ரஷ்யா | Russia

உருசியா (Russia) அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும். இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.

உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (Rossiyskaya Federatsiya அல்லது ரசீஸ்க்கய ஃபெதராத்சியா) அல்லது சுருக்கமாக உருசியா (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiya அல்லது Rossija) என அழைக்கப்படுகிறது. ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் மற்றும் 40% ஐரோப்பா பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு காட்டு ஒதுக்கங்களைக் (8,087,900 ச. கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன. உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன் உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது. உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா.

உருசியாவின் வரலாறு, கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது. அதன் பிறகு இப் பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9வது நூற்றாண்டில் “ருஸ்” என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988 ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது. இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற உருசியப் பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. சில காலங்களின் பின் “ருஸ்” நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர். பின்னர், மாசுக்கோ பெரும் டச்சி (Grand Duchy of Moscow) படிப்படியாக அருகில் இருந்த “ருஸ்” சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு “கீவிய ருஸ்” பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் போலந்து முதல் வட அமெரிக்காவில் உள்ள அலாசுக்கா வரை பரந்து இருந்தது.

உருசியா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருசியப் பேரரசாகவும், சோவியத் ஒன்றியம் மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917ல் உருசியப் புரட்சியைத் தொடர்ந்து உலகின் முதல் அரசியல் சட்ட சோசலிச நாடாக உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் பெரிய பகுதியாகவும் முன்னணி உறுப்பாகவும் உருசியா இருந்தது. சோவியத் ஒன்றியம் உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் கூட்டுப் படைகளின் வெற்றியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. சோவியத் ஒன்றியக் காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகின் முதலாவது மனித விண்வெளிப் பறப்பும் இவற்றுள் அடங்கும். 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது. எனினும், உருசியாவே கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சட்டத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உருசியப் பொருளாதாரம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒன்பதாவது பெரியதாகவும், வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் ஆறாவது பெரியதாகவும் உள்ளது. இதன் படைத்துறைக்கான பெயரளவு வரவு செலவு உலகின் மூன்றாவது பெரிதாகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்திகளுள் ஒன்று. உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுவாயுத நாடுகளில் ஒன்றான உருசியா உலகின் மிகப் பெரிய பேரழிவு ஆயுதச் சேமிப்பையும் கொண்டுள்ளது. உருசியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்றாக உள்ளதுடன், ஜி8, ஜி20, ஐரோப்பிய அவை, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசிய பொருளாதாரச் சமூகம், ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

மக்கள் பரம்பல்

உருசியாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும். பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3/கிமீ2 ஆகும். பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள். உருசியாவின் 80% மக்கள் உருசிய இன மக்கள் ஆவார்கள். இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றார்கள்.

வரலாறு

முற்காலம்

35000 வருடங்கள் பழமையான நவீன மனிதனின் எலும்புகள் ரசியாவின் கொஸ்டெங்கி பகுதியிலுள்ள டொன் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை] 41000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த டெனிசோவா ஹோமினின் என்ற மனித இனத்தின் எச்சங்கள் தென் சைபீரியாவின் டெனிசோவா குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[சான்று தேவை]

வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் தென் ரசியாவின் ஸ்டெப்பீஸ் புல்வெளிகள் நாடோடி இடையர்களின் தாயகமாக இருந்தது. ஸ்டெப்பீஸ் நாகரிகத்தின் எச்சங்கள் இபடோவோ, சின்தாஸ்டா, ஆர்கெய்ம், மற்றும் பசிரிக், ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நாடோடி வாழ்க்கையின் முக்கிய அம்சமான குதிரைப் படையை வைத்திருந்தமைக்கான சான்றுகளைத் தருகின்றன.

கிரேக்க, ரோமக் குறிப்புகளில் பொன்டிக் ஸ்டெப்பீ புல்வெளி சின்தியா எனக் குறிப்பிடப்படுகிறது. கிமு 8ம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய கிரேக்க வணிகர்கள் தமது நாகரிகத்தை டனைஸ் மற்றும் பனகோரியா ஆகிய இடங்களிலுள்ள தமது வணிக நிலையங்களுக்கு கொண்டுவந்தனர். கிபி 3ம்-4ம் நூற்றாண்டுகளில் ஒய்யமின் கோதிக் பேரரசு தென் ரசியாவில் காணப்பட்டது. ஹூணர்களால் அழிக்கப்படும் வரை இது நிலைத்திருந்தது. கிபி 3ம் நூற்றாண்டுக்கும், 6ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிரேக்க அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொஸ்போரன் பேரரசு ஆட்சிக்கு வந்தது. இதுவும் பின்னர் ஹூணர்கள் மற்றும் யுரேசிய அவார்கள் போன்ற போர் நாட்டமுள்ள நாடோடிகளின் ஆக்கிரமிப்பினால் வெற்றிகொள்ளப்பட்டது. 10ம் நூற்றாண்டு வரை, கசார்கள் எனப்பட்ட துருக்கிய மக்கள் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட கீழ் வொல்கா புல்வெளியில் ஆட்சி செலுத்தினர்.

