எசுப்பானியா (Spain, /ˈspeɪn/ (கேட்க) ஸ்பெயின்-‘; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ( கேட்க)) என்றழைக்கப்படும் எசுப்பானிய முடியரசு (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் எசுப்பானிய மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.
எசுப்பானியா, அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்ற முறையில் அமைந்ததுமான ஒரு குடியரசு நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது ஐக்கிய நாடுகள் அவை, நேட்டோ, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.
பெயர்
எசுப்பானியர் தமது நாட்டை எசுப்பானியா (España) என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை சுபெயின் (Spain) என அழைப்பர். இப்பெயர்களின் தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் நிலப்பகுதியைக் குறிக்கும் ஐபீரியா என்பதற்குப் பழைய உரோமர் வழங்கிய பெயர் இசுப்பானியா (Hispania) என்பது. இது, எசுப்பானியாவைக் குறிக்க வழங்கிய எசுப்பீரியா என்பதன் கவிதை வழக்காக இருக்கலாம் என்கின்றனர். கிரேக்கர்கள், “மேற்கு நிலம்” அல்லது “சூரியன் மறையும் நிலம்” என்ற பொருளில் இத்தாலியை ஹெஸ்ப்பீரியா என்றும் இன்னும் மேற்கில் உள்ள எசுப்பானியாவை எசுப்பீரியா அல்ட்டிமா என்றும் அழைத்தனர்.
புனிக் மொழியில் இசுப்பனிகேட் என்னும் சொல்லுக்கு “முயல்களின் நிலம்” அல்லது “விளிம்பு” என்னும் பொருள் உண்டு. அட்ரியனின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் ஒரு பெண்ணுருவத்தின் காலடியில் முயலின் உருவம் உள்ளது. இதனால் இப்பகுதியை முயலுடன் தொடர்புபடுத்தி “முயல்களின் நிலம்” என்ற பொருளில் அல்லது நடுநிலக் கடலின் விளிம்பில் உள்ளதால் “விளிம்பு” என்னும் பொருளில் வழங்கிய இஸ்பனிஹாட் என்னும் சொல்லிலிருந்து எஸ்ப்பானா என்னும் சொல் உருவாகி இருக்கலாம் என்பது சிலரது கருத்து. “விளிம்பு” அல்லது “எல்லை” எனப் பொருள்படும் பாசுக்கு மொழிச் சொல்லான எஸ்ப்பான்னா என்பதே எஸ்ப்பானா என்பதன் மூலம் என்பாரும் உள்ளனர்.
ஆன்ட்டோனியோ டெ நெப்ரிசா என்பவர் ஹிஸ்பானியா என்பது “மேற்குலகின் நகரம்” என்னும் பொருள் கொண்ட ஐபீரிய மொழிச் சொல்லான ஹிஸ்பாலிஸ் (Hispalis) என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்துள்ளார்.
வரலாறு
ஐபீரியா அல்லது இபேரியா எனப்படும் மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) பல்வேறு பழங்குடியினரும் ஐபீரியர் அல்லது இபேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். கிமு 8ம் நூற்றாண்டுக்குப் பிறகு செல்டிக் பழங்குடியினரும், அதன் பின் ஃபினீசியர்களும், கிரேக்கர்களும் கார்தாகினியர்களும் நடுத்தரைக் கடற்பகுதிகளில் வெற்றிகரமாக குடிபுகுந்து வணிக மையங்களை உருவாக்கி பல நூற்றாண்டுக்காலம் வாழ்ந்து வந்தனர்.
