தஜிகிஸ்தான் குடியரசு (Tajikistan, தஜிக் மொழி: Тоҷикистон), மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெகிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், மற்றும் கிழக்கே சீனா ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன. தஜிக் இனக்குழு தஜிகிஸ்தானின் முக்கிய இனமாகும். இவர்கள் பொதுவாக ஈரானியர்களினதும் உஸ்பெக் மக்களினதும் கலாச்சாரம், மற்றும் வரலாறுகளை ஒத்துள்ளனர். தஜிக் மொழியைப் பேசுகின்றனர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு தஜிக் சோவியத் சோசலிசக் குடியரசு என்று அழைக்கப்பட்டது.
செப்டம்பர் 9, 1991இல் சோவியத்தில் இருந்து விடுதலை அடைந்த பின்னர் 1992 முதல் 1997 வரையில் இங்கு மிக மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. போரின் முடிவில் அரசியல் சீரடையத் தொடங்கியதும் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. பொருளாதாரம் வளரத் தொடங்கியது. இந்நாட்டின் இயற்கை வளங்களான பருத்தி, அலுமீனியம் ஆகியன பொருளாதாரம் சீரடைய உதவின.
வரலாறு
ஆரம்ப வரலாறு
இந்நாட்டின் வரலாறு கிமு 4,,000 ஆண்டு பழமையானதாகும்[மேற்கோள் தேவை]. பல இராச்சியங்களின் ஆட்சியில் இது இருந்திருக்கிறது. பாரசீகர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்தனர். அரபுகள் 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தைக் கொண்டு வந்தனர். மங்கோலியர்கள் மத்திய ஆசியப் பகுதியைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். அப்போது தஜிகீஸ்தானும் அவர்களின் ஆட்சிக்குட்பட்டது.
ரஷ்ய ஆட்சி
19 நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்யா மத்திய ஆசியப் பகுதிக்குள் ஊடுருவியதில் தஜிகிஸ்தான் ரஷ்யாவின் ஆட்சியின் கீழ் வந்தது. 1917 இல் ரஷ்யப் புரட்சியின் பின்னர் தஜிகிஸ்தானின் சில புரட்சியாளர்கள் ரஷ்ய போல்ஷெவிக்குகளுடன் விடுதலைக்காகப் போரிட்டனர். நான்கு ஆண்டுகள் போரில் பல மசூதிகள், கிராமங்கள் அழிக்கப்பட்டன.
சோவியத் தஜிகிஸ்தான்
1924 இல், சோவியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசுடன் இது இணைக்கப்பட்டது. பின்னர் 1929 இல் சோவியத்தின் தனியான குடியரசாக ஆக்கப்பட்டது. 1980களின் இறுதியில் தஜிக் தேசியவாதிகள் அதிக உரிமைகள் கேட்டுப் போராட ஆரம்பித்தனர். சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர் 1991 இல் தஜிகிஸ்தான் விடுதலையை அறிவித்தது.
உள்நாட்டுப் போர்
விடுதலையின் பின்னர் நாட்டில் உடனடியாகவே உள்நாட்டுக் குழப்பங்கள் உருவாகின. பல குழுக்களும் ஆட்சிக்காக தமக்கிடையே மோதின. இஸ்லாமியர்கள் அல்லாதோர், குறிப்பாக ரஷ்யர்களும் யூதர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். எமோமாலி ரஹ்மானொவ் 1992 இல் ஆட்சியைக் கைப்பற்றி இன்று வரையில் ஆண்டு வருகிறார். 1997 இல், அதிபருக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து 1999 இல் அமைதியான தேர்தல்கள் இடம்பெற்றன. எனினும் ரஹ்மானொவ் மீண்டும் அமோகமான ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். 2005ம் ஆண்டு வரையில் ரஷ்யா தனது படைகளை ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளைக் காப்பதற்காக இங்கு வைத்திருந்தது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படைகளும் இங்கு நிலை கொண்டிருந்தன.
புவியியல்
தஜிகிஸ்தான் மத்திய ஆசியாவின் மிகச் சிறிய நாடு. பாமிர் மலைகளினால் மூடப்பட்டுள்ளது. 50 வீதமான நாட்டின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர்கள் உயரத்தில் உள்ளன.