நவீன ரசியர்களின் மூதாதையர்கள், மரங்கள் அடர்ந்த பின்ஸ்க் சதுப்பு நிலத்தைத் தாயகமாகக் கொண்ட ஸ்லாவியக் குழுக்கள் என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். கிழக்கு ஸ்லாவியர்கள் மேற்கு ரசியாவில் இரண்டு தடவைகளிலாகக் குடியேறியுள்ளனர்: அவை, கீவிலிருந்து இன்றைய சுஸ்டால் மற்றும் முரோம் நோக்கிய ஒரு நகர்வும், பொலோட்ஸ்க்கிலிருந்து, நோவோகொரட் மற்றும் ரொஸ்டோவ் நோக்கிய இன்னொரு நகர்வுமாகும். 7ம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு ஸ்லாவியர்களின் சனத்தொகை மேற்கு ரசியாவில் அதிகரித்ததோடு, அங்கு வாழ்ந்த மெர்யா, முரோமியன் மற்றும் மெச்செரா போன்ற ஃபின்னோ-உக்ரிக் மக்களைத் தம்முள் மெதுவாக உள்வாங்கிக் கொண்டனர்.

கீவிய ரசியா

9ம் நூற்றாண்டில் முதலாவது கிழக்கு ஸ்லாவிய நாடுகளின் நிறுவுகை, பால்டிக் கடல் பகுதியினரான போர்வீரர்களும், வர்த்தகர்களும், குடியேறிகளுமான வராங்கியர்களின் வருகையுடன் மேற்பொருந்துகிறது. ஆரம்பத்தில் இவர்கள் ஸ்கண்டிநேவியாவிலிருந்த வைக்கிங்குகளுடன் தொடர்புற்றிருந்தனர். இவர்கள் கிழக்கு பால்டிக் கடலிலிருந்து கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வரை பயணம் மேற்கொண்டனர். ஆரம்ப வரலாற்றுக் குறிப்புகளின் படி ரூரிக் எனப்பட்ட வராங்கியன் இனத்தவன் 862ல் நோவோகொரட்டின் ஆட்சியாளனாகத் தெரிவு செய்யப் பட்டான். இவனுக்குப் பின் வந்த ஒலெக் என்பவன் தென் பகுதிக்குப் படையெடுத்து கசார்களின் தலைமையிடமான கீவைக் கைப்பற்றி கீவிய ரசியாவைத் தோற்றுவித்தான். ஒலெக், ரூரிக்கின் மகனான இகோர் மற்றும் இகோரின் மகனான ஸ்வியாடொஸ்லாவ் ஆகியோர் தொடர்ச்சியாக கீவின் ஆட்சியாளர்களானதோடு, கிழக்கு ஸ்லாவிய மக்களையும் கீழடக்கினர். மேலும் இவர்கள் கசார்களின் அரசை அழித்ததுடன் பைசாந்தியம், பாரசீகம் போன்ற இடங்களுக்கும் படையெடுப்புகளை மேற்கொண்டனர்.

10ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை, கீவிய ரசியா ஐரோப்பாவின் பாரிய, வளமிக்க பேரரசாக உருவாகியது. மகா விளாடிமிர் (980–1015) மற்றும் அவனது மகனான புத்தியுள்ள யரோஸ்லாவ் (1019–1054) ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் கீவின் பொற்காலமாகக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பைசாந்தியத்தில் நிலைபெற்றிருந்த பழமைவாதக் கிறிஸ்தவத்தை இவர்கள் தழுவிக்கொண்டதுடன், முதலாவது எழுதப்பட்ட ஸ்லாவிய சட்டக் கோவையான ரஸ்கயா ப்ராவ்டாவையும் உருவாக்கினர்.

11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில், கிப்சக்க்குகள் மற்றும் பெச்செனெக்குகள் போன்ற துருக்கிய குழுக்களின் தொடர் தாக்குதல்களால் ஸ்லாவிய மக்கள் பாதுகாப்பான, காடுகளால் சூழப்பட்ட சலெஸ்யே போன்ற வடக்குப் பகுதிகளுக்குப் பாரியளவில் குடிபெயர்ந்தனர்.

கீவிய ரசியாவை ஆண்ட ரூரிக் வம்சத்தினரிடையேயான தொடர்ச்சியான உட்போர்கள் காரணமாக மானியமுறைமையும் அதிகாரப் பரவலாக்கமும் ஏற்பட்டது. கீவின் அதிகாரம் நலிவடைந்ததால் வடகிழக்கில் விளாடிமிர்-சுஸ்டால், வடமேற்கில் நோவோகொரட் குடியரசு, தென்மேற்கில் கலிசியா-வொல்கினியா போன்ற சுயாதீன அரசுகள் உருவாகின.

இறுதியாக 1237–40ல் மொங்கோலியரின் படையெடுப்பினால் கீவிய ரசியா பிளவடைந்தது. இது கீவின் அழிவுக்கும், ரசியாவின் அரைவாசி மக்களின் அழிவுக்கும் காரணமானது. தாத்தார்கள் எனப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கோல்டன் ஹோர்ட் எனப்பட்ட நாட்டை உருவாக்கினர். இவர்கள் ரசியச் சிற்றரசுகளைக் கொள்ளையடித்ததோடு, ரசியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்டனர்.

