திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.
பாடல்
1. விநாயகர் துதி (இராகம் – நாட்டை; தாளம் – ஆதி)
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன …… தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த …… அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை …… இடமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் …… பெருமாளே.
“அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் — 3”
“முத்தைத்தரு”
இராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ….. தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ….. எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ….. அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….. இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….. ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ….. கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ….. முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ….. பெருமாளே.
திருப்புகழ் — 1328
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
மந்திரத் திருப்புகழ்
திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.
மந்திரத் திருப்புகழ் பாடல்
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!
மந்திரத் திருப்புகழின் பொருள்
“இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!”
Comments