உன்ன மரம் என்பது சங்ககாலத்தில் இருந்த மர வகைகளில் ஒன்று. இது இக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் வேர்கள் வலிமை இல்லாதவை. இந்த மரம் நாட்டுக்கு நன்மை வருங்கால் பூத்துக் குலுங்கியும், கேடு வருங்கால் காய்ந்தும் நிற்கும் எனக் கூறப்படுகிறது. போர்களத்தில் பகைவரின் பிணங்களை அடுக்குவதைத் தொல்காப்பியம் ‘உன்னநிலை’ என்னும் துறையாகக் காட்டுகிறது. பருவ மகளின் நடத்தைகளைத் தாய்மார் உன்னிப்பாகக் கண்காணிப்பதை ‘உன்னக் கொள்கை’ என்றனர்.
உன்ன மரத்தின் வேர்கள் புன்மையானவை. அதாவது இது ஆணிவேர் இல்லாத மரம். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் நன்னனின் வாகை மரத்தை வெட்டி வீழ்த்திய பின்னர் உன்னமரம் சாய்ந்து போயிற்று.
உன்னமரம் சாய்ந்தது கண்டு நாட்டுக்கு நேர்ந்த தீங்கைப் போக்கச் செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடை வழங்கினான்.
வெட்சிப் போரின்போது புறமுதுகிட்டு ஓடாத மன்னர்களின் உடலைப் போர்க்களத்தில் அடுக்குவது ‘உன்னநிலை’ என்னும் துறை எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
‘உன்னம்’ என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும்.
உலர்ந்த உன்னமரத்தில் பிணம் தின்னும் பருந்துகள் காத்திருக்கும்.
பருவ மகளின் வாட்டம் கண்டு தாய்மார் மகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக நோக்குவதற்கு ‘உன்னக்கொள்கை’ என்றுபெயர்.
உலர்ந்த உன்னமரத்தில் எளிதாகக் கறையான் பற்றும்.
வெளி இணைப்புகள்
உன்ன மரம் – விக்கிப்பீடியா