கலிசியா-வொல்கினியா போலிய-லிதுவேனிய பொதுநலவாயத்தினுள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டதோடு, கீவின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்த விளாடிமிர்-சுஸ்டால் மற்றும் நோவோகொரட் குடியரசு ஆகிய பகுதிகளில் மொங்கோலியர் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு பகுதிகளுமே நவீன ரசிய நாட்டுக்கான அடிப்படையாகும். மொங்கோலியப் படையெடுப்பின்போது நோவோகொரட் மற்றும் ஸ்கோவ் ஆகியன சிறிதளவு சுயாட்சி அதிகாரம் உடையனவாக இருந்தன. மேலும் இவை நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அட்டூழியங்களிலிருந்தும் தப்பிக்கொண்டன. அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்ற இளவரசனால் வழிநடத்தப்பட்ட நோவோகொராடியர்கள் 1240ல் நடைபெற்ற நேவா போரின் மூலம் சுவீடிய ஆக்கிரமிப்பையும், 1242ல் நடைபெற்ற ஐஸ் போரின் மூலம் ஜெர்மானிய சிலுவைப் போராளிகளின் ஆக்கிரமிப்பையும் தடுத்து, வடக்கு ரசியாவை ஆக்கிரமிக்கும் அவர்களது முயற்சியையும் முறியடித்தனர்.

மொஸ்கோவின் பெரும் டச்சி

கீவிய ரசியாவின் வழிவந்த, மிகவும் பலம்வாய்ந்த அரசு மொஸ்கோவின் பெரும் டச்சி ஆகும் (மேலைத்தேய குறிப்புகளில் “மொஸ்கோவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆரம்பத்தில் இது விளாடிமிர்-சுஸ்டாலின் ஒரு பகுதியாக இருந்தது. மொங்கோலிய-தாத்தார்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், அவர்களின் உதவியுடன் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய ரசியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. மேலும், படிப்படியாக, ரசியாவின் ஒன்றிணைவு மற்றும் விஸ்தரிப்புக்கான பிரதான சக்தியாகவும் இது உருவெடுத்தது.

மொங்கோலிய-தாத்தார்களின் தொடர் தாக்குதல்களாலும், பனிக்காலத் தொடக்கத்தினால், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களாலும் துன்பப்பட்டது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, பிளேக் நோய் ரசியாவையும் பாதித்தது. 1350இலிருந்து 1490 வரை ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசியாவின் பகுதிகள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டன. எவ்வாறாயினும், குறைந்த சனத்தொகை அடர்த்தி, சிறந்த சுகாதார நடைமுறைகள் (பரவலான, ஈர ஆவிக் குளியல் நடைமுறை) காரணமாக, பிளேக் நோயினால் ஏற்பட்ட இழப்புகள், மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது போன்று பெரியளவில் ஏற்படவில்லை. 1500 ஆகும்போது ரசியாவின் சனத்தொகை பிளேக் நோய்க்கு முன்னரான அளவுக்கு உயர்ந்தது.

மொஸ்கோவின் டிமித்ரி டொன்ஸ்கோயினால் வழிநடத்தப்பட்டதும், ரசிய பழமைவாத திருச்சபையினால் உதவி வழங்கப்பட்டதுமான ரசியப் பகுதிகளின் ஐக்கிய இராணுவம், 1380இல் நடைபெற்ற குலிகோவோ போரில் மொங்கோலிய-தாத்தார்களைத் தோற்கடித்து சாதனை படைத்தது. சிறிது சிறிதாக அருகிலிருந்த பகுதிகளும் மொஸ்கோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள் மொஸ்கோவின் முன்னைய எதிரிகளான ட்வெர் மற்றும் நோவ்கோகொரட் போன்றனவும் அடங்கும்.

மூன்றாம் இவான் (தி கிரேட்) இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது “முழு ரசியாவினதும் பெரும் டியூக்” பட்டத்தைப் பெற்றவனாவான். 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ கிழக்கு ரோமப் பேரரசின் ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான்.

ரசியாவில் சார் ஆட்சி

மூன்றாம் ரோமச் சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், பெரும் டியூக்கான 4ம் இவான் (“மிகச்சிறந்த”) 1547ல், ரசியாவின் முதல் சார் (“சீசர்”) ஆக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டான். சார் மன்னன் ஒரு புதிய சட்டத் தொகுப்பை (1550ன் சுடெப்னிக்) வெளியிட்டான். இதன் மூலம் முதலாவது ரசிய மானியமுறை அமைப்பு (செம்ஸ்கி சொபோர்) உருவாக்கப்பட்டதோடு கிராமியப் பகுதிகளுக்கு உள்ளூர் சுயாட்சி அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவனது நீண்ட ஆட்சிக்காலத்தின்போது, மூன்று தாத்தார் கானேட்டுகளான (கோல்டன் ஹோர்டின் சிதறிய பகுதிகள்), வொல்கா நதிக்கருகில் இருந்த கசான் மற்றும் அஸ்ட்ராகான் என்பவற்றையும், தென்மேற்கு சைபீரியாவிலிருந்த சைபீரியன் கானேட்டையும் இணைத்த பயங்கர இவான், ஏற்கனவே பெரிதாக இருந்த ரசியப் பகுதியை கிட்டத்தட்ட இருமடங்காக்கினான். இதனால், 16ம் நூற்றாண்டின் முடிவில் ரசியாவை பல்லின, பல்சமய மற்றும் கண்டம் கடந்த ஒரு நாடாக்கினான்.

