அங்கீகரிக்கப்பட்டார்.
தற்கால வரலாறு
மீண்டும் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சனநாயகப் பாதைக்குத் திரும்பும் முயற்சியும் அரசாங்கப் புதிய சீர்திருத்தங்களும் சில காரணங்களால் தடைப்பட்டன. தேசிய கடன், அரசாங்கத்தின் ஊழல், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், பேரழிவுகள், தொடர்ச்சியான பொதுவுடைமைக்காரர்களின் கிளர்ச்சி, மற்றும் மோரோ பிரிவினைவாதிகளுடனான இராணுவ மோதல் என்பனவே அந்தக் காரணங்கள் ஆகும். கொரசோன் அக்கினோவின் நிர்வாகம், சூன் 1991 இல் பினாடுபோ மலையின் வெடிப்புடன் முடிவடைந்தது. அமெரிக்கத் தளங்களின் நீட்டிப்பு உடன்படிக்கையை நிராகரித்ததன் காரணமாக அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. நவம்பர் 1991 இல் கிளார்க் வான் படைத் தளமும் டிசம்பர் 1992 இல் சபிக் குடாவும் அலுவல்முறையாக அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறாக அமெரிக்க இராணுவப் படைகள் நாட்டில் நிலைகொண்டிருந்ததை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இதன் பொருளாதாரம் “ஆசியாவின் புலிப் பொருளாதாரம்” என அழைக்கப்பட்டது. மே 11 இல் நடைபெற்ற பிலிப்பைன் சனாதிபதித் தேர்தலில் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிடெல் வி. ராமோஸ் அவர்களின் நிர்வாகக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 6% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டது. இருந்தபோதிலும், 1996 இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியுடனான சமாதான உடன்படிக்கை, போன்ற அரசியல் உறுதிப்பாடும் பொருளாதார மேம்பாடுகளும் 1997 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாகக் கவனம் பெறாமல் போயின.
ராமோசிற்குப் பின் வந்தவரான, ஜோசப் எஸ்திராடா சூன் 1998 இல் பதவியேற்றார். அவர் பொருளாதார வளர்ச்சியை -0.6% இல் இருந்து 3.4% ஆக 1999 அளவில் 1997 ஆசிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மீழெழச்செய்தார். மார்ச் 2000 இல் அரசாங்கம் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிக்கு எதிராகப் போர்ப் பிரகடனத்தை அறிவித்ததுடன் கிளர்ச்சியாளர்களின் தலைமையகம் உட்பட அனைத்து முகாம்களையும் இல்லாது அழித்தொழித்தது. அபு சயாப் கிளர்ச்சியாளர்களுடன் தொடரும் மோதலுக்கு நடுவில், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஒரு முடக்கிவிடப்பட்ட பாரிய குற்ற பிரேரணையின் காரணமாக 2001 எட்சா புரட்சி மூலம் ஜோசப் எஸ்திராடாவின் நிர்வாகம் அகற்றப்பட்டது. சனவரி 20, 2001 இல் இருந்து அவரது உப சனாதிபதியான குளோரியா மகபகல்-அர்ரொயோ நிர்வாகத்தை ஏற்று தொடர்ந்து ஆட்சி செய்தார்.
அர்ரோயோவின் ஒன்பது ஆண்டு நிருவாகத்தில், பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2002 இல் 4% ஆக இருந்து 2007 இல் 7% ஆக வளர்ச்சியடைந்ததுடன், 2004 இல் எல்.ஆர்.டி லைன் 2 போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தைத் தவிர்க்க முடியும் படியும் இருந்தது. இருப்பினும், இக்காலத்தில் இலஞ்சமும் 2004 ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை மோசடி செய்தது தொடர்பான ஹெலோ கார்க்கி ஊழல் போன்ற அரசியல் ஊழல்களும் நிறைந்து காணப்பட்டன. நவம்பர் 23, 2009 இல் இடம்பெற்ற, மகுயின்டனவு படுகொலை 34 பத்திரிகையாளர்களின் இறப்புக்கு வழிவகுத்தது.
2010 தேசியத் தேர்தலில் பெனிக்னோ அக்கீனோ III வெற்றிபெற்றதுடன் பிலிப்பைன்சின் 15 ஆவது சனாதிபதியாகச் சேவைபுரிகின்றார். இவர் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது வயதுகுறைந்த நபராகவும் முதலாவது திருமணமாகாதவராகவும் விளங்குகின்றார். முன்னைய ஆண்டுகளின் போது, ஒக்டோபர் 15, 2012 இல் பாங்சமொரோ தொடர்பான கட்டமைப்பு உடன்பாட்டைக் கைச்சாத்திட்டதுடன், இது பாங்சமொரோ என்ற ஒரு தன்னாட்சி அரசியல் அமைப்பு உருவாக முதற்படியாக அமைந்தது. இருந்த போதிலும், கிழக்கு சபா மற்றும் தென் சீனக் கடற் பிராந்தியங்களில் மோதல்கள் தீவிரமடைந்தன. நாட்டின் பொருளாதாரம் குறிப்பாக 2013 இல் சிறப்பாகச் செயற்பட்டது. 2013 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% வளர்ச்சியடைந்ததுடன் ஆசியாவின் 2 ஆவது அதிவேகமானதாகக் காணப்பட்டது. நாட்டின் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட, பொதுவாக கே–12 நிகழ்ச்சித்திட்டம் (K–12 program) என அழைக்கப்படும் 2013 இன் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டத்தை, மே 15, 2013 இல் அக்கீனோ கைச்சாத்திட்டார். நவம்பர் 8, 2013 இல் சூறாவளி ஹையான் நாட்டைத் தாக்கியதுடன், நாட்டைக், குறிப்பாக விசயன் பிராந்தியத்தைப் பெரிதும் பேரழிவிற்கு உட்படுத்தியது.
அரசியல்
பிலிப்பைன்ஸ், ஜனாதிபதி முறையைக் கொண்ட, அரசியலமைப்புக் குடியரசு வடிவில் அமைந்த, ஒரு சனநாயக அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாகச் செயற்படும் முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதியைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள், ஓர் ஒற்றையாட்சி அரசாக நிர்வகிக்கப்படுகின்றது. ராமோசின் நிர்வாகத்தில் இருந்து கூட்டாட்சி, ஓரவை, அல்லது நாடாளுமன்ற அரசாங்கமாக அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நாட்டினுடைய தலைவராகவும் அரசாங்கதின் தலைவராகவும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் சனாதிபதி செயற்படுகின்றார். சனாதிபதி ஆறு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அவரது காலத்தில் அமைச்சரவையை நியமிப்பதுடன் அதற்குத் தலைமையும் வகிக்கின்றார். பிலிப்பைன்சின் இரு அவைகளைக் கொண்ட காங்கிரசில், ஆறு வருட காலத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செனட் சபை மேலவையாகவும், மூன்று வருட காலத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சபை கீழவையாகவும் சேவையாற்றுகின்றன. செனட் சபையின் உறுப்பினர்கள் (24 பேர்) நாட்டின் அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் சட்டமன்ற மாவட்டங்களிலில் இருந்தும் துறைவாரியான பிரதிநிதித்துவத்தின் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நீதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் தலைமையில் அதிகாரியான பிரதம நீதியரசரும், நீதித்துறை மற்றும் வழக்கறிஞர் மன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளிலிருந்து சனாதிபதியால் நியமிக்கப்பட்ட 14 இணை நீதிபதிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
பன்னாட்டு உறவுகள்
பிலிப்பைன்சின் பன்னாட்டு உறவுகள், மற்றைய நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளையும், நாட்டின் வெளியே வாழும் 11 மில்லியன் வெளிநாட்டுப் பிலிப்பினோக்களின் நல்வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய மற்றும் அதன் செயற்படும் அங்கத்தவர் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அங்கத்தவர்களுள் ஒருவராகப் பிலிப்பைன்ஸ் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கார்லஸ் பி. ரொமுலோ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பிலிப்பைன்சானது மனித உரிமைகள் ஆணையத்தின் ஆர்வம்மிகு உறுப்பினராக உள்ளதுடன், குறிப்பாகக் கிழக்குத் திமோரில் சமாதானப் பாதுகாப்புப் பணிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையில் ஊறுப்பு நாடாக இருப்பதற்கு மேலதிகமாக, இந்நாடானது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை நிறுவிய மற்றும் அதன் தற்போதைய சுறுசுறுப்பான உறுப்பினராகவும் இருக்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தவும் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிலிப்பைன்ஸ் பல ஆசியான் மாநாடுகளை நடத்தியதுடன் இவ்வமைப்பின் வழிகாட்டல் மற்றும் கொள்கைகளை அமைப்பதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளராகச் செயற்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவுடன் பெறுமதியான உறவுகளைக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் பனிப்போர் காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் ஐக்கிய அமெரிக்காவை ஆதரித்ததுடன் இது ஒரு முக்கிய நேட்டோ அல்லாத கூட்டணி ஆகும். இவ்வாறாக நல்லெண்ண வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும், சபிக் குடா, கிளார்க் விமான தளம் ஆகியவற்றில் தற்போதும் முன்னாள் அமெரிக்க இராணுவ தளங்கள் இருத்தல், மற்றும் அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள வருகை படைகள் ஒப்பந்தம், தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் அலுவல்முறையில் நிதி மற்றும் வளர்ச்சி உதவியில் பாரிய பங்களிப்புச்செய்கின்ற நாடான சப்பான், ஒரு நட்பு நாடாகக் கருதப்படுகின்றது. இருந்தபோதிலும் ஆறுதலளிக்கும் பெண்களின் அவல நிலை போன்ற வரலாற்று ரீதியான அழுத்தங்கள் இன்னமும் இருக்கின்றன. இரண்டாம் உலக போர் நினைவுகளால் ஏற்பட்ட பகையணர்வு தற்போது மிகவும் குறைந்துள்ளது.
மற்ற நாடுகளுடன் உள்ள உறவும் பொதுவாக நல்ல நிலையில் இருக்கின்றது. மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஜனநாயக விழுமியத்துடனான எளிதான உறவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள அதேவேளை பொருளாதார அக்கறையுடன் உதவுதல் என்பவற்றின் மூலம் மற்றைய வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுடன் உறவைப் பேணுகின்றது. வரலாற்று ரீதியான பிணைப்புக்கள் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகள் என்பன எசுப்பானியாவுடனான உறவில் ஒரு பாலமாகச் செயற்படுகின்றன. உள்நாட்டு முறைகேடு மற்றும் வெளிநாட்டு பிலிப்பினோ தொழிலாளர்களைப் போர் பாதித்தல் போன்ற இடர்கள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் நட்பு ரீதியாக உள்ளன என்பது, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பிலிப்பினோக்கள் தொடர்ச்சியாக வேலைசெய்துகொண்டு அங்கு வாழ்வதிலிருந்து தெளிவாகின்றது.
முன்பு இருந்தது போன்று இனிமேல் பொதுவுடைமை முறையில் அச்சுறுத்தல் இல்லை என்பதால், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையே 1950 களில் ஏற்பட்ட பகையுணர்வு குறைந்து உறவுகள் தற்போது பெரிதும் மேம்பட்டுள்ளது. தாய்வான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஸ்பிரட்லி தீவுகள், மற்றும் சீனாவின் செல்வாக்கு விரிவடைதல் தொடர்பான கவலைகள் போன்றவை இருப்பதால் சீனாவுடனான உறவை அதிக எச்சரிக்கையை கொண்டு பேணுகிறது. சமீபத்திய வெளிநாட்டு கொள்கைகள், அதன் தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆசிய பசிபிக் அண்டை நாடுகளுடனான பொருளாதார உறவுகளைப் பற்றியே பெரும்பாலும் இருந்து வருகின்றது.
கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS), ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) இலத்தீன் ஒன்றியம், குழு 24, மற்றும் அணிசேரா இயக்கம் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸ் ஆர்வம் மிக்க உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றது. இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதன் மூலம், இசுலாமிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தப் பிலிப்பைன்ஸ் முயன்று வருகின்றது.
படைத்துறை
பிலிப்பைன்சின் பாதுகாப்பு பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளின் மூலம் கையாளப்படுகிறது, இவ்வமைப்பு வான் படை, தரைப்படை, கடற்படை (கடற்படைச் சிறப்புப் பிரிவு உட்பட) என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தற்போது, தன்னார்வப் படைகளால் பிலிப்பைன்சின் ஆயுதப் படைகளின் மனித ஆற்றல் நிரப்பப்படுகிறது, அதாவது ஆட்சேர்ப்பு மூலம் தன்னார்வலர்களை அதன் சிப்பாய்களாகக் கையகப்படுத்துகின்றது. இருந்தபோதிலும், பிலிப்பைன்சின் அரசியலமைப்பின் விதி II இன் பிரிவு 4 இல் குறிப்பிட்டுள்ளபடி கட்டாய இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளல் சாத்தியமானது. குடிமக்கள் பாதுகாப்பானது, உள்துறை மற்றும் உள்ளூர் அரசாங்கத் திணைக்களத்தின் (DILG) கீழ் இயங்கும் பிலிப்பைன் தேசியக் காவல்துறையால் கையாளப்படுகின்றது.
முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதியில் மிகப்பெரிய பிரிவினைவாத அமைப்பான மோரோ தேசிய விடுதலை முன்னணி தற்போது அப்பகுதியின் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் செயற்படுத்துகின்றது. குறிப்பாக மின்டனவுவின் தெற்குத் தீவுகளில் இதர போராளி குழுக்களான மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி, பொதுவுடைமை புதிய மக்கள் இராணுவம், மற்றும் அபு சயாவ் போன்றவை இன்னும் உலவிக்கொண்டிருப்பதுடன் பணத்திற்காக வெளிநாட்டவரைக் கடத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றன. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பாதுகாப்பின் காரணத்தால் அண்மைய ஆண்டுகளில் இவ்வியக்கங்களின் நடமாட்டம் இப்பகுதியில் வெகுவாகக் குறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரிலிருந்து பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் நேச நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை 1951 இல் கைச்சாத்திடப்பட்டது. பிலிப்பைன்ஸ் பனிப்போர்க் காலத்தில் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவளித்ததுடன் கொரிய மற்றும் வியட்நாம் போர்களிலும் பங்கு பெற்றது. பிலிப்பைன்ஸ் தற்போது செயற்பாட்டிலில்லாத சீட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இவ்வமைப்பு நேட்டோவைப் போன்று சேவையாற்றியதுடன் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பாக்கிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்காவை உள்ளடக்கியிருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு ஆதரவான கூட்டணியின் ஒரு உறுப்பு நாடாக இருந்து ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது.
நிர்வாகப் பிரிவுகள்
பிலிப்பைன்ஸ் லூசோன், விசயாஸ், மற்றும் மின்டனவு என மூன்று தீவுக்கூட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை 17 பிராந்தியங்களாகவும், 81 மாகாணங்களாகவும், 144 நகரங்களாகவும், 1,491 நகரசபைகளாகவும், 42,028 பரங்கய்களாகவும் மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, குடியரசுச் சட்டம் எண். 5446 இன் பகுதி 2, பிலிப்பைன் தீவுக் கூட்டத்தைச் சுற்றியுள்ள பிராந்தியக் கடல் வரையறை சபாவின் கிழக்கு பகுதி மீது தாக்கம் செலுத்தாது என்பதனை வலியுறுத்துகின்றது.
புவியியல்
பிலிப்பைன்சானது 7,107 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டமாகும். உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளடங்கலாக இதன் மொத்தப் பரப்பளவு அண்ணளவாக 300,000 சதுர கிலோமீட்டர்கள் (115,831 sq mi) ஆகும். அத்துடன் 36,289 கிலோமீட்டர்கள் (22,549 mi) நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட பிலிப்பைன்ஸ், உலகின் ஐந்தாவது நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இது 116° 40′, மற்றும் 126° 34′ கிழக்கு நெடுங்கோட்டிற்கும் 4° 40′ மற்றும் 21° 10′ வடக்கு அகலக்கோட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது. பிலிப்பைன்சின் எல்லைகளாக, கிழக்கே பிலிப்பைன் கடலும், மேற்கே தென் சீனக் கடலும், தெற்கே செலேபெஸ் கடலும் அமைந்துள்ளன. போர்னியோ தீவுகள் தென்கிழக்கில் சில நூறு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுடன் சரியாக வடக்குத் திசையில் தாய்வான் அமைந்துள்ளது. மொலுக்காஸ் மற்றும் சுலாவெசி ஆகிய தீவுகள் தென்-தென்மேற்கில் அமைந்துள்ளதுடன் பிலிப்பைன்சின் கிழக்கில் பலாவு அமைந்துள்ளது.
இங்குள்ள மலைப்பாங்கான தீவுகளில் பெரும்பாலானவை வெப்பமண்டல மழைக்காடுகளை உடையவை. ஆரம்பத்தில் அவை எரிமலையாக இருந்துள்ளன. இத்தீவுகளில் உள்ள மிக உயரமான மலையாக அப்போ மலை விளங்குகின்றது. இது கடல் மட்டத்திற்கு மேல் 2,954 மீட்டர்கள் (9,692 ft) உயரத்தில், மின்டனவு தீவில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் ஆழியில் உள்ள கலத்தியா ஆழமே இந்நாட்டின் மிக ஆழமான இடமாகவும், உலகின் மூன்றாவது ஆழமான இடமாகவும் உள்ளது. இந்த ஆழி பிலிப்பைன் கடலில் அமைந்துள்ளது.
மிக நீளமான ஆறாக வடலூசோனில் அமைந்துள்ள ககயான் ஆறு விளங்குகின்றது. தலைநகரான மணிலா அமைந்துள்ள மணிலா விரிகுடா, பிலிப்பைன்சின் மிகப்பெரிய ஏரியாகிய லகுனா டி பே உடன் பாசிக் ஆற்றினால் இணைக்கப்பட்டுள்ளது. சபிக் விரிகுடா, டவாவோ வளைகுடா, மற்றும் மோரோ வளைகுடா ஆகியவை இங்குள்ள ஏனைய முக்கிய விரிகுடாக்கள் ஆகும். சமர் மற்றும் லெய்ட்டி தீவுகளை பிலிப்பைன்சிலிருந்து சான் யுவானிக்கோ நீரிணை பிரிக்கின்ற போதிலும் அதன் குறுக்காக அமைந்துள்ள சான் யுவானிக்கோ பாலத்தின் மூலம் இவை இணைக்கப்பட்டுள்ளன.
பசுபிக் நெருப்பு வளையத்தின் மேற்கு எல்லைப்புறத்தின் மீது அமைந்துள்ளமையால் பிலிப்பைன்சில் அடிக்கடி பூமியதிர்ச்சி மற்றும் எரிமலை வெடிப்புக்கள் நிகழ்கின்றன. பிலிப்பைன்சிற்குக் கிழக்கில் பிலிப்பைன் கடலில் அமைந்துள்ள பென்ஹாம் மேட்டுநிலம் துரிதமாக நில அடுக்குகள் கீழ் அமிழும் கடலுக்கடியிலுள்ள பிரதேசமாகும். கிட்டத்தட்ட 20 நிலநடுக்கங்கள் தினமும் பதிவு செய்யப்படுகின்ற போதிலும் பெரும்பாலானவை வலுவற்றவை ஆகையால் அவை உணர முடியாதவையாக உள்ளன. 1990 லூசோன் பூகம்பமே இறுதியாக ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியாகும்.
மயோன் எரிமலை, பினாடுபோ மலை, மற்றும் தால் எரிமலை ஆகியவை இன்றும் செய்யற்பாட்டிலுள்ள எரிமலைகளாக உள்ளன. 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் ஏற்பட்ட பினாடுபோ மலையின் எரிமலை வெடிப்பே 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பெரிய, தரையில் எற்பட்ட எரிமலை வெடிப்பாக உள்ளது. இங்குள்ள அனைத்துக் குறிப்பிடத்தக்க புவியியல் அம்சங்களும் அழிவை சார்ந்தவையாக இல்லை. புவியியல் தொந்தரவுகளற்ற அமைதியான மரபுரிமைத் தலமாக புவேர்டோ பிரின்செசா எனப்படும் பூமிக்கு அடியிலுள்ள ஆறு விளங்குகின்றது. இப்பிரதேசம் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்கும் ஒரு வாழ்விடமாக இருக்கின்றது. மேலும் ஒரு முழுமையான மலை முதல் கடல் வரை பல்வேறுவகையான சூழலமைப்பைக் கொண்டுள்ளதுடன் ஆசியாவில் மிக முக்கியமான காடுகள் சிலவும் இங்கு அமைந்துள்ளன.
இத்தீவுகளில் உள்ள எரிமலைத் தன்மை காரணமாக இங்கு கனிமப் படிமங்கள் ஏராளமாக உள்ளன. தென்னாபிரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக தங்கப் படிமங்கள் கிடைக்கும் இடமாக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன் உலகின் மிகப்பாரிய செப்புப் படிமங்கள் உள்ள இடமாகவும் உள்ளது. இங்கு நிக்கல், குறோமைட்டு மற்றும் துத்தநாகம் ஆகியவையும் பேரளவில் கிடைக்கின்றன. இவ்வாறு இருந்த போதிலும்கூட மோசமான நிர்வாகம், அதிக மக்கள் தொகை மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வின்மை ஆகிய காரணங்களால் இக்கனிம வளங்கள் பாரியளவில் தோண்டி எடுக்கப்படாத நிலையில் உள்ளன. பிலிப்பைன்சில் எரிமலைகளின் விளைபொருளாகிய புவிவெப்பச் சக்தியைப் பயனுள்ள வகையில் வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய புவிவெப்பச் சக்தி உற்பத்தியாளராக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன், 18% வீதமான நாட்டின் மின்சாரத் தேவைகள் புவிவெப்பச் சக்தியின் மூலம் பூர்த்திசெய்யப்படுகின்றது.
வனவிலங்குகள்
பிலிப்பைன்சின் மழைக்காடுகளும் அதன் தொடர்ச்சியான கடலோரப் பகுதிகளும், பலவிதமான பறவைகள், தாவரங்கள், விலங்குகள், மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் என்பவற்றிற்கு வாழ்விடமாக உள்ளன. பிலிப்பைன்ஸ், மிகவும் உயிரியல் பன்முகத்தன்மை மிக்க முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளதுடன் ஓரலகுப் பகுதியில் அதிக உயிர்ப் பல்வகைமை உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில், 100 வகையான பாலூட்டிகளும் 170 வகையான பறவைகளும் உள்ளடங்கலாகக் கிட்டத்தட்ட 1,100 வகையான தரைவாழ் முள்ளந்தண்டுளிகள் பிலிப்பைன்சில் இனங்காணப்பட்டுள்ளன. பிலிப்பைன்சானது உலகிலேயே மிக உயர்ந்த விகிதத்தில் உயிரினங்களின் கண்டுபிடிப்பு நிகழும் நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கடந்த பத்து வருடங்களில் பதினாறு புதிய பாலூட்டி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பிலிப்பைன்சிற்கு உரித்தான உயிரினங்களின் விகிதம் உயர்ந்துள்ளதுடன் இதே போன்று மேலும் உயரக்கூடிய சாத்தியங்களும் உள்ளன.
