உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
ஒப்பீட்டு விளக்கம்
ஆங்கிலத்தில் இதனை Synonym என்கின்றனர். தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும் குறைசொல்லாகவும் வரும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார்.
- செல்லல், இன்னல், இன்னாமையே. – இது முழுச்சொல்லாக வந்த உரிச்சொல் வகை.
- தடவும் கயவும் நளியும் பெருமை. – தடமருப்பு எருமை, கயவாய் மதகு, நளியிரு முந்நீர் – இவற்றில் தட, கய, நளி என்னும் உரிச்சொற்கள் குறைசொற்களாக உள்ளன.
பாகுபாடும் விளக்கமும்
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், “உரிச்சொல்” என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் “உரிச்சொல்” இறுதியாக வருகிறது. உரிச்சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பான்மையை உணர்த்தும். அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும். “உரி” என்னும் அடைமொழியைச் “சொல்” என்பதனோடு சேர்த்து “உரிச்சொல்” என்றனர்.
உரிச்சொல்லின் வகைகள்
உரிச்சொல் இருவகைப்படும்
- ஒருபொருட்குறித்த பலசொல்
- பலபொருட்குறித்த ஒருசொல்
சான்று:
ஒரு பொருள் குறித்த பல சொல்
- சாலப்பேசினான்.
- உறுபுகழ்.
- தவஉயர்ந்தன.
- நனிதின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன.
பலபொருட்குறித்த ஒருசொல்
- கடிமனை – காவல்
- கடிவாள் – கூர்மை
- கடிமிளகு – கரிப்பு
- கடிமலர் – சிறப்பு
இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் – காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும்
உரிச்சொல் குறிப்பவை
உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு:
உயர்திணை பண்புகள்
உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை,
- அறிவு
- அருள்
- ஆசை
- அச்சம்
- மானம்
- நிறைவு
- பொறை (பொறுமை)
- ஓர்ப்பு (தெளிவு)
- கடைப்பிடி
- மையல் (மயக்கம்)
- நினைவு
- வெறுப்பு
- உவப்பு (மகிழ்வு)
- இரக்கம்
- நாண்
- வெகுளி (கோபம்)
- துணிவு
- அழுக்காறு (பொறாமை)
- அன்பு
- எளிமை
- எய்த்தல் (சோர்வு)
- துன்பம்
- இன்பம்
- இளமை
- மூப்பு
- இகல் (பகை),
- வென்றி (வெற்றி)
- பொச்சாப்பு (பொல்லாங்கு)
- ஊக்கம்
- மறம்
- மதம் (வெறி)
- மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன.
அஃறிணை பண்புகள்
நன்னூல், 454-வது பாடல் அஃறிணை பண்புகளை பின்வருமாறு வகைப்படுத்துகின்றது.
நன்னூல், 454-வது பாடல் அஃறிணை பண்புகளை பின்வருமாறு வகைப்படுத்துகின்றது.
வடிவங்கள்
- வட்டம்
- இருகோணம்
- முக்கோணம்
- சதுரம் முதலிய பலவகைளும்
நாற்றங்கள்
- நறுநாற்றம்
- துர்நாற்றம்
வண்ணங்கள்
- வெண்மை
- செம்மை (சிவப்பு)
- கருமை
- பொன்மை (மஞ்சள்)
- பசுமை
சுவைகள்
- கைப்பு (கசப்பு)
- புளிப்பு
- துவர்ப்பு
- உவர்ப்பு
- கார்ப்பு (காரம்)
- இனிப்பு
எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள்
- வெம்மை (வெப்பம்)
- தண்மை (குளிர்ச்சி)
- மென்மை, வன்மை
- நொய்மை (நைதல்)
- திண்மை
- இழுமெனல் (வழவழப்பு)
- சருச்சரை (சொரசொரப்பு)
இரண்டிற்கும் பொதுவான பண்புகள்
உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455).
- தோன்றல்
- மறைதல்
- வளர்தல்
- சுருங்கல்
- நீங்கல்
- அடைதல்
- நடுங்கல்
- இசைத்தல்
- ஈதல்
Comments