எவ்வாறாயினும், பால்டிக் கரையைக் கைப்பற்றுவதற்கும், கடல் வணிகம் மேற்கொள்வதற்கும், போலந்து, லிதுவானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நீண்ட, தோல்விகரமான லிவோனியப் போரின் காரணமாக சார் ஆட்சி வலுவிழந்தது. இதேவேளை, கோல்டன் ஹோர்டின் எச்சமான கிரிமியன் கானேட்டின் தாத்தார்கள், தென்ரசியாவில் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களை மேற்கொண்டனர். 1571ல், வொல்கா கானேட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கிரிமியர்களும் அவர்களது ஒட்டோமான் கூட்டணியினரும் மத்திய ரசியாவை ஆக்கிரமித்து மொஸ்கோவின் பகுதிகளை எரியூட்டினர். ஆனாலும்,அடுத்த ஆண்டே மொலோடி போரில், இப்பாரிய ராணுவம் ரசியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ரசியாவில் ஒட்டோமன்-கிரிமியன் பரவலை தடுத்துக்கொண்டனர். கிரேட் அபாடிஸ் லைன் போன்ற பாரிய கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டு எதிரிப் படையெடுப்புக்கான பகுதிகள் குறுக்கப்பட்டன. ஆயினும், 17ம் நூற்றாண்டு வரையில் கிரிமியர்களின் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601–03 பஞ்சம் உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன. போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது.

17ம் நூற்றாண்டில் கொசக்குகளின் காலத்தில் ரசியா தனது நிலப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கத் தொடங்கியது. கொசக்குகள் என்போர், கொள்ளையர் மற்றும் புதுநில ஏகுனர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமூகங்கள் ஆவர். 1648ல், கெமெல்நைட்ஸ்கி கிளர்ச்சியின்போது போலந்து-லிதுவானியாவுக்கு எதிராக, உக்ரேனின் விவசாயிகள் சபோரோசியன் கொசக்குகளில் இணைந்து கொண்டனர். இதற்குக் காரணம், போலிய ஆட்சியின்கீழ் சமூக, மத அடக்குமுறைகளுக்கு உள்ளானமையேயகும்.1654ல் உக்ரேனிய தலைவரான போடான் கெமெல்நைட்ஸ்கி, உக்ரேன் ரசிய சார் மன்னரான முதலாம் அலெக்சியின் பாதுகாப்பில் இருப்பதற்கு சம்மதித்தார். அலெக்சி இதற்கு சம்மதித்ததால், இன்னொரு ரசிய-போலிய யுத்தம் (1654–1667) ஏற்பட்டது. இறுதியில், நீப்பர் நதியை எல்லையாகக் கொண்டு உக்ரேன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப்பகுதி (அல்லது வலது கரை) போலிய கட்டுப்பாட்டிலும், கிழக்குப்பகுதி (அல்லது இடதுகரை மற்றும் கீவ்) ரசிய கட்டுப்பாட்டிலும் இருந்தன. பின்பு, 1670–71ல் ஸ்டென்கா ரசினால் வழிநடத்தப்பட்ட டொன் கொசக்குகள் வொல்கா பகுதியில் பாரிய கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். ஆயினும் சாரின் படைகள் கலகத்தை வெற்றிகரமாக அடக்கின.

கிழக்குப் பகுதியில், பெரும்பாலும் கொசக்குகளால், சைபீரியாவின் பல பகுதிகளில் விரைவான ரசிய கண்டுபிடிப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும், பெறுமதிமிக்க, விலங்குகளின் தோல் மற்றும் தந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டன. ரசிய கண்டுபிடிப்பாளர்கள் சைபீரிய நதித் தடங்கள் வழியே மேலும் கிழக்கு நோக்கி பயணித்தனர். 17ம் நூற்றாண்டளவில் கிழக்கு சைபீரியாவின், சூச்சி தீபகற்பம், அமுர் நதிக்கரை, மற்றும் பசுபிக் கரையோரங்களில் ரசியக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1648ல், ஆசியாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான பெரிங் நீரிணை, ஃபெடோட் போபோவ் மற்றும் செம்யோன் டெஸ்ன்யோவ் ஆகியோரால் முதன்முதலில் கடக்கப்பட்டது.

ரசியப் பேரரசு

1721ல், மகா பீட்டரின் கீழ், ரசியா ஒரு பேரரசானதுடன், அறியப்பட்ட உலக வல்லரசானது. 1682இலிருந்து 1725 வரை அரசாண்ட பீட்டர், பெரும் வடக்குப் போரில் சுவீடனைத் தோற்கடித்தான். மேலும், மேற்கு கரேலியா, இங்கிரியா (குழப்பகாலத்தின் போது ரசியாவால் இழக்கப்பட்ட இரு பிரதேசங்கள்), எஸ்ட்லாந்து மற்றும் லிவ்லாந்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டான். இதன்மூலம் ரசியாவுக்கு கடல் வழிப் போக்குவரத்தும், கடல் வணிகமும் மேற்கொள்ள முடியுமாயிருந்தது. பால்டிக் கடற்கரையில் பீட்டர் புதிய தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை நிறுவினான். இது பிற்காலத்தில் ரசியாவின் ஐரோப்பாவுக்கான நுழைவாயில் என அழைக்கப்பட்டது. பீட்டரின் பாரிய மறுசீரமைப்புக்கள் ரசியாவில் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பிய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்தின.

1741–62 வரை, முதலாம் பீட்டரின் மகளான எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தில் ரசியா ஏழாண்டுப் போரில் பங்கேற்றது (1756–63). இந்த போராட்டத்தின்போது, ரசியா கிழக்குப் பிரசியாவையும், மேலும் பெர்லினையும் சிறிதுகாலம் இணைத்திருந்தது. எவ்வாறாயினும், எலிசபெத்தின் மரணத்தின் பின், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பிரதேசங்களும், ரசியாவின் மூன்றாம் பீட்டரினால் பிரசியப் பேரரசுக்கு திருப்பி வழங்கப்பட்டது.