ரோமானியர்கள் கிமு 2 ம் நூற்றாண்டில் இபேரியன் மூவலந்தீவிற்கு வந்தனர். இரண்டு நூற்றாண்டு காலம் செல்டிக் மற்றும் இபேரிய பழங்குடியினரிடம் போரிட்டு கடற்கரை வியாபார மையங்களை இணைத்து “இசுப்பானியா”வை உருவாக்கினர். ரோமானிய பேரரசிற்கு உணவு,ஆலிவ் எண்ணெய்,ஒயின் மற்றும் மாழைகளை (உலோகங்களை) இசுப்பானியா அளித்து வந்தது. மத்தியகாலத் தொடக்கப் பகுதியில் இது செருமானிக்கு ஆட்சியின் கீழ் வந்தது எனினும் பின்னர் வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இசுலாமியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக்கொண்டனர். காலப்போக்கில் இதன் வடபகுதியில் பல சிறிய கிறித்தவ அரசுகள் தோன்றிப் படிப்படியாக எசுப்பானியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் எடுத்தது. கொலம்பசு அமெரிக்காவை அடைந்த அதே ஆண்டில் ஐபீரியத் தீவக்குறையில் இருந்த கடைசி இசுலாமிய அரசும் வீழ்ச்சியுற்றது. தொடர்ந்து எசுப்பானியாவை மையமாகக் கொண்டு உலகம் தழுவிய பேரரசு ஒன்று உருவானது. இதனால் எசுப்பானியா ஐரோப்பாவின் மிகவும் வலிமை பொருந்திய நாடாகவும், ஒன்றரை நூற்றாண்டுக் காலம் உலகின் முதன்மை வல்லரசுகளில் ஒன்றாக இருந்ததுடன் மூன்று நூற்றாண்டுக் காலம் உலகின் மிகப்பெரிய கடல்கடந்த பேரரசு ஆகவும் விளங்கியது.
தொடர்ச்சியான போர்களும், பிற பிரச்சினைகளும் எசுப்பானியாவை ஒரு தாழ்வான நிலைக்கு இட்டுச் சென்றன. எசுப்பானியாவை நெப்போலியன் கைப்பற்றியது பெரும் குழப்பநிலையை ஏற்படுத்திற்று. இது, விடுதலை இயக்கங்களைத் தோற்றுவித்துப் பேரரசைப் பல துண்டுகளாகப் பிரித்ததுடன், நாட்டிலும் அரசியல் உறுதியின்மையை உண்டாக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு எசுப்பானியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. இக்காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதாயினும் இறுதியில் ஆற்றல் மிக்க பொருளாதார வளர்ச்சியையும் எசுப்பானியா கண்டது. காலப்போக்கில் அரசியல் சட்ட முடியரசின் கீழான நாடாளுமன்ற முறை உருவானதுடன் குடியாட்சி மீள்விக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் எசுப்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துகொண்டது.
முன்வரலாறும், உரோமருக்கு முந்திய மக்களும்
அட்டப்புவேர்க்கா (Atapuerca) என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஐபீரியத் தீவக்குறையில் ஒமினிட்டுகள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. நவீன மனிதர் ஏறத்தாழ 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து ஐபீரியத் தீவக்குறையை அடைந்தனர். இத்தகைய மனிதக் குடியிருப்புக்களைச் சார்ந்த தொல்பொருட்களில் வடக்கு ஐபீரியாவின் கான்டபிரியாவில் உள்ள ஆல்ட்டமிரா குகையில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தியகால ஓவியங்கள் புகழ் பெற்றவை. இவ்வோவியங்கள் கிமு 15,000 ஆண்டளவில் குரோ-மக்னன்களால் வரையப்பட்டவை.
எசுப்பானியா நாட்டின் தற்போதைய மொழிகள், மதம், சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் நீண்ட இடையூறற்ற ஆட்சிக்காலம் இன்னும் எசுப்பானியா நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புவியியல்
504,782 கிமீ² (194,897 ச. மைல்) பரப்பளவு கொண்ட எசுப்பானியா உலகின் 51 ஆவது பெரிய நாடு. இது பிரான்சு நாட்டிலும் ஏறத்தாழ 47,000 கிமீ² (18,000 ச மைல்) சிறியதும், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் 81,000 கிமீ² (31,000 ச மைல்) பெரியதும் ஆகும். எசுப்பானியா அகலக்கோடுகள் 26° – 44° வ, நெடுங்கோடுகள் 19° மே – 5° கி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.
எசுப்பானியாவின் மேற்கு எல்லையில் போர்த்துக்கலும்; தெற்கு எல்லையில் பிரித்தானியாவின் கடல் கடந்த ஆட்சிப்பகுதியான சிப்ரால்ட்டர், மொரோக்கோ என்பனவும் உள்ளன. இதன் வடகிழக்கில் பைரனீசு மலைத்தொடர் வழியே பிரான்சுடனும், சிறிய நாடான அன்டோராவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஜெரோனா என்னும் இடத்தில் பைரனீசை அண்டி எசுப்பானியாவுக்குச் சொந்தமான லிவியா என்னும் சிறிய நகரம் ஒன்று பிரான்சு நாட்டினால் சூழப்பட்டு உள்ளது.