மலைப்பாம்பு மற்றும் நாகம் போன்ற பாம்புகள், உவர்நீர் முதலைகள், தேசியப் பறவையாக விளங்கும் பிலிப்பைன் கழுகு போன்ற இரைதேடியுண்ணும் பறவைகள் என்பவற்றைத் தவிர்த்துப் பிலிப்பைன்சில் பெரிய இரைதேடியுண்ணும் உயிரினங்கள் இல்லை. பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மிகப் பெரிய சிறைப்பிடிக்கப்பட்ட முதலையாக, உள்நாட்டில் லொலொங் என அழைக்கப்படும், தெற்குத் தீவாகிய மின்டனோவில் பிடிக்கப்பட்ட முதலை விளங்குகின்றது.
ஏனைய பூர்வீக விலங்குகளில் போகொலில் உள்ள ஆசிய மரநாய், ஆவுளியா, பிலிப்பைன் டார்சியர் போன்றவயும் உள்ளடங்குகின்றன. இங்குள்ள கிட்டத்தட்ட 13,500 வகையான தாவரங்களுள், 3,200 வகைகள் இத்தீவுகளுக்கு மட்டும் உரித்தானவை. பல்வேறு அரிய வகையான ஆர்க்கிட் மற்றும் ரபிளீசியா என்பவை உள்ளடங்கலாகப் பல்வேறு தாவர வகைகள் பிலிப்பைன் மழைக்காடுகளில் உள்ளன.
பிலிப்பைன்சின் கடற்பரப்பானது 2,200,000 சதுர கிலோமீட்டர்கள் (849,425 sq mi) அளவில் சூழ்ந்திருப்பதுடன் தனித்துவம் மிக்க மற்றும் பல்வேறுபட்ட கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் இடமாகவும், பவள முக்கோணத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பவளப்பாறைகளின் மொத்த எண்ணிக்கை அண்ணளவாக 500 எனவும், கடல் மீன் இனங்களின் மொத்த எண்ணிக்கை அண்ணளவாக 2,400 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய பதிவுகள் மற்றும் இனங்களின் கண்டுபிடிப்புகள் என்பன தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுதல், பிலிப்பைன்சின் கடல் வளங்களின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. சுலு கடலிலுள்ள துபட்டஹா பவளப்பாறை 1993 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிலிப்பைன் நீர்நிலைகளும் முத்துக்கள், நண்டுகள், மற்றும் கடற் தாவரங்களின் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக உள்ளன.
அடிக்கடி சட்டவிரோதமாக மரம் அறுப்பதன் விளைவாக ஏற்படும் காடழிப்பு, பிலிப்பைன்சில் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு, நாட்டின் மொத்த நிலப் பரப்பளவின் 70% ஆக இருந்த காடுகள், 1999 ஆம் ஆண்டு 18.3% ஆகக் குறைவடைந்துள்ளன. பல உயிரினங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், பிலிப்பைன்சும் ஒரு அங்கமாக உள்ள தென்கிழக்காசியா, 21 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் 20% ஆன பேரழிவு மிக்க அழிவு விகிதத்தை எதிர்கொள்ளும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கொன்சர்வேசன் இன்டர்னசனல் என்ற அமைப்பு பாரிய உயிர்ப்பல்வகைமை கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ள பிலிப்பைன்சை, உலகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளது.
காலநிலை
பிலிப்பைன்ஸ் ஒரு வெப்பமண்டல கடற் காலநிலையைக் கொண்டுள்ளதுடன் இது வழக்கமாக வெப்பமாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் உள்ளது. இங்கு மூன்று வகையான காலநிலைகள் காணப்படுகின்றன. அவையாவன: உலர் வெப்பப் பருவகாலமாகிய டக்-இனிட் அல்லது டக்-அரோ எனப்படும் மார்ச் தொடங்கி மே வரை இடம்பெறும் கோடைக்காலம்; டக்-உலான் எனப்படும் சூன் தொடங்கி நவம்பர் வரை இடம்பெறும் மழைக்காலம்; டக்-லமிக் எனப்படும் டிசம்பர் தொடங்கி பெப்ரவரி வரை இடம்பெறும் உலர் குளிர்காலம் என்பனவாகும். மேயில் இருந்து அக்டோபர் வரை வீசும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று ஹபகட் என்றும், நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை வீசும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றாகிய உலர் காற்று அமிஹான் என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்பநிலை பொதுவாக 21 °C (70 °F) முதல் 32 °C (90 °F) ஆகக் காணப்படுவதுடன் இது பருவத்தைப் பொறுத்துக் குளிர்ந்ததாக அல்லது சூடானதாக மாறும். மிகக் குளிர்ந்த மாதமாக சனவரியும், மிக வெப்பமான மாதமாக மேயும் காணப்படுகின்றன.
சராசரி வருடாந்த வெப்பநிலை கிட்டத்தட்ட 26.6 °C (79.9 °F) ஆக உள்ளது. இங்கு வெப்பநிலையைக் கருத்தில் கொள்ளும்போது, அகலக்கோடு மற்றும் நெடுங்கோடு என்ற அடிப்படையில் இட அமைவு குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தும் காரணியாக் காணப்படவில்லை. நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, அல்லது மேற்குப் பகுதியில், கடல் மட்டத்தில் உள்ள வெப்பநிலை ஒரேயளவாக உள்ளது. ஆனால் அமைவிடத்தின் உயரம் வெப்பநிலையில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர்கள் (4,900 ft) உயரத்திலுள்ள பாகியோ என்ற இடத்தின் சராசரி வருடாந்த வெப்பநிலை 18.3 °C (64.9 °F) ஆகக் காணப்படுவதுடன், வெப்பம் மிகுந்த கோடை காலத்தில் இது ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது.
பிலிப்பைன்ஸ் சூறாவளிப் பட்டையில் அமைந்துள்ளதால், சூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பெரும்பாலான தீவுகளில் வருடாந்தம் பருவ மழை மற்றும் இடி மின்னல் என்பன ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட பத்தொன்பது சூறாவளிகள் பிலிப்பைன்சிற்கு உரித்தான கடற் பிராந்தியத்தில் ஏற்படுவதுடன், அவற்றுள் எட்டு அல்லது ஒன்பது சூறாவளிகள் கரையை அடைகின்றன. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியானது மலைப்பாங்கான கிழக்கு கடற்கரை பகுதியில் கிட்டத்தட்ட 5,000 மில்லிமீட்டர்கள் (200 in) ஆகவும், சில மழைமறைவுப் பள்ளத்தாக்குகளில் குறைவாக 1,000 மில்லிமீட்டர்கள் (39 in) என்ற அளவிலும் உள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் தாக்கம் செலுத்திய மிகவும் ஈரப்பதன் மிகுந்த வெப்ப மண்டலச் சூறாவளியாக சூலை 1911 சூறாவளி விளங்குவதுடன் இதன்போது பாகியோவில் 24 மணித்தியால நேரத்தில் 1,168 மில்லிமீட்டர்கள் (46.0 in) அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பக்யோ என்பது வெப்பமண்டலச் சூறாவளிக்குப் பிலிப்பைன்சில் வழங்கப்படும் பெயராகும்.
பொருளாதாரம்
2014 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியான $289.686 பில்லியனுடன், பிலிப்பைன்சின் தேசியப் பொருளாதாரம் உலகின் 39 ஆவது பாரிய பொருளாதாரமாக உள்ளது. குறை கடத்திகளும் மின்னணுத் தயாரிப்புகளும், போக்குவரத்துக் கருவிகள், ஆடையணிகள், செப்புத் தயாரிப்புக்கள், பெட்ரோலியப் பொருட்கள், தேங்காய் எண்ணெய், மற்றும் பழங்கள் ஆகியவை முதன்மையான ஏற்றுமதிப் பொருட்களுக்குள் உள்ளடங்குகின்றன. அத்துடன் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, ஹொங்கொங், செருமனி, தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முதன்மையான வர்த்தகப் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நாட்டின் நாணய அலகாகப் பிலிப்பைன் பெசோ (₱ அல்லது PHP) விளங்குகின்றது. பிலிப்பைன்ஸ் ஒரு நடுத்தர சக்தி மிக்க நாடாகும். புதிதாகத் தொழில்மயமாக்கப்பட்ட நாடு என்ற வகையில் பிலிப்பைன்சின் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாகக் கொணட பொருளாதாரத்திலிருந்து சேவைகள் மற்றும் உற்பத்திகளை அடிப்படையாகக் கொணட பொருளாதாரமாக மாறிவருகின்றது. கிட்டத்தட்ட 40.813 மில்லியனாகவுள்ள நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 32% ஆனோர் விவசாய துறையில் இருக்கும் போதிலும், இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% ஆன பங்களிப்பையே வழங்குகின்றனர். தொழில் துறையில் இருக்கும் 14% ஆன தொழிலாளர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆன பங்களிப்பை வழங்குகின்றனர். இதேவேளை 47% ஆன சேவைத் துறையைச் சார்ந்தோர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56% ஆன பங்களிப்பை வழங்குகின்றனர்.
டிசம்பர் 14, 2014 இல் வேலைவாய்ப்பின்மை 6.0% ஆக உள்ளதுடன் 1.05 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் தேவைப்படுவதுடன், சூலை 2014 இல் 6.7% இருந்து தற்போது குறைவடைந்துள்ளது. இதேவேளை அடிப்படைத் தேவைகளுக்குக் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் மாதமளவில் பணவீக்க வீதம் 3.7% ஆக உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் மொத்த சர்வதேச இருப்புக்கள் $83.201 பில்லியனாக (அமெரிக்க டாலர்) உள்ளது. 2004 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 78% என உயர்வாக மதிப்பிடப்பட்டு அதிலிருந்து குறைவடைந்து மார்ச் 2014 இல் 38.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நாடு ஒரு நிகர இறக்குமதியாளராக உள்ள போதிலும் கடன் வழங்கும் நாடாகவும் உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஒரு முறை இந்நாடு கிழக்கு ஆசியாவில் சப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக செல்வம் நிறைந்த நாடாகக் கருதப்பட்டது. எனினும், 1960 களில் மற்ற நாடுகளின் பொருளாதாரம் பிலிப்பைன்சின் பொருளாதாரத்தை விட முன்னேற்றமடையத் தொடங்கியது. பிலிப்பைன்சின் பொருளாதாரம், சனாதிபதி பெர்டினாண்ட் மார்கோசின் சர்வாதிகாரத்தின் கீழ், தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் தேக்கம் கண்டது. மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளியல் பின்னடைவு ஆகிய காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் தேக்கநிலைக்கு போனது. 1990 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் திட்டத்திற்கு பின்னரே பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்பட்டது. 1997 ஆசிய நிதி நெருக்கடி பொருளாதாரத்தைப் பாதித்ததனால் பெசோவின் மதிப்பு நீடித்த சரிவைக் கண்டதுடன் பங்கு சந்தையும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் பிலிப்பைன்சின் சில ஆசிய அண்டை நாடுகள் பாதிக்கப்பட்ட அளவிற்கு அது ஆரம்பத்தில் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. இந்நிலை அரசாங்கத்தின் நிதித்துறைப் பழமைவாதத்தின் காரணத்தினாலும், பல தசாப்தங்களாக இருந்த கண்காணிப்பு மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி மேற்பார்வை என்பவற்றின் விளைவாகவும் ஏற்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சியின் விரைவான முடுக்கம் அதன் அண்டை நாடுகளின் பாரியளவு செலவினங்களுடன் ஒப்பிடுகையில் நன்னிலையில் உள்ளது. அதிலிருந்து முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருந்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% வளர்ச்சி கண்டுள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு 7.1% ஆக வளர்ச்சியடைந்தது, இதுவே மூன்று தசாப்தங்களில் வேகமான வளர்ச்சி ஆகும். 1966–2007 காலகட்டத்தில் தனிநபர் சராசரி வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.45% ஆக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தினை ஒரு முழுப் பிரதேசமாகக் கருதும் போது அது 5.96% ஆக உள்ளது. பிலிப்பைன்ஸ் மக்கள்தொகையில் 45% ஆனோரின் நாளாந்த வருமானம் $2 (அமெரிக்க டாலர்) இலும் குறைவாகவே உள்ளது.