1762–96 வரை ஆண்ட இரண்டாம் கத்தரீன் ரசிய அறிவொளிக் காலத்துக்கு தலைமை தாங்கினார். இவர் போலிய-லிதுவானிய பொதுநலவாயத்தின் மீது ரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதோடு, போலந்து பிரிவினையின் போது, இதன் பெரும்பாலான பகுதிகளை ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ரசியாவின் மேற்கெல்லை மத்திய ஐரோப்பா வரை பரந்தது. ஒட்டோமன் பேரரசுக்கெதிரான ரசிய-துருக்கியப் போர்களின் வெற்றியின் பின் கிரிமியன் கானேட்டைத் தோற்கடித்ததன் மூலம் அவர் ரசியாவின் தென் எல்லையை கருங்கடல் வரை விரிவு படுத்தினார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டோமன்களுக்கெதிரான வெற்றிகளைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்காக்கேசியாவின் சில பகுதிகளையும் பெற்றுக்கொண்டது. முதலாம் அலெக்சாண்டரின் (1801–25), 1809ல், பலவீனமான சுவீடனிடமிருந்தான பின்லாந்தின் பறித்தெடுப்பு, 1812ல், ஒட்டோமன்களிடமிருந்தான பெஸ்ஸராபியாவின் பறித்தெடுப்பு என, இவ் விரிவுபடுத்தல் தொடர்ந்தது. இதேவேளை ரசியர்கள் அலாஸ்காவில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதோடு, கலிபோர்னியாவிலும் கூட (ஃபோர்ட் ரொஸ்) தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

1803–06 வரை முதலாவது ரசிய உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க கடற்பயணங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன. 1820ல் ஒரு ரசிய நாடுகாண் பயணத்தின் மூலம் அண்டார்டிக்கா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் ரசியா, நெப்போலியனின் பிரான்சுக்கெதிராகப் போராடியது. 1812ல் உச்ச நிலையிலிருந்த நெப்போலியனின் ஐரோப்பிய சேனை, ரசியர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ரசியாவின் கொடூரமான குளிர்காலம் என்பன காரணமாக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இப் போரில் நெப்போலியனின் 95%மான படை அழிந்தது. மிகெய்ல் குட்டுசோவ் மற்றும் பார்கிளே டி டொலி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட ரசியப்படை, ஆறாம் கூட்டணியின் போரின் மூலம், நெப்போலியனின் படையை ரசியாவிலிருந்து வெளியேற்றியதோடு, ஐரோப்பா வழியாக இறுதியில் பாரிஸ் நகர் வரை துரத்தியடித்து நகருக்குள் நுழைந்தன. ரசியாவின் சார்பில் முதலாம் அலெக்சாந்தர் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாடு நெப்போலியனுக்குப் பின்னான ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுத்தது.

நெப்போலியப் போர்களில் கலந்துகொண்ட அதிகாரிகள் தாராளவாதம் பற்றிய சிந்தனையை ரசியாவுக்கு எடுத்து வந்தனர். 1825ல் நடத்தப்பட்ட, வெற்றிபெறாத, டிசம்பர் புரட்சியின் மூலம் சார் மன்னரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் இவர்கள் முயற்சித்தனர். முதலாம் நிக்கலசின் (1825–55) பழமைவாத ஆட்சியின் முடிவில், கிரிமியன் போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ரசியாவின் ஐரோப்பா மீதான அதிகாரமும், செல்வாக்கும் தகர்ந்தது. 1847க்கும், 1851க்குமிடையில் ரசியா முழுவதும் பரவிய ஆசியக் கொலரா ஒரு மில்லியன் உயிர்களைக் காவு கொண்டது.

நிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் அலெக்சாண்டர் (1855–81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877–78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, பல்கேரியாவை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894–94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான இரண்டாம் நிக்கலஸ் (1894–1917) 1905ன் ரசியப் புரட்சியைத் தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் இரத்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, சைபீரியாவுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.

1914ல் ரசியாவின் கூட்டாளியான செர்பியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரசியா முதலாம் உலக யுத்தத்தினுள் பிரவேசித்தது. இதன் முக்கூட்டு நட்பு அணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல்வேறு போர்முனைகளில் போராடவேண்டியிருந்தது. 1916ல் ரசிய ராணுவத்தின் பிரசிலோவ் தடுப்பு நடவடிக்கை மூலமாக ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர்ச் செலவுகள், உயர் இழப்புகள், ஊழல் பற்றிய வதந்தி மற்றும் தேசத்துரோகம் என்பன காரணமாக ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகள் 1917ல் இரு தடவைகளில் நடந்த ரசியப் புரட்சிக்கான சூழலை உருவாக்கியது.

பெப்ரவரி புரட்சி காரணமாக இரண்டாம் நிக்கலஸ் பதவி துறந்தான். ரசிய சிவில் போரின்போது, இவனும் இவனது குடும்பமும் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்பட்டனர். முடியாட்சி, பலவீனமான, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்ட தற்காலிக அரசாங்கத்தால் பிரதியிடப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் மாற்று சோசலிச ஆட்சி இடம்பெற்றது. இதன் அதிகாரம் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சபையிடம் இருந்தது. இச்சபை சோவியத் எனப்பட்டது. புதிய அதிகார சபைகளின் ஆட்சி நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து, போல்செவிக் தலைவர் விளாடிமிர் லெனினால் நடத்தப்பட்ட அக்டோபர் புரட்சியின் மூலம், இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடு உருவாகியது.

