ஓதியான் அல்லது ஒடியர், ஒதிய மரம் உதி, ஒடை, உலவை இதன் வேறு பெயர்கள் ஆகும். (அறிவியல் பெயர்:Lannea coromandelica),(ஆங்கில பெயர்: Indian ash tree) என்பது முந்திரி வகையைச் சார்ந்த மரம் ஆகும். இந்திய சாம்பல் மரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை பொதுவாக இந்தியாவில் மழைக்காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் வறுத்த விதை மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரம், பயன்பாடுகள் நிறைந்த ஒரு மரம் ஆகும். இவை தீக்குச்சித் தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை. இதன் கட்டைகள் மரப்பெட்டிகள், வண்டிச்சக்கரங்கள், ஏர்கள், உலக்கைகள், தூரிகை கட்டைகள், சிலேட் சட்டங்கள், கரிக்கோல்கள், பல் குத்திகள், விறகு, காகிதக்கூழ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இம்மரத்தின் மரப்பட்டைகள் சாயமேற்ற பயன்படுகின்றன.
இந்த மரத்தில் வடியும் கோந்து மிக முக்கியமான பொருளாகும். இது ஜிங்கான் கோந்து என்று அழைக்கப்படுகிறது. இது காலிகோ அச்சு, தாள் மற்றும் துணி பாவுப்பசையீடு, வார்னிஷ்கள், மை, சுவர்பூச்சுகள் போன்ற பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் மிகவும் முதன்மையான இன்னொரு பயனாக இதன் இலைகள் மிகச் சிறந்த, செலவில்லாத ஊட்டச்சத்துமிக்க கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.