ஆத்தி (Bauhinia racemosa) என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சீசல்பீனியேசியே (Caesalpiniaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடி சுற்றுவதற்குப் பயன்படுகிறது.