சோவியத் ரசியா

அக்டோபர் புரட்சியை அடுத்து கொம்யூனிச எதிர்ப்பு வெள்ளை இயக்கத்துக்கும், செஞ்சேனையுடனான புதிய சோவியத் ஆட்சிக்குமிடையில் சிவில் போர் ஒன்று தொடங்கியது. பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் மூலம், ரசியா, முதலாம் உலகப்போரில் மைய சக்திகளை எதிர்த்த அதன் உக்ரேனிய, போலிய, பால்டிக் மற்றும் ஃபின்னியப் பகுதிகளை இழந்தது. கொம்யூனிச எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாக, நேச நாடுகள் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இதேவேளையில், போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கமும் மாறிமாறி நாடுகடத்தல்களையும் மரண தண்டனைகளையும் மேற்கொண்டன. இச் செயற்பாடுகள் முறையே செம் பயங்கரம் மற்றும் வெண் பயங்கரம் என அழைக்கப்பட்டன. சிவில் போரின் முடிவில், ரசியப் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் மிகவும் பாதிப்படைந்தன. மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாயினர். மேலும், 1921ன் பொவொல்ஸ்யே பஞ்சத்தால் 5 மில்லியன் பேர் இறந்தனர்.

டிசம்பர் 30, 1922ல், ரசிய சோவியத் கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு (அந்த நேரத்தில் ரசிய சோசலிச கூட்டாட்சி சோவியத் குடியரசு என அழைக்கப்பட்டது), உக்ரேனிய, பெலாரசிய மற்றும் ட்ரான்ஸ்காக்கேசிய சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அல்லது சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிக் கொண்டன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கிய 15 குடியரசுகளில், ரசிய சோவியத் சோசலிசக் கூட்டுக் குடியரசே பரப்பளவில் மிகவும் பெரியதாகும். மேலும், இது சோவியத் ஒன்றியத்தின் மொத்த சனத்தொகையின் அரைவாசியிலும் மேலதிகமான சனத்தொகையையும் கொண்டிருந்தது. இதுவே 69-வருடகால ஒன்றிய வரலாற்றில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது.

1924ல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து, ட்ரொய்க்கா எனப்பட்ட குழுவொன்று சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிய அமர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், கொமியூனிசக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளரான ஜோசப் ஸ்டாலின், அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டார். 1929ல், உலகப் புரட்சியின் முக்கிய ஆதரவாளரான, லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஸ்டாலினின் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. பெரும் துப்பரவாக்கத்தின்போது, போல்செவிக் கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் உச்சநிலையை அடைந்தது. 1937–38 வரையான இந்த அடக்குமுறை வாய்ந்த காலகட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலாத்கார ஆட்சி மாற்றத்துக்கு திட்டம் தீட்டிய இராணுவத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் திட்டமிட்ட பொருளாதாரம், பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் விவசாயக் கூட்டுப் பண்ணைகள் என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். கடுமையான சட்டங்கள் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932–33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது.

அடோல்ப் ஹிட்லரின் ரூர், ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக செக்கோசிலோவாக்கியா ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக நாசி ஜெர்மனியின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை ஜெர்மன் ரெய்க், சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938–39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது.

ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது.

சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது. இது இரண்டாம் உலகப்போரின் முக்கிய களமாக மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942–43 குளிர்காலத்தில் நடைபெற்ற ஸ்டாலின்கிராட் போரிலும், 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். லெனின்கிராட் முற்றுகையும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941–44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை. ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் வட கொரியாவிலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.

இரண்டாம் உலகப்போரின் 1941–45 காலப்பகுதி ரசியாவில் பெரும் நாட்டுப்பற்றுப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6 மில்லியன் ராணுவத்தினரும், 15.9 மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர். இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும். சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது. ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது.

போருக்குப் பின், செஞ்சேனை, கிழக்கு ஜெர்மனி உட்பட கிழக்கு ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக் கொண்டது. தங்கியிருக்கும் சோசலிச அரசாங்கங்கள் கிழக்குப்பகுதிக் கண்காணிப்பு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. உலகின் இரண்டாவது அணுவாயுத நாடாக உருவான சோவியத் ஒன்றியம், வார்சோ உடன்படிக்கையை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவற்றுடன் பனிப்போர் என அறியப்பட்ட, உலக ஆதிக்கத்துக்கான போட்டியுள் இறங்கியது. உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு, சோவியத் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியது. இவற்றுள் புதிதாக உருவான சீன மக்கள் குடியரசு, கொரிய சனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபக் குடியரசு போன்றனவும் அடங்கும். குறிப்பிடத்தக்களவு சோவியத் வளங்கள், ஏனைய சோசலிச நாடுகளுக்கு, உதவியாக ஒதுக்கப்பட்டது.