பிலிப்பைன்சிற்கு ஏனைய முரண்பாடுகள் மற்றும் சவால்கள் இப்போதும் இருந்து வருகின்றன. இதன் பொருளாதாரம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை வெளிநாட்டு நாணய மூலமாகப் பரிமாறும் பணம் அனுப்புதலிலேயே பெரிதும் சார்ந்துள்ளது. பணம் அனுப்புதல் மூலம் 2010 இல் 10.4% மற்றும் 2012 இல் 8.6% தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறப்பட்டுள்ளது. இங்கு பிராந்திய வளர்ச்சி சமநிலையற்றதாக உள்ளது. லுசான் மற்றும் மணிலா பெருநகருக்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான வேறுபாடு இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஏனைய பகுதிகளின் செலவில் பெரும்பாலான புதிய பொருளாதார வளர்ச்சியை மணிலா பெருநகரே பெற்றுக்கொள்கின்றது. என்றாலும் அரசாங்கம் நாட்டின் பிற பகுதிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், சுற்றுலாத்துறை மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் போன்ற சேவைத் தொழில்கள், நாட்டின் வளர்ச்சிக்குச் சிறந்த வாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
அடுத்த பதினொரு பொருளாதாரங்களுள் பிலிப்பைன்சையும் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளடக்கியுள்ளது. ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகியவை முக்கிய பொருளாதாரப் போட்டியாளர்களாக எழுச்சிபெற்றுள்ளன. 2050 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்ஸ் உலகின் 14 ஆவது பாரிய பொருளாதாரமாக உருவெடுக்குமென கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பிட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்சின் பொருளாதாரம் உலகின் 16 ஆவது பாரிய பொருளாதாரமாகவும், ஆசியாவின் 5 ஆவது பாரிய பொருளாதாரமாகவும், தென்கிழக்காசியாவின் மிகப் பாரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்குமென ஏச்.எஸ்.பி.சி யும் கணக்கிட்டுள்ளது. உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு (WTO), பிலிப்பைன்சின் நகரான மன்டலுயொங்கைத் தலைமையகமாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி, கொழும்புத் திட்டம், ஜி-77, மற்றும் ஜி-24 ஆகிய ஏனைய குழுக்கள் மற்றும் நிறுவனங்களில் பிலிப்பைன்ஸ் அங்கத்துவம் வகிக்கின்றது.
போக்குவரத்து
பிலிப்பைன்சில் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஒப்பீட்டளவில் வளர்ச்சி குன்றியதாகக் காணப்படுகின்றது. இந்நிலை மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் சிதறிய புவியியல் அமைப்பைக் கொண்ட தீவுகளின் காரணமாக ஏற்பட்டுள்ள போதிலும், உட்கட்டமைபின் வளர்ச்சியில் அரசாங்கம் குறைவாக முதலீடு செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 2013 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செலவிடப்பட்டதுடன் இது மிகவும் குறைந்த அளவாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக, 213,151 கிலோமீட்டர்கள் (132,446 mi) நீளமான வீதிகள் நாட்டில் உள்ள போதிலும் இவற்றுள் 25.56% ஆனவையே செப்பனிடப்பட்டுள்ளன. பெனிக்னோ அக்கீனோ III இன் கீழான தற்போதைய நிர்வாகம் பல்வேறு திட்டங்களின் ஊடாக நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்புக்களை மேம்படுத்த முனைகின்றது. இருப்பினும், குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் பயணம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. பிரதான நகரங்களிலும் பட்டணங்களிலும் பேருந்துகள், ஜீப்னிகள், வாடகை வண்டிகள், மற்றும் மோட்டார் இணைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் எனப் பல போக்குவரத்து முறைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. 2007 இல், 5.53 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் காணப்பட்டதுடன், பதிவுகள் வருடாந்தம் 4.55% இனால் அதிகரித்துச் செல்கின்றன.
பிலிப்பைன்சில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல வான் வழிப் பயணம் முக்கியமான ஒரு தேர்வாக உள்ளது. பிலிப்பைன்சின் பொது வானூர்தி போக்குவரத்து ஆணையமானது வானூர்தி நிலையங்களை முகாமை செய்வதுடன், பாதுகாப்பான வான் பயணம் தொடர்பான கொள்கைகளைச் செயற்படுத்துகின்றது. 85 வானூர்தி நிலையங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. கிளார்க் சர்வதேச வானூர்தி நிலையத்துடன் நினோய் அக்கினோ சர்வதேச வானூர்தி நிலையம் (NAIA) மணிலா பெருநகரப் பகுதியில் சேவை செய்கின்றது. பிலிப்பைன் ஏர்லைன்ஸ், ஆசியாவிலுள்ள தற்போதும் உண்மையான பெயரில் இயங்கிவரும் மிகவும் பழமையான வணிக வானூர்தி நிறுவனமாக உள்ளதுடன், குறைந்த விலையில் சேவை வழங்கும் முன்னணி வானூர்தி நிறுவனமாக செபு பசுபிக் விளங்குகின்றது. இவ்விரு வானூர்தி சேவைகளுமே உள்ளூர் மற்றும் சர்வதேச பயணங்களுக்குச் சேவையாற்றும் முதன்மையான வானூர்தி சேவைகளாக விளங்குகின்றன.
டிசம்பர் 2007 அளவில் பிலிப்பைன்சின் வீதிகளும் நெடுஞ்சாலைகளும் தேசிய மற்றும் மாகாண நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைகள், இரண்டாம் தர மற்றும் நகரசபை வீதிகள் என 205,497 km (127,690 mi) நீளமான வீதிகளை உள்ளடக்கியிருந்தன. நெடுஞ்சாலைகளும் அதிவேக நெடுஞ்சாலைகளும் அதிகமாக லூசோன் தீவுகளில் உள்ளன. இங்கு லூசோன், சமர், லெய்டே, மற்றும் மின்டனவுவை இணைக்கும் ஆசிய நெடுஞ்சாலை 26, வட லூசோன் அதிவேக நெடுஞ்சாலை, தென் லூசோன் அதிவேக நெடுஞ்சாலை, மற்றும் சுபிக்–கிளார்க்–டார்லக் அதிவேக நெடுஞ்சாலை என்பன அமைந்துள்ளன.
பிலிப்பைன்சின் புகையிரதப் போக்குவரத்து, பயணிகள் மற்றும் சரக்குகளைப் முதன்மையான நகரங்களுக்கிடையில் பரிமாறவும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் மிக முக்கியமானதாக விளங்குகின்றது. பிலிப்பைன்சின் புகையிரத வலையமைப்பு, மணிலா பெருநகரப் பிராந்தியத்தில் சேவையாற்றும் மணிலா சிறிய புகையிரதப் போக்குவரத்து அமைப்பு (LRT-1 மற்றும் LRT-2) மற்றும் மணிலா மெட்ரோ புகையிரதப் போக்குவரத்து அமைப்பு (MRT-3), லூசோன் தீவுகளில் சேவையாற்றும் பிலிப்பைன் தேசிய புகையிரத சேவை (PNR), பனய் தீவுகளீல் முன்னர் சேவையாற்றித் தற்போது செயற்படாமல் இருக்கும் பனய் புகையிரத சேவை என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் முழுமையான தானியங்கிப் புகையிரதமான தானியக்க வழிகாட்டிப் போக்குவரத்து, நீண்ட இரு வகையில் அமைக்கப்படும் பேருந்தான கலப்பின மின்சார சாலைப் புகையிரதம், மற்றும் முழு அளவிலான பயணிகள் புகையிரதம் என மூன்று வகையான புகையிரத அமைப்புக்கள் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தீவுக் கூட்டமென்ற வகையில், தீவுகளுக்கிடையிலான படகுகள் முலமான போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. மணிலா, செபு, இலொய்லோ, டவாவோ, ககயன் டி ஒரோ, மற்றும் சம்பொவங்கா ஆகியன மும்முரமான துறைமுகங்களாக விளங்குகின்றன. பயணிகள் கலத்தின் ஊடாக பல்வேறு நகரங்களையும் பட்டணங்களையும் இணைக்கும் 2கோ டிரவல் மற்றும் சல்பிசியோ லைன்சு ஆகியன மணிலாவில் சேவை புரிகின்றன. 17 நகரங்களை உள்ளடக்கிய நெடுஞ்சாலைப் பிரிவுகள் மற்றும் படகுப் பாதைகள் ஒருங்கிணைக்கப்பட்ட 919-கிலோமீட்டர் (571 mi) நீளமான வலுவான குடியரசு கடல் நெடுஞ்சாலை (SRNH) 2003 இல் நிறுவப்பட்டது. பசிக் ஆற்றின் படகுச்சேவை, பசிக் ஆற்றையும் மரிகினா ஆற்றையும் உள்ளடக்கி, மணிலா, மகட்டி, மண்டலுயொங், பசிக் மற்றும் மரிகினா போன்ற இடங்களில் தரிப்பிடங்களைக் கொண்டு, பெருநகரின் முதன்மையான ஆறுகளில் செவை புரிகின்றது.
அறிவியலும் தொழினுட்பமும்
பிலிப்பைன்ஸ் அறிவியலிலும் தொழினுட்பத்திலும் முன்னேற்றமடையப் பல்வேறு முயற்சிகளைப் பின்பற்றுகின்றது. பிலிப்பைன்சில் அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான திட்டங்களின் ஒருங்கிணைப்புத் தொடர்பான வளர்ச்சிக்குப் பொறுப்பான நிறுவனமாக அறிவியல் மற்றும் தொழினுட்பத் திணைக்களம் விளங்குகின்றது. பிலிப்பைன்சில் அறிவியலின் பல்வேறு துறைகளில் பங்களித்தவர்களுக்கு பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளர் விருது வழங்கப்படுகின்றது. கல்மன்சி நிப், சொயாலக் மற்றும் வாழைப்பழ கெட்சப் போன்ற முறைப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் புகழடைந்த உணவுத் தொழினுட்ப வல்லுனரான மரியா ஒரோசா, எட்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து குழந்தை மருத்துவத்தில் முன்னோடியாகச் செயற்பட்ட துடிப்பான குழந்தை மருத்துவரான பே டெல் முண்டோ, அணுக்கரு மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை வழங்கியதால் “பிலிப்பைன்சின் அணுக்கரு மருத்துவத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட மருத்துவரான பவுலோ கம்போஸ், மா மரங்களில் மேலும் மலர்களை உருவாக்குவதற்கான முறையைக் கண்டுபிடித்ததற்காகப் புகழடைந்த கண்டுபிடிப்பாளரும் தோட்டக்கலை நிபுணருமான ரமொன் பர்பா போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பிலிப்பினோ அறிவியலாளர்களாக விளங்குகின்றனர்.
