போர்த்துகல் (போர்த்துக்கீசம்: Portugal), என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு (Portuguese Republic, போர்த்துக்கீசம்: República Portuguesa) ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். கண்ட ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும். இவை போர்த்துகலின் தன்னாட்சிப் பகுதிகள். போர்த்துகல் என்னும் பெயர், போர்ட்டசு கேல் என்னும் இலத்தீன் பெயர் கொண்ட அதன் இரண்டாவது பெரிய நகரான போர்ட்டோ என்பதில் இருந்து பெறப்பட்டது. லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும்.
தர்போதைய போர்த்துகல் குடியரசின் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதிகள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் உரோமரும், விசிகோதியர், சுவேபியர் ஆகியோரும் ஆட்சி செய்த பின்னர், 8 ஆம் நூற்றாண்டில் ஐபீரியத் தீவக்குறை முழுவதையும் இசுலாமியரான மூர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். கிறித்தவ மீட்பின்போது, 1139 ஆம் ஆண்டில், போர்த்துகல் கலீசியாவில் இருந்து பிரிந்து தனியான இராச்சியம் ஆனது. இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப் பழைய தேச அரசு என்ற பெருமையையும் பெற்றது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியதன் விளைவாக, போர்த்துகல் மேற்கத்திய செல்வாக்கை விரிவாக்கி முதல் உலகப் பேரரசை நிறுவியதுடன், உலகின் முக்கியமான பொருளாதார, அரசியல், படைத்துறை வல்லரசுகளில் ஒன்றாகவும் ஆனது. அத்துடன், நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக் கூடிய காலமான ஏறத்தாழ 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது போர்த்துக்கேயப் பேரரசே. இது 1415ல் செயுட்டாவைக் கைப்பற்றியதில் இருந்து 1999ல் மாக்கூவுக்கும் 2002ல் கிழக்குத் திமோருக்கும் விடுதலை அளிக்கும்வரை நீடித்து இருந்தது. இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் இன்று 53 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் பரந்த பகுதியில் பரவி இருந்தது. எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது.
போர்த்துகல் மிகவும் கூடிய மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது. இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது.
வரலாறு
தொடக்க வரலாறு
போர்த்துகலின் முந்திய வரலாறு, ஐபீரியத் தீவக்குறையின் பிற பகுதிகளின் வரலாற்றுடன் சேர்ந்தே இருந்தது. இப்பகுதியில் குடியேறியிருந்த முன்-செல்ட்டுகள், செல்ட்டுகள் ஆகியோரிலிருந்து, கலீசிகள், லுசித்தானியர், செல்ட்டிசிகள், சைனெட்டுகள் போன்ற இனத்தினர் தோன்றினர். போனீசியரும், கார்த்தசினியரும் இப்பகுதிக்கு வந்தனர். இசுப்பானியாவின் பகுதிகளான லுசித்தானியாவும், கலீசியாவின் ஒரு பகுதியும் உரோமக் குடியரசினுள் அடங்கியிருந்தன. கிமு 45 முதல் கிபி 298 வரையான காலப்பகுதியில் சுவெபி, புரி, விசிகோத் ஆகிய இனத்தவர் குடியேறியிருந்தனர். பின்னர் இப்பகுதிகளை முசுலிம்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
தொல்பழங்காலத்தில் இன்றைய போர்த்துகல் இருக்கும் பகுதியில் நீன்டர்தால்கள் வாழ்ந்துவந்தன. பின்னர் ஓமோ சப்பியன்கள், எல்லைகள் இல்லாதிருந்த வடக்கு ஐபீரியத் தீவக்குறைப் பகுதிகளில் அலைந்து திரிந்தனர். இச் சமூகம் ஒரு வாழ்வாதாரச் சமூகமாகவே இருந்தது. இவர்கள் வளமான குடியேற்றங்களை உருவாக்காவிட்டாலும், ஒழுங்கமைந்த சமூகமாக இருந்தனர். புதிய கற்காலப் போர்த்துகலில், மந்தை விலங்கு வளர்ப்பு, தானியப் பயிர்ச்செய்கை, மழைநீர் ஏரி அல்லது கடல் மீன்பிடித்தல் போன்றவற்றில் முயற்சிகள் செய்யப்பட்டன.
கிமு முதலாவது ஆயிரவாண்டின் தொடக்க காலத்தில், மைய ஐரோப்பாவில் இருந்து பல அலைகளாக போர்த்துகலுக்குள் வந்த செல்ட்டுகள் உள்ளூர் மக்களுடன் மணம் கலந்ததால் பல பழங்குடிகளை உள்ளடக்கிய பல்வேறு இனக்குழுக்கள் உருவாயின. இவற்றுள் முக்கியமானவை, வடக்கு போர்த்துகலைச் சேர்ந்த கலைசியர் அல்லது கலீசி, மையப் போர்த்துகலைச் சேர்ந்த லுசித்தானியர், அலென்டசோவைச் சேர்ந்த செல்ட்டிசி, அல்கார்வேயைச் சேர்ந்த சைனெட்டுகள் அல்லது கோனீ எனப்படும் இனக்குழுக்கள் ஆகும்.