ஸ்டாலினின் மரணத்துக்குப்பின், குறுகியகால கூட்டுத்தலைமையின் கீழ், புதிய தலைவரான நிக்கிட்டா குருசேவ், ஸ்டாலினின் கொள்கைகளை விமர்சித்ததோடு, ஸ்டாலின்மய ஒழிப்புக் கொள்கைகளைச் செயற்படுத்தினார். தொழிலாளர் வதை முகாம்கள் ஒழிக்கப்பட்டன. பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர் (இவர்களுல் பலர் இறந்திருந்தனர்). பொதுவான அடக்குமுறைக் கொள்கைகளின் தளர்வு, பின்பு குருசேவ் தளர்வு என அழைக்கப்பட்டது. இதேவேளை, துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜூபிட்டர் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை மற்றும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுடனான முறுகல்நிலை அதிகரித்தது.

1957ல், சோவியத் ஒன்றியம் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1ஐ ஏவியதன் மூலம் விண்வெளி யுகத்தை ஆரம்பித்தது. ரசிய விண்வெளி வீரரான யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று, வாஸ்ட்டாக் 1 விண்கலத்தில் புவியை வலம்வந்து, விண்வெளியை வலம்வந்த முதல் மனிதரானார்.

1964ல் குருசேவின் ஓய்வைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டுத் தலைமை ஆட்சி நடைபெற்றது. இறுதியில் லியோனிட் பிரெஷ்னெவ் தலைவராக ஆனார். 1970கள் மற்றும் முன் 1980கள், தடங்கல் யுகம் என அழைக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்ததோடு, சமூகக் கொள்கைகள் தடங்கலுற்றன. சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவில் பன்முகப்படுத்தல் மற்றும் பெருங் கைத்தொழில் மற்றும் ஆயுத உற்பத்தியை, சிறுகைத்தொழில் மற்றும் நுகர்வோர் பண்டங்களாக மாற்றுதல் என்பவற்றை நோக்காகக் கொண்ட, 1965ன் கோசிஜின் சீர்திருத்தம் பழைமைவாத கொம்யூனிசத் தலைமையால் தடுக்கப்பட்டது.

1979ல், ஆப்கானிஸ்தானில் கொம்யூனிஸ்டுகள் தலைமையிலான புரட்சியின் பின், புதிய தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானினுள் நுழைந்தன. இதனால் ஆப்கானிஸ்தானின் வளங்கள் சுரண்டப்பட்டதோடு, எந்தவிதமான கருதத்தக்க அரசியல் திருத்தங்களும் ஏற்படவில்லை. இறுதியாக, சர்வதேச எதிர்ப்பு (அமெரிக்க ஆதரவுடனான), கொம்யூனிச எதிர்ப்பு கெரில்லாப் போர் மற்றும் சோவியத் மக்களின் ஆதரவின்மை என்பன காரணமாக 1989ல் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது.

1985இலிருந்து, சோவியத் முறைமையில் தாராளவாத சீர்திருத்தங்களை ஏற்படுத்த விரும்பிய , இறுதி சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பச்சோவ், கிளாஸ்னொஸ்ட் (திறந்தநிலை) மற்றும் பெரஸ்ட்ரோயிகா (மீள்கட்டமைப்பு) ஆகிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத் தடங்கல் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாங்கத்தை சனநாயக மயப்படுத்தவும் அவர் முயற்சித்தார். எவ்வாறாயினும், இக்கொள்கைகள் காரணமாக வலுவான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. 1991க்கு முன், சோவியத் பொருளாதாரம் உலகளவில் இரண்டாவது நிலையில் காணப்பட்டது. எனினும், அதன் இறுதிக் காலத்தில், பலசரக்குக் கடைகளில் பொருள் பற்றாக்குறையாலும், பாரிய பாதீட்டுப் பற்றாக்குறையாலும், பாரிய பணச்சுற்றோட்டம் காரணமாக பணவீக்கத்தாலும் அல்லலுற்றது.

1991ன் போது, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதனால் பால்டிக் குடியரசு நாடுகள் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லத் தீர்மானித்தன. மார்ச் 17ல், பொது வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியத்தை புதிய கூட்டரசாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகஸ்ட் 1991ல், கோர்பச்சேவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிசக் கட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க, கோர்பச்சேவின் அரசாங்க உறுப்பினர்கள் புரட்சியொன்றை நடத்தினர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டிசம்பர் 25, 1991ல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது.

ரசியக் கூட்டரசு

ரசிய வரலாற்றிலேயே முதலாவதாக, சூன் 1991ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில், போரிஸ் யெல்ட்சின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் சிதறலின் போதும், அதன் பின்னரும் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கல் ஆகியவை உட்பட பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவாலும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் பரிந்துரைக்கப்பட்ட, அதிர்ச்சி வைத்தியம் எனப்பட்ட விரைவான பொருளாதார மாற்றமும் அடங்கும். இம் மாற்றங்கள் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1990–95 காலப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், கைத்தொழில் விளைபொருட்களிலும் 50% வீழ்ச்சி ஏற்பட்டது.