சூலை 1996 இல், மபுகே பிலிப்பைன்ஸ் செயற்கைக்கோள் கூட்டமைப்பிற்குச் சொந்தமான, நாட்டின் முதலாவது செயற்கைக்கோளான பலபா பி-2பி (Palapa B-2P) ஏவப்பட்டு ஆகஸ்ட் 1, 1996 இல் ஒரு புதிய சுற்றுவட்டப் பாதையை நோக்கி நகர்த்தப்பட்டதுடன் மபுகே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2016 அளவில் நாட்டின் முதலாவது நுண் செயற்கைக்கோளை ஏவுவதற்கான திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழினுட்பத் திணைக்களத்தால் சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. 1960 இல் நிறுவப்பட்ட, லொஸ் பனோஸ், லகுணாவில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு சர்வதேச சுயாதீன ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளடங்கலாகப் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இந்நிறுவனம் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உதவவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், புதிய நெல் இனங்கள் மற்றும் நெற்பயிர் முகாமைத்துவ நுட்பங்கள் தொடர்பான வளர்ச்சிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது.
தகவற் தொடர்பாடல்
பிலிப்பைன்ஸ், அதிநவீன கைபேசித் தொழிற்சாலையையும் மிகவும் அதிகமான பாவனையாளர்களையும் கொண்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்புதலானது ஒரு பிரபலமான தொடர்பாடல் வடிவமாகக் காணப்படுவதுடன், 2007 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தினமும் சராசரியாக ஒரு பில்லியன் குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டன. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கைபேசிப் பாவனையாளரகள் தமது கைபேசிகளை பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இதன் காரணமாகப் பிலிப்பைன்ஸ், நிதி பரிவர்த்தனைகளை கைபேசி வலையமைப்பினூடாக வழங்குவதில் வளரும் நாடுகளின் மத்தியில் முன்னணியில் உள்ளது. பி.எல்.டி.ரி (PLDT) என அழைக்கப்படும் பிலிப்பைன் தொலை தூர தொலைபேசி நிறுவனம் முன்னணி தகவற் தொடர்பாடற் சேவை வழங்குனராக விளங்குகின்றது. இதுவே இந்நாட்டிலுள்ள பாரிய நிறுவனமாகவும் விளங்குகின்றது. நாடெங்கிலுமுள்ள அனைத்துத் தொலைத்தொடர்பு சேவைகளின் மேற்பார்வை, வழக்குத்தீர்ப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பான நிறுவனமாகத் தேசியத் தொலைத்தொடர்பு ஆணையம் விளங்குகின்றது. பிலிப்பைன்சில் அண்ணளவாக 383 ஏ.எம் மற்றும் 659 எப்.எம் (பண்பலை) வானொலி நிலையங்களும், 297 தொலைக்காட்சி மற்றும் 873 கம்பி வட தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. மார்ச் 29, 1994 இல் நாட்டின் இணையம் பி.எல்.டி.ரி (PLDT) ஆல் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட திசைவியின் உதவியுடனும் 64 கிலோபிட்/நொடி இணைப்பின் வழியாகக் கலிபோர்னியா வேகத்தொடர்பாடல் திசைவியுடனும் நேரலையாக்கப்பட்டது. பிலிப்பைன்சில் இணைய ஊடுருவல்கள் அண்ணளவாகக் குறைந்தது 2.5 மில்லியனில் இருந்து கூடியது 24 மில்லியன் மக்கள் வரை பரவலாகக் காணப்படுகின்றது. சமூக வலைத்தளப் பாவனையும் காணொளிகளைப் பார்வையிடலும் அடிக்கடி இடம்பெறும் இணைய நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன.
சுற்றுலாத்துறை
போக்குவரத்தும் சுற்றுலாத்துறையும் பிலிப்பைன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1% பங்களிப்பதுடன், பொருளாதாரத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகவும் உள்ளன. 2013 இல் மொத்த வேலைவாய்ப்பில் 3.2 சதவீதமான 1,226,500 வேலைவாய்ப்புக்கள் இத்துறையின் மூலம் கிடைக்கின்றன. சுற்றுலாத்துறை 2013 இல் $4.8 (அமெரிக்க டாலர்) பில்லியனாக வளர்ந்துள்ளது. 2,433,428 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் 2014 சனவரியிலிருந்து சூன் வரை வருகை தந்துள்ளதுடன், இவ்வெண்ணிக்கை 2013 இல் இதே காலப்பகுதியில் இருந்ததைவிட 2.22% அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தென் கொரியா, சீனா, மற்றும் சப்பானிலிருந்து 58.78% ஆகவும், அமெரிக்காவிலிருந்து 19.28% ஆகவும், ஐரோப்பாவிலிருந்து 10.64% ஆகவும் உள்ளது. சுற்றுலாத்துறைத் திணைக்களம் சுற்றுலாத்துறையின் முகாமைத்துவத்திற்கும் மேம்பாட்டிற்கும் பொறுப்பான ஆளுகைக் குழுவாக விளங்குகின்றது. சனவரி 6, 2012 இல் சுற்றுலாத்துறைத் திணைக்களத்தின் “பிலிப்பைன்சில் மேலும் கேளிக்கைகள் உள்ளன” (It’s More Fun in the Philippines) என்ற புதிய முழக்கம் (சுலோகம்) பெயரிடப்பட்டது. வார்க் 100 இன் படி இம்முழக்கம் சிறந்த சந்தைப்படுத்தல் பரப்புரைகளில் உலகின் மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டது.
7,107 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் என்ற வகையில், பிலிப்பைன்ஸ் பல்வேறு கடற்கரைகள், குகைகள், மற்றும் பாறை அமைப்புக்களைக் கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களுள், 2012 இல் டிரவல் + லெசர் (Travel + Leisure) சஞ்சிகையால் சிறந்த தீவாகப் பெயரிடப்பட்ட பொரகாயில் உள்ள வெள்ளை மணல் கடற்கரை, மணிலாவில் அமைந்துள்ள எஸ் எம் மால் ஒஃப் ஆசியா, விழாக்கால பெரும் வளாகம்(பெஸ்டிவல் சுப்பர்மால்) உள்ளிட்ட வணிகக்கடை வளாகங்கள், இபுகாவோவிலுள்ள பனவுவே நெல் விளைநிலம், விகனிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய நகரம், பொகோலிலுள்ள சாக்கலேட் குன்றுகள், செபுவிலுள்ள மகலனின் சிலுவை, விசயாசிலுள்ள துப்பட்டகா பவளப்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள ஏனைய இடங்களும் உள்ளடங்குகின்றன.
மக்கள் வகைப்பாடு
1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்சில் மக்கள்தொகை அண்ணளவாக 28 மில்லியனால் அதிகரித்துள்ளது, இது 45% வளர்ச்சியாகும். பிலிப்பைன்சின் முதலாவது அலுவல்முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1877 இல் இடம்பெற்றதுடன் மக்கள்தொகை 5,567,685 ஆகப் பதிவாகியது. 2013 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் 100 மில்லியன் மக்கள்தொகையுடன், உலகின் 12 ஆவது மக்கள்தொகை கூடிய நாடாகவும் உள்ளது.
கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சின் அரைவாசி மக்கள் லூசோன் தீவிலேயே வாழ்கின்றனர். 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரை 3.21% ஆகக் காணப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1.95% ஆகக் குறைவடைந்தமை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. மக்கள்தொகையின் சராசரி வயது 22.7 வருடங்களாக உள்ளதுடன் 60.9% ஆனோர் 15 இற்கும் 64 இற்கும் இடைப்பட்ட வயதினராகக் காணப்படுகின்றனர். பிறப்பின் பொது ஆயுள் எதிர்பார்ப்பு 71.94 வருடங்களாக உள்ளதுடன், பெண்களுக்கு 75.03 வருடங்களாகவும் ஆண்களுக்கு 68.99 வருடங்களாகவும் உள்ளது.
கிட்டத்தட்ட 12 மில்லியன் பிலிப்பினோக்கள் பிலிப்பைன்சிற்கு வெளியில் வாழ்கின்றனர். 1965 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் குடியேற்ற சட்டங்கள் தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பினோ வம்சாவழியைக் கொண்ட அமெரிக்க மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 12 மில்லியன் பிலிப்பினோக்கள் கடல்கடந்த நாடுகளில் வாழ்கின்றனர்.
அலுவல்முறையான கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சின் மக்கள்தொகை சூலை 27, 2014 இல் 100 மில்லியனை எட்டியதுடன், இவ்வெண்ணிகையை அடைந்த 12 ஆவது நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது.
நகரங்கள்
மணிலா பெருநகரப் பகுதியே பிலிப்பைன்சிலுள்ள 12 வரையறுக்கப்பட்ட பெருநகரப்பகுதிகளில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாக உள்ளதுடன் உலக அளவில் 11 ஆவது அதிக மக்கள் தொகையைக் கொண்டதாக விளங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 11,553,427 ஆகக் காணப்பட்டதுடன், தேசிய மக்கள்தொகையில் 13% ஐ உள்ளடக்கியிருந்தது. மணிலா பெருநகரப் பகுதியின் புறநகரப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் மணிலாவுக்கு அடுத்துள்ள மாகாணங்களின் (புலக்கன், கவிட்டே, இலகுணா, மற்றும் றிசால்) பகுதிகளையும் உள்ளடக்கும்போது மக்கள் தொகை கிட்டத்தட்ட 21 மில்லியனாகக் காணப்படுகின்றது.
மணிலா பெருநகரப் பிராந்தியத்தின் மொத்தப் பிராந்திய உற்பத்தி சூலை 2009 கணக்கெடுப்பின்படி ₱468.4 பில்லியனாக (நிலையான 1985 ஆம் ஆண்டு விலையில்) இருந்ததுடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33% ஆகவும் காணப்பட்டது.
2011 இல் மணிலா பெருநகரப் பகுதி உலகளவில் 28 ஆவது செல்வம் நிறைந்த நகர்புறக் குழுமமாகவும், தென்கிழக்காசியாவில் 2 ஆவதாகவும் பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு (PricewaterhouseCoopers) என்ற பன்னாட்டு தொழில்முறை சேவைகள் வலையமைப்பினால் தரப்படுத்தப்பட்டது.
இனம்
2000 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 28.1% பிலிப்பினோக்கள் தகலாகு இனத்தவர்களாகவும், 13.1% செபுவானோ, 9% இலொகானோ, 7.6% பிசயா/பினிசயா, 7.5% ஹிலிகய்னொன், 6% பிகோல், 3.4% வராய், மற்றும் 25.3% ஏனையவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்த ஏனையவர்களுக்குள் மோரோ, கபம்பங்கன், பங்கசினென்ஸ், இபனக், மற்றும் இவட்டன் போன்ற பழங்குடி அல்லாத குழுக்கள் உள்ளடங்குகின்றன. இகொரொட், லுமட், மங்யன், பஜவு, மற்றும் பாலவான் பழங்குடியினர் போன்ற பழங்குடி மக்களும் ஏட்டா மற்றும் அட்டி போன்ற நெகிரிட்டோக்களும் இத்தீவுகளில் தொன்று தொட்டு வாழும் குடிமக்களாகக் கருதப்படுகின்றனர்.
பிலிப்பினோக்கள் பொதுவாக ஆஸ்திரோனேசிய அல்லது மலாய-பொலினீசிய மொழி பேசுபவர்கள் என்பவர்களுள் ஒரு பகுதியாக மொழிரீதியாகவும் இனவழியாக சில ஆசிய குழுக்களுக்களை சார்ந்தவர்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரோனேசிய மொழி பேசும் தாய்வான் பழங்குடியினர் தாய்வானிலிருந்து பிலிப்பைன்சிற்கு இடம்பெயர்ந்த போது விவசாயம் மற்றும் சமுத்திரப் பயணம் தொடர்பான அறிவை இங்கு கொண்டுவந்ததுடன், இறுதியில் முன்னர் இத்தீவுகளில் வசித்துவந்த நெகிரிட்டோ குழுக்களை இடம்பெயரச்செய்தனர் என நம்பப்படுகின்றது.
மிகவும் முக்கியமான இரு பழங்குடியினர் அல்லாத இடம்பெயர்ந்தவர்களுக்குள் சீனர்களும் எசுப்பானியர்களும் உள்ளடங்குகின்றனர். பெரும்பாலும் 1898 ஆம் ஆண்டின் பின்னர் புஜியன்-சீனாவிலிருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களான சீனப் பிலிப்பினோக்கள் 2 மில்லியனாகக் காணப்படுவதுடன், 18 மில்லியன் பிலிப்பினோக்கள் பகுதியான சீன வழித்தோன்றலை உடையவர்களாக, முன்காலனித்துவ சீனப் புலம்பெயர்ந்தோரில் இருந்து கிளைத்தெழுந்தவர்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளனர். குழுக்களுக்கிடையிலான கலப்புத் திருமணம் பிரதான நகரங்களிலும், நகர்ப்புற பகுதிகளிலும் தெளிவாகத் தெரிகின்றது.
லூசோனின் மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கினரும், விசயாஸ் மற்றும் மின்டானோவின் நகரான சம்பொவாங்காவிலுள்ள சில பழங்குடியேற்றத்தினரும் ஹிஸ்பானிய வம்சாவளியைக் (லத்தீன் அமெரிக்கா மற்றும் எசுப்பானியா வரையிலான பல்வேறு இடங்களில் தோற்றம் பெற்றவர்கள்) கொண்டுள்ளனர். இவ்வாறான கலப்பு தம்பதியினரின் வழிவந்தோர் மெஸ்ரிசொஸ் என அழைக்கப்படுகின்றனர்.
மொழிகள்
175 தனிப்பட்ட மொழிகள் பிலிப்பைன்சை சார்ந்தவை என எத்னோலொக் பட்டியலிடுகின்றது. இவற்றுள் 171 மொழிகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளதுடன், ஏனைய நான்கு மொழிகளைப் பேசுவோர் தற்போது இல்லாததால் அவை பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தேசிய மொழிகள், ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தின் அங்கமாக உள்ள மலாய-பொலினீசிய மொழிகளின் ஒரு கிளையான பிலிப்பைன் மொழியின் பகுதியாக விளங்குகின்றன. பிலிப்பைன்சிலுள்ள, ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தினுள் அடங்காத, பிலிம்பைன்சுக்கு உரிய மொழியாக எசுப்பானிய அடிப்படை கிரியோலான சவகான மொழி விளங்குகின்றது.
பிலிப்பினோ மற்றும் ஆங்கிலம் ஆகியவை பிலிப்பைன்சின் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன. பிலிப்பினோ மொழியானது தகலாகு மொழியின் தரப்படுத்தப்பட்ட பதிப்பாக உள்ளதுடன், மணிலா பெருநகர்ப் பகுதி மற்றும் ஏனைய நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமாகப் பேசப்படுகின்றது. பிலிப்பினோ மற்றும் ஆங்கில மொழிகள் அரசாங்கம், கல்வி, அச்சு ஊடகம், ஒலிபரப்பு ஊடகங்கள், மற்றும் வணிக நடவடிக்கைகள் என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. எசுப்பானிய மற்றும் அராபிய மொழிகள் ஒரு தன்னார்வ மற்றும் விருப்ப அடிப்படையில் முதன்மை மொழிகளாக உயர்த்தப்படலாம் என அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது.
அக்லனொன், பிகோல், செபுவானோ, சவகானோ, ஹிலிகய்னொன், இபனக், இலோகானோ, இவட்டன், கபம்பங்கன், கினரய்-அ, மகுவின்டனவு, மரனவு, பங்கசீனன், சம்பல், சுரிகவுனொன், தகலாகு, தவுசக், வரே-வரே, மற்றும் யகன் ஆகிய பத்தொன்பது பிராந்திய மொழிகள் துணை அலுவல்முறை மொழிகளாகச் செயற்படுவதுடன் அறிவுறுத்தல் ஊடகங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய பழங்குடி மொழிகளான குயொனொன், இபுகவு, இட்பயாட், கலிங்கா, கமயோ, கன்கனேய், மஸ்படெனோ, ரொம்பிளொமனொன் மற்றும் சில விசயன் மொழிகள் தத்தமது மாகாணங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. எசுப்பானியாவிலிருந்து (மெக்சிகன் மற்றும் பெருவியன் திரிபு) பிறந்த ஒரு கிரியோல் மொழியான சவகான மொழி கவிட்டே மற்றும் சம்பொவாங்கா போன்ற இடங்களில் பேசப்படுகின்றது.
இத்தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டிராத மொழிகளும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன. சீனப் பிலிப்பினோ சமூகத்தின் சீனப் பாடசாலைகளில் மாண்டரின் பயன்படுத்தப்படுகின்றது. மின்டனவுவிலுள்ள இசுலாமியப் பாடசாலைகள் பாடத்திட்டத்தில் அரபு மொழியை உள்ளடக்கிக் கற்பிக்கின்றன. வெளிநாட்டு மொழியியல் நிறுவனங்களின் உதவியுடன் பிரான்சியம், செருமானியம், சப்பானியம், கொரியன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. 2013 இல் கல்வித் திணைக்களம் மலாயு மொழிகளான இந்தோனேசிய மற்றும் மலேசிய மொழிகளைக் கற்பிக்க ஆரம்பித்துள்ளது.
சமயம்
பிலிப்பைன்ஸ் தேவாலயம் மற்றும் அரசு என அரசியலமைப்புப் பிரிப்பினைக் கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடாகும். எசுப்பானியப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவாகப் பிலிப்பைன்ஸ், ஆசியாவிலுள்ள இரு பெரும்பான்மையான உரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இன்னோரு நாடாக முன்னாள் போர்த்துக்கேயக் காலனித்துவ நாடான கிழக்குத் திமோர் விளங்குகின்றது. 90% இற்கும் மேலதிகமான மக்கள் கிறித்தவர்களாக உள்ளனர். இவர்களுள் 80.6% ஆனோர் உரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தைச் சார்ந்தவர்களாகவும், 9.5% ஆனோர் சீர்திருத்தத் திருச்சபையின் பிரிவுகளான இக்லேசியா நி கிரிசுட்டோ, பிலிப்பைன் சுதந்திரத் திருச்சபை, பிலிப்பைன்சின் கிறித்தவ ஐக்கிய திருச்சபை மற்றும் யெகோவாவின் சாட்சிகள் போன்றவற்றை பின்பற்றுகின்றனர்.
முசுலிம் பிலிப்பினோக்களின் தேசிய ஆணையத்தின் (NCMF) படி 2012 இல் முசுலிம்கள் மக்கள்தொகையில் 11% ஐ உள்ளடக்கியவர்களாகக் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பான்மையானோர் மின்டானவுவின் பகுதிகள், பலாவன் மற்றும் பங்சமோரோ அல்லது மோரோ பிராந்தியம் எனப்படும் சுலு தீவுக்கூட்டம் ஆகிய பிராந்தியங்களில் வசிக்கின்றனர். இவர்களுள் சிலர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வந்து குடியேறியுள்ளனர். ஷாபி பாடசாலையின்படி பெரும்பாலான முசுலிம் பிலிப்பினோக்கள் சுன்னி இசுலாமை பின்பற்றுகின்றனர். அகமதியா முசுலிம்களும் இங்கு வசிக்கின்றனர்.
பிலிப்பைன்சின் பாரம்பரியச் சமயங்கள் தற்போதும் பூர்விக மற்றும் பழங்குடிக் குழுக்கள் போன்ற 2% ஆன மக்கள்தொகையினரால் பின்பற்றப்படுகின்றன. இந்தச் சமயங்கள் கிறித்தவ மற்றும் இசுலாமிய சமயங்களுடன் இணங்கிச் செல்கின்றன. ஆன்ம வாதம், நாட்டுப்புற மதம் மற்றும் சூனிய நம்பிக்கை ஆகியவை முதன்மை சமயங்களின் அடிப்படையாக அல்புலார்யோ, பபய்லான், மற்றும் மங்கிகிலொட் என்பவற்றினூடாகத் தற்போது காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள்தொகையில் 1% மக்கள் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். அத்தோடு சீன சமூகங்களில் தாவோயியம் மற்றும் சீன நாட்டுப்புற சமயம் என்பன பிரதானமாகக் காணப்படுகின்றன. இந்து சமயம், சீக்கியம், யூத சமயம் மற்றும் பகாய் சமயம் போன்றவற்றை சிறு எண்ணிக்கையான மக்கள் பின்பற்றுகின்றனர். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 1% முதல் 11% வரையானோர் எந்தச் சமயத்தையும் சாராதவர்களாக உள்ளனர்.
கல்வி
2008 ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் சாதாரண எழுத்தறிவு வீதம் 95.6% ஆகவும் இதில் ஆண்களுக்கு 95.1% ஆகவும் பெண்களுக்கு 96.1% ஆகவும் காணப்பட்டதுடன் பிலிப்பைன்சின் செயற்பாட்டு எழுத்தறிவு வீதம் 86.45% ஆகவும் இதில் ஆண்களுக்கு 84.2% ஆகவும் பெண்களுக்கு 88.7% ஆகவும் காணப்பட்டது. பெண்களின் எழுத்தறிவு வீதம் ஆண்களைவிட அதிகமாகக் காணப்படுகின்றது. முன்மொழியப்பட்ட 2015 ஆம் ஆண்டுதேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 16.11% செலவிடப்படுகின்றது.
உயர் கல்வி ஆணையகம் (CHED) பிலிப்பைன்சில் 2,180 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளதாகப் பட்டியலிடுவதுடன், இவற்றுள் 607 பொது உயர் கல்வி நிறுவனங்களாகவும் 1,573 தனியார் உயர் கல்வி நிறுவனங்களாகவும் விளங்குகின்றன. வகுப்புக்கள் சூன் மாதத்தில் ஆரம்பித்து மார்ச்சு மாதத்தில் முடிவடைகின்றன. பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சூன் முதல் ஒக்டோபர் வரை மற்றும் நவம்பர் முதல் மார்ச்சு வரையெனக் காணப்படும் கல்வியாண்டு நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன. கற்கை நெறிகளைக் கொண்ட பல வெளிநாட்டுப் பாடசாலைகளும் இங்கு காணப்படுகின்றன. குடியரசுச் சட்டம் எண். 9155 பிலிப்பைன்சின் அடிப்படைக் கல்வி பற்றிய கட்டமைப்பைக் குறிப்பிடுவதுடன் 6-வருடம் ஆரம்பக் கல்வியையும் 4-வருடம் உயர் கல்வியையும் கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் திருத்தியமைக்கப்பட்ட குடியரசுச் சட்டம் எண். 10533 அல்லது மே 15, 2013 இல் கைச்சாத்திடப்பட்ட 2013 இன் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்விச் சட்டம் (பொதுவாக K-12 சட்டம் எனப்படுகின்றது) என்பன நாட்டின் அடிப்படைக் கல்வி அமைப்பில் இரண்டு வருடங்களை மேலதிகமாக இணைக்கின்றன.
