உருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் தான்சானியா, உகாண்டா, புருண்டி, மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1994ல் இந்நாட்டில் நடந்த படுகொலைகளில் 5 இலட்சத்துக்கு மேல் உருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர். இது உருவாண்டாப் படுகொலை என அறியப்படுகிறது.
பாலினச் சமத்துவம்
நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தின் 2013ஆம் வருட ஆய்வறிக்கையின்படி, சர்வதேச அளவில் அரசியல் பாலினச் சமத்துவத்தில் உருவாண்டா முதலிடம் வகிக்கிறது .மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேரில் 45 பேர் பெண்கள்.
புவியியல்
உருவாண்டா 26,338 சதுர கிலோமீற்றர்ர் (10,169 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், உலக நாடுகளில் பரப்பளவு அடிப்படையில் 149 ஆவது இடத்தை வகிக்கின்றது. இது புருண்டி, எயிட்டி மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருக்கின்றது. நாடு முழுவதும் உயரமான பகுதியிலேயே அமைந்துள்ளது. இதன் மிகத்தாழ்வான இடம் கடல் மட்டத்திலிருந்து 950 மீற்றர் (3,117 அடி) உயரத்திலுள்ள ருசிசி ஆறு (Rusizi River) ஆகும். உருவாண்டா ஆபிரிக்காவின் மத்திய/கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. உருவாண்டாவின் மேற்குத் திசையில் காங்கோ மக்களாட்சிக் குடியரசும், வடக்குத் திசையில் உகண்டாவும், கிழக்குத் திசையில் தான்சானியாவும், தெற்குத் திசையில் புருண்டியும் அமைந்துள்ளன. உருவாண்டா மத்திய கோட்டிற்கு சில பாகைகள் தெற்காக அமைந்துள்ளதுடன் இது நான்குதிசையிலும் நிலம் சூழ்ந்த நாடாக உள்ளது. உருவாண்டாவின் தலைநகரமான கிகாலி நகரம் நாட்டின் நடுப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது.
பிரதான ஆறுகளான கொங்கோ மற்றும் நைல் ஆகியவற்றின் நீரேந்து பிரதேசங்கள் உருவாண்டாவினூடாக வடக்கிலிருந்து தெற்காகச் செல்வதுடன், நாட்டின் பரப்பளவில் கிட்டத்தட்ட 80% ஆனது நைல் நதியைச் சார்ந்துள்ளதுடன், 20% ஆனது ருசிசி ஆறு மற்றும் தங்கனிக்கா ஏரி என்பவற்றினூடாக கொங்கோ நதியைச் சார்ந்துள்ளது. உருவாண்டாவின் நீளமான நதி நயபரொங்கோ (Nyabarongo) எனும் நதி ஆகும். நயபர்னோகோ நதி முடிவில் விக்டோரியா ஏரியிலேயே சென்று முடிகிறது. உருவாண்டா பற்பல ஏரிகளைக் கொண்டுள்ளது, வற்றுள் மிகவும் பெரிய ஏரி கிவு ஏரி (Lake Kivu) என்பதாகும். கிவு ஏரியானது உலகிலுள்ள ஆழமான இருபது ஏரிகளுள் ஒன்றாகும். புரேரா (Burera), ருஹொண்டொ (Ruhondo), முகசி (Muhazi), ருவெரு (Rweru), மற்றும் இஹெமா (Ihema) எனு சில ஏரிகளும் இங்குள்ள வேறு சில மிகப் பெரிய ஏரிகளாகும்.
உருவாண்டா நாட்டின் மத்திய பிரதேசத்தில் பற்பல மலைகள் காணப்படுகின்றன. உருவாண்டா நாட்டின் வட மேற்குத் திசையில் பற்பல சிகரங்களை விருங்கா (Virunga) எனும் எரிமலைத் தொடரில் காணக்கூடியதாக உள்ளது.
உருவாண்டா நாட்டினுடைய அதி உயர் புள்ளி 4,507 மீற்றர்கள் ஆகும்.
பொருளாதாரம்
உருவாண்டாவின் பொருளாதாரம் 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் போது பெருமளவிலான உயிரிழப்புக்கள் நிகழ்ந்தமையால் பெரிதும் தாக்கத்திற்குள்ளானது. இதன் போது உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்ததுடன், முக்கிய பணப்பயிர்கள் உதாசீனம் செய்யப்பட்டன.
உருவாண்டாவின் சுற்றுலா வருமானத்தில் 70% அந்நாட்டின் மலைக் கொரில்லாக்களை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கிறது.
மக்கள் வகைப்பாடு
2012 ஆம் ஆண்டில், உருவாண்டாவின் மக்கள்தொகை 11,689,696 ஆகக் கணக்கிடப்பட்டது. இங்கு மக்களில் பெரும்பாலானோர் இளையோர்களாக உள்ளதுடன்: கணக்கெடுப்பின்படி 42.7% ஆனோர் 15 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும், 97.5% ஆனோர் 65 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் உள்ளனர். இங்கு வருடாந்தப் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 40.2 பிறப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வருடாந்தப் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 14.9 இறப்புகளாக உள்ளது. இங்கு ஆயுட்கால எதிர்பார்ப்பு 58,02 வருடங்களாக உள்ளது (பெண்களுக்கு 59.52 வருடங்கள் மற்றும் ஆண்களுக்கு 56.57 வருடங்கள்), இதுவே 221 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 30 ஆவது மிகக் குறைந்ததாக உள்ளது. இந்நாட்டின் பாலின விகிதம் ஒப்பீட்டளவில் கூடியதாக இல்லை.