தீவுகள்
நடுநிலக் கடலில் உள்ள பலேரிக் தீவுகள், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள கனரித் தீவுகள், சிப்ரால்ட்டர் நீரிணையின் நடுநிலக் கடற் பக்கத்தில் உள்ள பிளாசாசு டி சொபரானியா (இறைமையுள்ள இடங்கள்) என அழைக்கப்படும் மனிதர் வாழாத பல தீவுகள் ஆகியனவும் எசுப்பானியாவின் ஆட்சிப் பகுதிக்குள் வருகின்றன.
மலைகளும் ஆறுகளும்
எசுப்பானியாவின் தலைநிலம் உயர் சமவெளிகளையும், மலைத் தொடர்களையும் கொண்ட மலைப் பகுதியாகும். பைரனீசுக்கு அடுத்ததாக முக்கியமான மலைத்தொடர்கள் கோர்டிலேரா கன்டாபிரிக்கா, சிசுட்டெமா இபேரிக்கோ, சிசுட்டெமா சென்ட்ரல், மொன்டெசு டி தொலேடோ, சியேரா மோரேனா, சிசுட்டெமா பெனிபெட்டிக்கோ என்பன. ஐபீரியத் தீவக்குறையில் உள்ள மிக உயரமான மலைமுகடு சியேரா நெவாடாவில் உள்ள 3,478 மீட்டர் உயரமான முல்காசென் ஆகும். ஆனாலும், எசுப்பானியாவில் உள்ள உயரமான இடம் கனரித் தீவுகளில் காணப்படும் உயிர்ப்புள்ள எரிமலையான தெய்டே ஆகும். இது 3,718 மீட்டர் உயரமானது. மெசெட்டா சென்ட்ரல் என்பது எசுப்பானியாவின் தீவக்குறைப் பகுதியின் நடுவில் அமைந்துள்ள பரந்த சமவெளி.
எசுப்பானியாவில் பல முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள், தகுசு, எப்ரோ, டுவேரோ, குவாடியானா, குவாடல்கிவீர் என்பனவும் அடங்குகின்றன. கடற்கரைப் பகுதிகளை அண்டி வண்டற் சமவெளிகள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது அண்டலூசியாவில் உள்ள குவாடல்கிவீர் ஆற்றின் வண்டற் சமவெளி ஆகும்.
ஆட்சி
எசுப்பானியா சர்வாதிகார ஆட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாறியதன் விளைவே 1978 ஆம் ஆண்டின் எசுப்பானிய அரசியல் சட்டம் ஆகும். எசுப்பானியாவின் அரசமைப்புச் சட்ட வரலாறு 1812 ஆம் ஆண்டில் தொடங்கியது. குடியாட்சிக்கு மாறுவதற்கான அரசியல் சீர்திருத்தங்கள் மிக மெதுவாக இடம் பெற்றதனால் பொறுமை இழந்த எசுப்பானியாவின் அப்போதைய அரசர் முதலாம் வான் கார்லோஸ் அப்போது பிரதமராக இருந்த கார்லோசு அரியாசு நவாரோ என்பவரை நீக்கிவிட்டு, அடோல்ஃப் சுவாரெசு என்பவரை அப்பதவியில் அமர்த்தினார். தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அரசியல் சட்டவாக்க சபையாகச் செய்ற்பட்டுப் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியது. 1978 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இடம்பெற்ற தேசிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், புதிய சட்டம் 88% வாக்குகளைப் பெற்றது.
இந்த அரசியல் சட்டத்தின்படி, எசுப்பானியா 17 தன்னாட்சிச் சமூகங்களையும், 2 தன்னாட்சி நகரங்களையும் உள்ளடக்குகிறது. எசுப்பானியாவில் அரச மதம் என்று எதுவும் கிடையாது. எவரும் தாம் விரும்பும் மதத்தைக் கைக்கொள்ளுவதற்கான உரிமை உண்டு.