பல அரசாங்க துறைகள் கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கல்வித் திணைக்களம் ஆரம்ப, இடைநிலை மற்றும் முறைசாராக் கல்வி என்பவற்றைக் கையாள்கின்றது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகார சபை (TESDA) பிந்தைய இரண்டாம் இடைநிலைக் கல்விப் பயிற்சி மற்றும் அபிவிருத்தியை நிர்வகிக்கின்றது. உயர் கல்வி ஆணையகம் (CHED) கல்லூரி, பட்டதாரிக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பட்டப்படிப்பு என்பவற்றை மேற்பார்வை செய்வதுடன், உயர் கல்வியின் தரத்தினை ஒழுங்குபடுத்துகின்றது.
2004 ஆம் ஆண்டு மதராசா கல்வி நிறுவனங்கள் நாடளாவியரீதியில் முதன்மையாக மின்டனவுவிலுள்ள முசுலிம் பிராந்தியங்கள் உள்ளடங்கலாக 16 பிராந்தியங்களில் கல்வித் திணைக்களத்தின் ஆதரவுடனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் செயற்படுகின்றன. பொதுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மதச்சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுவதுடன், பொதுத்துறை பல்கலைக்கழகம் (SUC) அல்லது உள்ளூர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் (LCU) என மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்சின் தேசியப் பல்கலைக்கழகமாகப் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.
சுகாதாரம்
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு பெரும்பாலும் தனியார் சுகாதாரச்சேவை வழங்குநர்களினால் கையாளப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு சுகாதாரத் துறையின் மொத்தச் செலவினங்கள் 3.8% ஆகக் காணப்பட்டதுடன் உலகச் சுகாதார அமைப்பின் இலக்கான 5% ஐ விடக் குறைவாகவே உள்ளது. 2009 இல் 67.1% ஆன சுகாதாரப் பராமரிப்பு தனியார் செலவீனங்களிலிருந்து பெறப்பட்டதுடன் 32.9% அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தத்தில் 2.9% ஆனவை வெளிப்புற வளங்களால் பூர்த்திசெய்யப்பட்டன. மொத்த அரசாங்கச் செலவுகளில் சுகாதார செலவினங்கள் 6.1% ஆகக் காணப்படுகின்றன. தனிநபரொருவருக்கான மொத்தச் செலவினம் சராசரிப் பரிமாற்ற வீதத்தில் $52 ஆகக் காணப்படுகின்றது. 2010 இல் சுகாதாரப் பராமரிப்பிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு ₱28 பில்லியன் (அண்ணளவாக $597 மில்லியன்) அல்லது நபரொருவருக்கு ₱310 ($7) ஆகக் காணப்படுகின்றது. ஆனால் கீழவைச் சட்டமூலம் 5727 (பொதுவாகச் சின் வரி சட்டமூலம்) இலிருந்து வரி அறவீட்டினால் 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு அதிகரித்தது.
கணக்கெடுப்பின்படி 90,370 மருத்துவர்கள் அல்லது 833 பேருக்கு ஒரு மருத்துவர் இங்கு உள்ளதுடன், 480,910 தாதியர்கள், 43,220 பல் மருத்துவர்கள், மற்றும் 769 பேருக்கு ஒரு மருத்துவமனைப் படுக்கை இங்கு காணப்படுகின்றன. திறமையான மருத்துவர்களைத் தக்க வைத்தல் ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. 70% ஆன தாதியர் பட்டதாரிகள் வேலை செய்வதற்கு வெளிநாடு செல்கின்றனர். பிலிப்பைன்ஸ் உலகின் மிகப்பெரிய தாதியர் வழங்குநராகக் காணப்படுகின்றது.
2001 இல் 1,700 மருத்துவமனைகள் காணப்பட்டதுடன், இவற்றுள் 40% ஆனவை அரசாங்கத்தாலும் 60% ஆனவை தனியாராலும் நடாத்தப்படுகின்றன. மொத்த இறப்பின் 25% இற்கும் மேலதிகமான இறப்புக்கள் இதயக் குழலிய நோயால் ஏற்படுகின்றன. அலுவல்முறைக் கணக்கெடுப்பின்படி 2003 இல் 1,965 எச்.ஐ.வி (HIV) நோயாளர் பதிவுசெய்யப்பட்டதுடன், இவர்களுள் 636 பேர் எய்ட்சு (AIDS) நிலையை அடைந்தனர். இருந்தபோதிலும் 2005 இல் 12,000 ஆக இருந்து ஏப்ரல் 2014 இல் 17,450 ஆக எச்.ஐ.வி/எய்ட்சு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்ததுடன் 5,965 எச்.ஐ.வி/எய்ட்சு நோய் எதிர்ப்பு சிகிச்சை எடுத்தனர் கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சில் வயது வந்த மக்களில் 0.1% ஆனோர் எச்.ஐ.வி-நேர்மறையைக் கொண்டுள்ளமையால், குறைந்த எச்.ஐ.வி நோய்த்தாக்கம் கொண்ட நாடாகப் பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது.
பண்பாடு
பிலிப்பைன்சின் பண்பாடு கீழைத்தேய மற்றும் மேலைத்தேயப் பண்பாடுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் ஏனைய ஆசிய நாடுகளில் காணப்படும் அம்சங்களை மலாய மரபினூடாக வெளிப்படுத்துகின்றது. ஆனாலும் இதன் பண்பாட்டில் எசுப்பானிய மற்றும் அமெரிக்கப் பண்பாடுகளின் தாக்கத்தினைக் காணக்கூடியதாக உள்ளது. புனிதத் துறவிகளின் திருவிழா நாட்களை நினைவுகூர்வதற்காகக் கொண்டாடப்படும் பரியோ பியெஸ்டாஸ் (மாவட்டத் திருவிழாக்கள்) எனப்படும் பாரம்பரியத் திருவிழாக்கள் இங்கு பொதுவாகக் காணப்படுகின்றன.
மோரியோன்ஸ் திருவிழாவும் சினுலொக் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களாகத் திகழ்கின்றன. இந்த சமூகக் கொண்டாட்டங்கள் விருந்து, இசை, மற்றும் நடனம் என்பவற்றிற்கான நேரமாகக் காணப்படுகின்றன. நவீனமயமாக்கலின் காரணமாகச் சில விழாக்கள் மாற்றத்திற்குள்ளாவதுடன் படிப்படியாக மக்களால் மறக்கப்பட்டும் வருகின்றன. பிலிப்பைன்ஸ் எங்கும் பரந்து காணப்படும் பல்வேறுபட்ட மரபுசார்ந்த கிராமிய நடனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பயனிஹன் பிலிப்பைன் தேசிய கிராமிய நடன நிறுவனம் உருவாக்கப்பட்டது. ரினிக்லிங் மற்றும் சிங்கில் போன்ற மூங்கில் தடிகளை அடித்து ஆடப்படும் நடனங்களில் இவர்களது குறிப்பிடத்தக்க செயற்பாட்டினால் இவர்கள் புகழ்பெற்றுள்ளனர்.
எசுப்பானிய மற்றும் அமெரிக்கத் தாக்கம்
பிலிப்பினோ மக்களிடையே எசுப்பானியப் பெயர்களும் குடும்பப் பெயர்களும் பயன்படுத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிகின்ற ஹிஸ்பானியப் பாரம்பரியங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இருந்த போதிலும் எசுப்பானிய வம்சாவளியைக் கொண்ட மக்கள் மட்டுமல்லாது பிறரும் எசுப்பானியப் பெயர்களையும் குடும்பப் பெயர்களையும் பயன்படுத்தினர். இந்த விசேட தன்மை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவாக ஆசிய மக்களிடையே தனித்துவமாகக் காணப்படுவதுடன், கவ்வேரிய அரசாணை மக்களின் மீது எசுப்பானியப் பெயரிடும் முறையைச் செயற்படுத்தியதுடன் திட்டமிட்டு எசுப்பானியக் குடும்பப் பெயர்களைப் பரவலாக்கம் செய்தது.
பல வீதிகள், நகரங்கள், மற்றும் மாகாணங்கள் என்பவற்றின் பெயர்களும் எசுப்பானிய மொழியில் அமைந்துள்ளன. பிலிப்பைன்சில் பல நகரங்கள் ஒரு மத்திய சதுரத்தை சுற்றி அமைந்துள்ளமை எசுப்பானியக் கட்டடக்கலையின் அடையாளமாக அமைந்துள்ளது. ஆனால் எசுப்பானியக் கட்டடக்கலை மூலம் அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் இரண்டாம் உலகப் போரின் போது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. பிலிப்பைன்சின் தேவாலயங்கள், அரசாங்கக் கட்டடங்கள், மற்றும் பல்கலைக்கழகங்கள் எசுப்பானியக் கட்டடக்கலைக்குச் சில எடுத்துக்காட்டுகளாக எஞ்சியுள்ளன. மணிலாவிலுள்ள சான் அகஸ்டின் தேவாலயம், இலோகொஸ் நோர்டேயிலுள்ள பவோவா தேவாலயம், இலோகொஸ் சர்ரிலுள்ள நுவெஸ்திரா செனோரா டி லா அசுன்சியொன் (சான்டா மரியா) தேவாலயம், இலொய்லோவிலுள்ள சான்டோ தோமஸ் டி வில்லானுவேவா தேவாலயம் ஆகிய நான்கு பிலிப்பைன் பரோக் தேவாலயங்கள் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலோகொசிலுள்ள விகன் நகரம், ஹிஸ்பானியப் பாணியிலான வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதுகாக்கப்படுவதால் புகழ்பெற்று விளங்குகின்றது.
ஆங்கில மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுவது பிலிப்பீனியச் சமூகம் மீதான அமெரிக்கத் தாக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது அமெரிக்கப் பொப் பண்பாட்டுப் போக்குகள் ஏற்றுக்கொள்ளப்படவும் தாக்கம் செலுத்தவும் பங்களித்துள்ளது. இந்த நாட்டத்தைப் பிலிப்பினோக்களின் துரித உணவு, மேற்கத்தேயத் திரைப்படம் மற்றும் இசை மீதான நாட்டத்தின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. துரித உணவு விற்பனை நிலையங்கள் பல வீதியோரங்களில் காணப்படுகின்றன. பிரபல அமெரிக்க உலகளாவிய துரித உணவுச் சங்கிலி பிலிப்பைன்சின் சந்தைக்குள் நுழைந்த போதிலும், உள்ளூர் துரித உணவுச் சங்கிலிகளான கோல்டிலொக்ஸ் மற்றும் நாட்டின் முன்னணி துரித உணவுச் சங்கிலியான ஜொல்லிபீ ஆகியன, தங்கள் வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராக வெற்றிகரமாகப் போட்டியிடவும் நிலைத்து நிற்கவும் முடியுமாயிருந்தன.
சமையல்
பிலிப்பைன்சின் சமையல் முறை அதன் மலாய-பொலினீசிய மூலத்திலிருந்து சில நூற்றாண்டுகளாக மாற்றமடைந்து வருவதுடன் ஹிஸ்பானிய, சீன, அமெரிக்க, மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் தாக்கத்திற்குள்ளாகி கலப்புச் சமையல் முறையாக உருவானதுடன், உள்ளூர் சமையற் பொருட்கள் மற்றும் பிலிப்பினோக்களின் சுவையைத் தழுவித் தனித்துவமான உணவுகள் உருவாகியுள்ளன. மிகவும் இலகுவான உணவான பொரித்த மீன், சோறு, விழாக்களில் செய்யப்படும் பெல்லாக்கள் கொசிடோஸ் போன்ற பல்வேறுபட்ட உணவு வகைகள் இங்குக் காணப்படுகின்றன.