தனியார்மயமாக்கலால், வணிக நிறுவனங்களின் கட்டுப்பாடு, அரசாங்க முகவர்களிடமிருந்து, அரச முறைமையில் தொடர்புகளைப் பேணிய தனியாரிடம் சென்றடைந்தது. பல புதிய செல்வந்த வணிகர்கள் பில்லியன் கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நாட்டுக்கு வெளியில் எடுத்துச் சென்றமையால் பாரிய மூலதன வெளியேற்றம் ஏற்பட்டது. நாட்டினதும் பொருளாதாரத்தினதும் வீழ்ச்சியால், சமூக சேவைகள் சீர்குலைந்தன. பிறப்பு வீதம் குறைவடைந்து, இறப்பு வீதம் அதிகரித்தது.[சான்று தேவை] பிந்திய சோவியத் யுகத்தில் 1.5%மாக இருந்த வறுமை மட்டம், 1993ன் நடுப்பகுதியில் 39-49%மாக ஆகியது. இதனால் மில்லியன் கணக்கானோர் வறுமையில் மூழ்கினர். 1990களில் கடுமையான ஊழல் மற்றும் ஒழுங்கீனம், குற்றவியல் குழுக்களின் எழுச்சி மற்றும் வன்முறைகள் என்பன காணப்பட்டன.

1990களில், வட காக்கசசில் உள்நாட்டு இனக்கலவரங்கள் மற்றும் இசுலாமியக் கிளர்ச்சி ஆகியவற்றால் ஆயுதப் போராட்டங்கள் ஏற்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் செச்சென் பிரிவினைவாதிகள் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து, போராளிகளுக்கும், ரசிய ராணுவத்துக்குமிடையில் கெரில்லாப் போர் நடைபெற்றது. பிரிவினைவாதிகளால், மக்களுக்குக்கெதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மொஸ்கோ திரையரங்குப் பணயக் கைதிகள் பிரச்சினை மற்றும் பெஸ்லான் பாடசாலை முற்றுகை என்பன குறிப்பிடத்தக்கன. இதனால் நூற்றுக்கணக்கானோர் இறந்ததோடு உலகத்தின் கவனமும் ரசியா நோக்கித் திரும்பியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின்போது, ரசியாவின் மக்கள்தொகை சோவியத் ஒன்றிய மக்கள்தொகையின் அரைப்பங்காக இருந்த போதிலும், ரசியா சோவியத் ஒன்றியத்தின் வெளிக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டது. உயர் பாதீட்டுப் பற்றாக்குறை காரணமாக 1998ல் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் வீழ்ச்சியடைந்தது.

டிசம்பர் 31, 1999ல் யெல்ட்சின் சனாதிபதிப் பதவியிலிருந்து விலகி ஆட்சிப்பொறுப்பை அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த விளாடிமிர் புட்டினிடம் ஒப்படைத்தார். 2000ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலிலும் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். வட காக்கசஸ் பகுதிகள் சிலவற்றில் வன்முறைகள் இடம்பெற்றாலும், செச்சென் கிளர்ச்சியை புட்டினால் அடக்கக் கூடியதாயிருந்தது. உள்நாட்டுத் தேவை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றிலான உயர்வு, உயர் எண்ணெய் விலை மற்றும் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியன காரணமாக அடுத்த ஒன்பது வருடங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் ரசியாவின் வாழ்க்கைத்தரமும், அதன் உலகளவிலான ஆதிக்கமும் அதிகரித்தது. புட்டினின் பதவிக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் மேற்கத்தேய நாடுகளால் சனநாயக முறையற்றது என விமர்சிக்கப்பட்டாலும், புட்டினின் தலைமைத்துவத்தின் கீழான நாட்டின் உறுதிநிலை மற்றும் வளர்ச்சி காரணமாக ரசியா முழுவதும் புடினின் செல்வாக்கு அதிகரித்தது.

மார்ச் 2, 2008 அன்று, திமித்ரி மெட்வெடெவ் ரசிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, புட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 சனாதிபதித் தேர்தலையடுத்து, புடின் சனாதிபதியானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அரசியல்

உருசிய அரசியலமைப்பின் படி அந் நாடு சனாதிபதியை நாட்டுத் தலைவராகவும், பிரதம அமைச்சரை அரசுத் தலைவராகவும் கொண்ட ஒரு கூட்டாட்சி, அரை-சனாதிபதி முறைக் குடியரசு ஆகும். உருசியக் கூட்டமைப்பு அடிப்படையில் பல கட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஆகும். இதில் கூட்டாட்சி அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது:

  • சட்டவாக்கம்,
  • நிறைவேற்றல்,
  • நீதி.

ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட சனாதிபதியை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்கின்றனர். ஒருவர் இரண்டாவது முறையும் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் எனினும், தொடர்ச்சியாக மூன்று முறை சனாதிபதியாக இருக்க முடியாது. அரசின் அமைச்சுக்களில் பிரதமர், அவரது துணை அமைச்சர்கள், அமைச்சர்கள், தெரிவு செய்யப்பட்ட பிறர் என்போர் அடங்குவர். பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க சனாதிபதி அமைச்சர்களுக்குப் பதவி வழங்குகிறார். பிரதமர் பதவிக்கு “டூமா”வின் சம்மதம் தேவை. உருசியாவில் உள்ள கட்சிகளுள், ஐக்கிய உருசியக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி, உருசியத் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, நீதிமுறை உருசியா ஆகியன அடங்கும்.

உருசியாவின் உள் ஆளுகைப்பிரிவுகள்

உலகின் அதிக பரப்பளவு கொண்ட உருசிய நாடு 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவை

  • 21 உட்குடியரசுகள்
  • 47 ஓப்லாஸ்துகள்
  • 8 பிரதேசங்கள்
  • 6 தன்னாட்சி வட்டாரங்கள்
  • 1 தன்னாட்சி ஓப்லஸ்துகள்
  • 2 கூட்டமைப்பு நகரங்கள்

இணைப்புகள்

உருசியா – விக்கிப்பீடியா

Russia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *