உவா மரம், பாங்கர், ஓமை (Dillenia indica) என்பது சீனா மற்றும் வெப்பமண்டல ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட டில்லினியா இனத் தாவரமாகும்.
விளக்கம்
இது ஒரு பசுமை மாறா பெரிய புதர் அல்லது சிறிய முதல் நடுத்தர அளவிலான மரம் ஆகும். இது 15 மீ உயரம் வரை வளரும். இதன் இலைகள் 15–36 செ.மீ. நீளமானது, இலைகள் நரம்புகள் கொண்டதுபோல நெளிவான பரப்புடையவை. இதன் கிளைகள் விறகு சுள்ளிகளாக பயன்படுகின்றன. இதன் பூக்கள் பெரியவையாக, 15-20 செ.மீ விட்டத்துடன், ஐந்து வெள்ளை இதழ்களுடன், ஏராளமான மஞ்சள் மகரந்தங்களுடன் இருக்கும். இதன் பழங்கள் உருண்டு பெரியவையாகவும, பச்சை கலந்த மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இது பல விதைகளைக் கொண்டதாக இருக்கும். இப்பழங்கள் உண்ணத்தக்வை. பழங்கள் 5–12 செ.மீ விட்டம் கொண்டவையாக இருக்கும். மொத்தம் 15 சூல்வித்திலை கொண்டதாகவும் ஒவ்வொரு சூல்வித்திலையும் ஐந்து விதைகளைக் கொண்டவையாக இருக்கும், இவை உண்ணக்கூடிய என்றாலும் நார்ச்சத்துள்ள கூழாக இருக்கும்.
பாகுபாட்டியல்
1759 இல் சிஸ்டமா நேச்சுராவின் 10 வது பதிப்பில் லின்னேயஸால் முதலில் விவரிக்கப்பட்ட பல இனங்களில் டில்லினியா இண்டிகாவும் ஒன்றாகும் .
சூழலியல்
இத்தாவரத்தின் பழங்கள் பெரியதாகவும் கடினமான ஓட்டைக் கொண்டதாக உள்ளது. இதனால் இதை மிகப்பெரிய தாவரவுண்ணியான யானை போன்றவற்றால் மட்டுமே உண்ணக்கூடியதாக உள்ளது. சுற்றுச்சூழல் வல்லுநர்களான சேகர் மற்றும் சுகுமாரின் பக்சா புலிகள் காப்பக ஆய்வில், ஆசிய யானைகளுக்கு இந்தப் பழங்களை உண்ணுவதில் மிகவும் விருப்பம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே இந்த மரத்தின் விதைகளை பரப்புவதில் யானைகள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. என்வே இப்பழத்திற்கு யானை ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. யானைகள் அற்றுவிடும் வாய்ப்புள்ள பகுதிகளில், இந்த மரம் பரவ வேறு ஒரு முறையையும் கொண்டுள்ளது இதன் மூலம் மிகப்பெரிய தாவரவுண்ணிகள் மட்டுமே உண்ணக்கூடியதாக கடினமான ஓட்டையுடைய இதன் பழங்கள், வறண்ட காலங்களில் காடுகளில் தரையில் உதிர்ந்த நிலையில் சிலகாலம் கழித்து மென்மையாகின்றன. இதனால் அடுத்தடுத்து சிறிய விலங்குகளான குரங்கு, கொறிணிகள், அணில் போன்றவை உண்ணத்தக்கதாக இந்த பழைய பழங்கள் ஆகிறன்றன. இதனாலும் இந்தப் பழங்களிலிலுள்ள விதைகள் பரவி முளைக்கின்றன. இவ்வாறு இந்த மரமானது பரவி வளர்கிறது.
பயன்கள்
இப்பழமானது புளிப்புச் சுவை உடையது. இதை சமைத்தும், பழக் கூழ், சட்னி ( ஊரு கட்டா ), ஜெல்லியாகவும் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இப்பழங்களானது யானைகள், குரங்குகள், மான்களுக்கான முக்கிய உணவு ஆதாரமாக இருப்பதால், முக்கிய வனப் பகுதிகளில் பழங்களை சேகரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. வனத்தின் உணவு-சங்கிலி முறை அறுபடாமலிருக்க உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக இப் பழங்களை வணிக ரீதியாக விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழிலக்கியங்களில்
உவா மரமானது சங்க இலக்கியங்களில் பாங்கர், ஓமை என்ற பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது. கலைக்களஞ்சியம் இதனை ‘உகா’ என்று கூறுகிறது.
என்ற குறிஞ்சிப் பாட்டில் இடம் பெற்றுள்ள ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஓமை” என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் வரும் பாங்கர் (111) என்பதற்குப் ’பாங்கர்க்கொடி’ என்று உரை வகுத்தார். பாங்கர் என்ற பாலை நிலத்து மரத்திற்கு ‘ஓமை’ என்றும், பாங்கர் என்ற பெயரில் ஒரு கொடியும் (முல்லைக் கொடியுடன் இணைத்துப் பேசப்படுதலின்) உண்டு போலும் என்றும் எண்ண இடமுள்ளது.
ஓமை மரத்தைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. உவர்நிலப்பாங்கான வறண்ட பாலை நிலச் சுரத்திலே ஓமை மரங்கள் காடாக வளரும் எனவும், இதன் அடி மாத்தைப் ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றன. இம்மரம் புல்லிய இலைகளை உடைய தென்றும், இது மிக ஓங்கி வளரும் என்றும், கவடுகளை உடையதென்றும், இதில் பருந்துகள் ஏறியமர்ந்து கூவும் என்றும், இதில் ‘சிள் வீடு’ என்ற வண்டொன்று தங்கி வெப்பம் மிக்க நடுப் பகலில் கறங்கும் என்றும், உடன்போக்கில் பாலை வழிப் பேவாரும் பிறரும் இம்மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவர் என்றும். இதன் பட்டையை உரித்து யானை உண்ணும் என்றும் கூறப்படுகின்றன.