லெசோன், அடொபோ, சினிகாங், கரே-கரே, டப்பா, மொறுமொறுப்பான பட்டா, பஞ்சிட், லும்பியா, மற்றும் ஹாலோ-ஹாலோ போன்ற உணவுகள் புகழ்பெற்ற உணவு வகைகளாகத் திகழ்கின்றன. கலமொன்டின்கள் (கலப்பின பழவகை, இது பிலிப்பினோ எலுமிச்சை, சீன ஆரஞ்சு என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது) தேங்காய்கள், சபா (ஒரு வகையான சிறிய அகலமான வாழைப்பழம்), மாம்பழங்கள், பால் மீன், மற்றும் மீன் சுவைச்சாறு (சோஸ்) என்பன சமையலில் பயன்படுத்தப்படும் பொதுவான உள்ளூர் சமையற் பொருட்களுள் சிலவாகும். பிலிப்பினோக்களின் சுவை மொட்டுகள் வலுவான சுவைகளுக்குச் சாதகமாக உள்ளபோதிலும், பிலிப்பைன் சமையல் அதன் அண்டை நாடுகளைப் போலக் காரமான உணவாக இருப்பதில்லை.
கிழக்கு ஆசிய நாட்டவரைப் போலப் பிலிப்பினோக்கள் ஒரு சோடிக் குச்சிகளின் உதவியுடன் உண்ணாமல், மேற்கத்திய உபகரணங்களின் உதவியுடனேயே உண்கின்றனர். இருந்த போதிலும் முதன்மை உணவாக சோறு இருப்பதன் காரணமாகவும், பெரும் எண்ணிக்கையிலான கஞ்சி வகைகள் மற்றும் குழம்புடன் கூடிய முதன்மை உணவுகள் பரவலாக உண்ணப்படுவதால் பிலிப்பினோக்கள் உணவு உண்ணும்போது கத்தியைப் பயன்படுத்துவதில்லை. மாறாக சிறுகரண்டியையும் முள்கரண்டியையும் கொண்டு பெரும்பாலோர் உண்ணுகிறார்கள். கமயான் என்று அழைக்கப்படும் கைகளின் மூலம் உணவு உண்ணும் மரபு சார்ந்த முறை சிறிய நகரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.
இலக்கியம்
பிலிப்பைனின் தொன்மவியல் முதன்மையாக பிலிப்பினனோ மக்களின் மரபுசார்ந்த வாய்வழி நாட்டுப்புற இலக்கியங்களின் வழியாகவே தற்காலத் தலைமுறைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒவ்வொரு தனித்துவமான இனக்குழுவினரும் தமது சொந்தக் கதைகளையும் தொன்மங்களையும் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்து மற்றும் எசுப்பானியத் தாக்கங்களைப் பல சந்தர்ப்பங்களில் பரவலாகக் காண முடிகின்றன. பிலிப்பைனின் தொன்மவியல் பெரும்பாலும் படைப்புக் கதைகள் எனப்படும் அஸ்வாங், மனனங்கல், டிவட்டா/எங்கன்டோ போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் மற்றும் இயற்கை பற்றிய கதைகளைக் கொண்டுள்ளது. மரியா மகிலிங், லம்-அங், மற்றும் சரிமனொக் போன்றவர்கள் பிலிப்பைனின் தொன்மவியல்களிலுள்ள சில புகழ்பெற்ற நபர்களாக விளங்குகின்றனர்.
பிலிப்பினோ, எசுப்பானியம், ஆங்கில மொழி போன்ற மொழிகளில் எழுதப்பட்ட படைப்புக்களைப் பிலிப்பைனின் இலக்கியம் பொதுவாகக் கொண்டுள்ளது. சில பிரபலமான படைப்புக்கள் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. புளோரன்டே அட் லவுரா என்ற காவியத்தை எழுதிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பினோ மொழியில் முன்னணி எழுத்தாளராகத் திகழ்கின்றார். நொலி மீ தாங்கெரே (என்னைத் தொடாதே) மற்றும் எல் பிலிபஸ்டெரிஸ்மோ (காலங் கடத்துதல், பேராசையின் ஆட்சிக்காலம் என்றும் அழைக்கப்படுகின்றது) போன்ற நாவல்களை எழுதிய ஒசே ரிசால் தேசிய நாயகனாகக் கருதப்படுகின்றார். எசுப்பானிய ஆட்சியின் அநீதி தொடர்பான அவரது எழுத்துச் சித்தரிப்பும், அரசின் துப்பாக்கி வீரர்கள் அடங்கிய குழுவால் சுடப்பட்டு அவர் மரண தண்டனை பெற்ற நிகழ்வும், சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஏனைய பிலிப்பீனியப் புரட்சியாளர்களுக்கு உந்துதலாக அமைந்தது. என். வி. எம். கொன்சலேஸ், அமடோ வி. ஹெர்னான்டெஸ், பிரான்சிஸ்கோ ஆர்செல்லனா, நிக் ஜொகுவின் மற்றும் பல பிலிப்பினோ எழுத்தாளர்களுக்குப் பிலிப்பைன்சின் தேசியக் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஊடகம்
பிலிப்பைன் ஊடகங்கள் முதன்மையாக பிலிப்பினோ மற்றும் ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு விசயன் மொழிகள் உள்ளடங்கலாக ஏனைய பிலிப்பைன் மொழிகள், விசேடமாகப் பிற ஊடக சேவைகள் இல்லாத, வெகு தொலைவிலுள்ள கிராமப்புறங்களை அடையக்கூடியதாக உள்ளபடியினால் வானொலிகளில் பயன்படுத்தப்படுகின்றன. புகழ்பெற்ற தொலைக்காட்சி வலையமைப்புக்களான ஏபிஎஸ்-சீபிஎன் (ABS-CBN), ஜீஎம்ஏ (GMA), டிவி5 (TV5) ஆகியன விரிவான வானொலி அமைப்பையும் கொண்டுள்ளன.
பொழுதுபோக்குத் துறை துடிப்பாக உள்ளதுடன் சஞ்சிகைகளும் சிறு பத்திரிகைகளும் புகழ்பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் பரபரப்பான ஊழல்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ச்சியாக வழங்குகின்றன. நாடகங்கள் மற்றும் கற்பனை நிகழ்ச்சிகளில் இலத்தீன் டெலினொவெலாஸ், அசியமொவெல்லாஸ், மற்றும் அனிமே என்பவற்றை எதிர்பார்க்கலாம். பகல் நேரத்தில் தொலைக்காட்சிகளில் குழு விளையாட்டு நிகழ்ச்சிகள், வேறுபட்ட நிகழ்ச்சிகள், மற்றும் ஈட் புலகா மற்றும் இட்ஸ் ஷோடைம் போன்ற பேச்சு நிகழ்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பிலிப்பைன் திரைத்துறை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதுடன் உள்நாட்டில் புகழ்பெற்று உள்ளது. ஆனால் அமெரிக்க, ஆசிய, மற்றும் ஐரோப்பியத் திரைப்படங்கள் மூலம் அதிகரித்த போட்டித்தன்மையை எதிர்நோக்கியுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுள் மய்னிலா: சா ம்கா குகோ ங் லிவனக் (மணிலா: ஒளியின் கால்களில்) மற்றும் ஹிமலா (அதிசயம்) போன்ற திரைப்படங்களுக்காகப் பாராட்டப்பட்ட லினோ புரொக்கா மற்றும் நோரா அவுனோர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். அண்மைய ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வலம் வரும் புகழ்பெற்றவர்கள், பின்னர் அரசியலில் நுழைந்து சர்ச்சைக்களை தூண்டுவது கவலைக்குரியதாக உள்ளது.
விளையாட்டு
கூடைப்பந்து, குத்துச்சண்டை, சேவல் சண்டை, கைப்பந்தாட்டம், காற்பந்து, இறகுப்பந்தாட்டம், கராத்தே, டைக்குவாண்டோ, பில்லியார்ட்ஸ், பத்துப்பின் பௌலிங், சதுரங்கம், மற்றும் சிபா உள்ளடங்கலாகப் பல்வேறு விளையாட்டுக்களும் பொழுதுபோக்குகளும் பிலிப்பைன்சில் புகழ்பெற்றுள்ளன. மோட்டர் கிராசு, சைக்கிளோட்டம், மற்றும் மலையேற்றம் என்பனவும் புகழடைந்து வருகின்றன. கூடைப்பந்து தொழில்முறையற்றவர்களாலும் தொழில்முறை சார்ந்தவர்களாலும் விளையாடப்பட்டு பிலிப்பைன்சில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக விளங்குகின்றது. 2010 இல், மன்னி பக்குவியோ 2000களின் (தசாப்தம்) பத்தாண்டின் சிறந்த சண்டைக்காரராக அமெரிக்காவின் குத்துச்சண்டை எழுத்தாளர்கள் கூட்டமைப்பு (BWAA), உலக குத்துச்சண்டை சபை (WBC), மற்றும் உலக குத்துச்சண்டை அமைப்பு (WBO) என்பவற்றால் குறிப்பிடப்பட்டார்.
பிலிப்பைன்ஸ் 1924ஆம் ஆண்டிலிருந்து கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்குபெற்று வருவதுடன், முதன் முறையாகப் போட்டிகளில் பங்குப்பெற்று பதக்கத்தை வென்ற முதலாவது தென்கிழக்காசியா நாடாகத் திகழ்கின்றது. பிலிப்பைன்ஸ் அனைத்து கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் பங்குபெற்று வந்த போதிலும் 1980 கோடைகால ஒலிம்பிக்கிக்கை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் புறக்கணித்த போது மட்டும் பங்கு பெறவில்லை. பிலிப்பைன்ஸ் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் போட்டியிடும் முதலாவது வெப்பமண்டல நாடாக விளங்குகின்றது.
லக்சங் பகா, படின்டெரோ, பிகோ, மற்றும் டும்பங் பிரெசோ போன்றவை மரவு வழி பிலிப்பைன் விளையாட்டுக்கள் ஆகும். இவை சிறுவர்களின் விளையாட்டுகளாக இளைஞர் மத்தியில் பெரும்பாலும் தற்போது விளையாடப்படுகின்றன. சுங்கா என்பது பிலிப்பைன்சைச் சேர்ந்த மரபு சார்ந்த பிலிப்பைன் பலகை விளையாட்டாகும். விழாக்காலங்களில் சீட்டாட்டம் புகழ்பெற்று காணப்படுவதுடன், புசோய் மற்றும் டொங்-இட்ஸ் என்பன சட்டவிரோத சூதாட்டத்தின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில பிலிப்பைன் சமூகங்களில் மஹ்ஜொங் விளையாடப்படுகின்றது. பிலிப்பைன்சில் புகழ்பெற்ற விளையாட்டுப் பொம்மையாக யோ-யோ விளங்குவதுடன், பெட்ரோ புளோரெசால் இலோகானோ மொழியில் இது பெயரிடப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டது. அர்னிஸ் (சில பிராந்தியங்களில் எஸ்கிர்மா அல்லது காளி எனப்படுகின்றது) என்பது தேசிய தற்காப்புக் கலையாகவும் விளையாட்டாகவும் விளங்குகின்றது.