உரோம லுசித்தானியாவும், கலீசியாவும்
ஐபீரியத் தீவக்குறையினுள் உரோமரின் முதல் ஆக்கிரமிப்பு கிமு 219ல் இடம்பெற்றது. 200 ஆண்டுகளுக்குள் முழுத் தீவக்குறையுமே உரோமக் குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது. உரோமரின் எதிரிகளான கார்த்தசினியர் கரையோரக் குடியேற்றங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்று போர்த்துகலாக இருக்கும் பகுதிகளை உரோமர் கைப்பற்றுவதற்கு ஏறத்தாழ 200 ஆண்டுகள் பிடித்ததுடன், பல இளம் போர்வீரர்களும் தமது உயிர்களை இழந்தனர். அத்துடன் கைதிகளாகப் பிடிபட்டவர்களுள் பேரரசின் பிற பகுதிகளில் விற்கப்படாதவர்கள், சுரங்கங்களில் அடிமைகளாக விரைவான சாவைத் தழுவினர். கிமு 150ல் வட பகுதியில் ஒரு கலகம் ஏற்பட்டது. லுசித்தானியரும், பிற தாயகப் பழங்குடிகளும் விரியாத்தசுவின் தலைமையில் மேற்கு ஐபீரியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.
உரோம், ஏராளமான படைகளையும், மிகச் சிறந்த தளபதிகளையும் கலகத்தை அடக்குவதற்காக அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. லுசித்தானியர்கள் நிலப்பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தனர். உரோமத் தலைவர்கள் தமது உத்தியை மாற்றிக்கொள்ளத் முடிவு செய்தனர். விரியாத்தசுவைக் கொல்வதற்காக அவனது கூட்டாளிகளுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். கிமு 139ல் விரியாத்தசு கொல்லப்பட்டான். தௌலாத்தசு என்பவன் தலைவனானான்.
ரோம் ஒரு குடியேற்றவாத ஆட்சியை அங்கே நிறுவியது. விசிகோத்தியக் காலத்திலேயே லுசித்தானியாவின் உரோமமயமாக்கம் முழுமை பெற்றது. கிமு 27ல் லுசித்தானியா உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது. லுசித்தானியர் தமது சுதந்திரத்தை இழந்து அடக்கப்படுபவர்கள் ஆயினர். பின்னர், கலீசியா என்று அழைக்கப்பட்ட, லுசித்தானியாவின் வடக்கு மாகாணம் உருவானது. இன்று பிராகா என்று அழைக்கப்படும் பிராக்காரா ஆகசுத்தா என்பது இதன் தலைநகரமாக இருந்தது. இன்றும் காசுட்ரோ என அழைக்கப்படும் மலைக் கோட்டைகளின் அழிபாடுகளும் பிற காசுட்ரோ பண்பாட்டு எச்சங்களும் தற்காலப் போர்த்துகல் முழுவதும் காணப்படுகின்றன. ஏராளமான உரோமர் காலக் களங்கள் இன்றைய போர்த்துகலில் பரவலாக உள்ளன. சில நகர் சார்ந்த எச்சங்கள் மிகவும் பெரியவை. கொனிம்பிரிகா, மிரோபிரிகா என்பன இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
முசுலிம் ஐபீரியா
கிபி 712ல் உமயாட் கலீபகம் ஐபீரியத் தீவக்குறையைக் கைப்பற்றியதில் இருந்து 1249ல் போத்துகலின் மூன்றாம் அபோன்சோ திரும்பக் கைப்பற்றும் வரை ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகள் போர்த்துகல் கலீபகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
விசிகோத்துகளை சில மாதங்களிலேயே முறியடித்த உமயாட் கலீபகம் தீவக் குறையினுள் விரைவாகத் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. கிபி 711ல் தொடங்கி இன்றைய போர்த்துகலுக்குள் அடங்கும் நிலப்பகுதிகள், இந்தியாவின் சிந்து நதி முதல் பிரான்சுக்குத் தெற்கேயுள்ள பகுதிகள் வரை பரந்திருந்ததும் டமாசுக்கசைத் தளமாக கொண்டிருந்ததுமான உமயாட் கலீபகத்தின் பேரரசின் பகுதியாயின. 750ல் பேரரசின் மேற்குப் பகுதி தன்னைக் கலீபகத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு முதலாம் அப்த்-அர்-ரகுமான் தலைமையில் கோர்தோபா அமீரகமாக உருவாகியது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 929 ஆம் ஆண்டில், இந்த அமீரகம் கோர்தோபா கலீபகமாக மாறியது. 1031 ஆம் ஆண்டில் இது தைபா இராச்சியங்கள் எனப்பட்ட 23க்கும் அதிகமான சிறிய இராச்சியங்களாகப் பிரிந்தது.
தைபாக்களின் ஆளுனர்கள் தம்மைத் தமது மாகாணங்களுக்கு எமிர்களாக அறிவித்துக்கொண்டு வடக்கே இருந்த கிறித்தவ இராச்சியங்களுடன் அரசுமுறை உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். போர்த்துகலின் பெரும்பாலான பகுதிகள் அப்தாசிட் வம்சத்தின் படாயோசு தைபாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
அலன்டாலசு குரா எனப்படும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கர்ப் அல் அன்டாலசு மிகவும் பெரிதாக இருந்தபோது 10 குராசுகளை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு குராவுக்கும் தனியான தலைநகரம் இருந்தது ஆளுனரும் இருந்தார். அக்காலத்தில் இருந்த முக்கியமான நகரங்கள் பேசா, சில்வெசு, அல்காசர் டோ சல், சாந்தாரெம், லிசுபன், கொயிம்பிரா என்பன.