தாளிப் பனை மரம்

தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை இதுவாகும். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.இது ஒரு விசிறி வகை பனையாகும். இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிற்றிலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை மிகப்பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில் பல இலட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். இப்பனை ஒரு முறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இதன் மலர்கள் இம்மரம் 30 முதல் 80 ஆண்டுகள் வயதான பின்தான் பூக்கின்றன. மேலும் இது காய்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும். அதன் பின்னர் சிறு சிறு ஒற்றை விதை கொண்ட பழங்களைக் கொடுத்துவிட்டு இம்மரம் இறந்து விடும்.

“தாளிப்பனை” -இதன் பெயரில் பலரிற்கும் பல குழப்பம். இதை, தாழிப்பனை என்றும் எழுதுகிறார்கள்.”தாளிப்பனை” என பழைய பாடல்களிலும் குழந்தைப்பாடல்களிலும் வருகிறது அது.,

“வேர்! வேர்! என்ன வேர்? வெட்டி வேர் என்ன வெட்டி? பனை வெட்டி என்ன பனை? தாளிப்பனை என்ன தாளி? விருந்தாளி என்ன விருந்து? மணவிருந்து என்ன மணம்? தேன் மணம் என்ன தேன்? பூந்தேன் என்ன பூ? மாம்பூ என்ன மா? சும்மா”… இப்படிப்போகிறது.

“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையின் பெயரே” – (திவாகர நிகண்டு: 700)

“தாலிப்பனை” -முற்காலத்தில் இதன் ஒலைகளில் கணவனின் குலச்சின்னங்களை எழுதி சுருட்டி திருமணத்தின்போது பெண்களின் கழுத்தில் தாலியாக கட்டியிருக்கிறார்கள். பனையோலைகளில் மட்டுமே அப்போது தாலி இருந்திருக்கிறது. அதனாலேயே இது தாலிப்பனை…

“விசிறிப்பனை” -மன்னர்கள் காலத்தில் இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு “பங்கா” எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு….

“குடைப்பனை” -கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு…

“கூந்தப்பனை” – இதைக் கூந்தப்பனை என்கிறும் சிலர் குறிப்பிடுகின்றனர். பல பதிவுபளிலும் இந்தப் பெயரை (கூந்தல்பனை-கூந்தப்பனை) என்பதனையே தாலிப்பனையை குறிப்பிட்டிருப்பதை காணலாம்…

ஆனால், கூந்தல்பனை (Caryota urens) பற்றி நான் பார்த்ததும் கேள்விப்பட்டதும். குமரிப் பகுதியில் உலத்திமரம் என்றும் இலங்கயில் கித்தூள் எனப்படுவதுமான, திருமணம் போன்ற விழாக்களில் வாழையோடு கட்டப்பட்டிருக்கும் நீண்ட சௌரிபோன்ற குழைகளைப் பார்த்திருக்கிறேன். அதன் மயிர்பகுதிகளில் பட்டாணி போன்ற காய்களைக் காணலாம். அதை சௌரிப்பனை என்றும் சொல்கிறார்கள். ஆனால் தாலிப்பனைக்கு கூந்தப்பனை என்கிற பெயர்க்காரணத்தை தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். பூக்கும் காலத்தில் வெண்கூந்தல்போல் காணப்படுவதால்கூட இப்பெயர் இருக்குமோ!..

“காலிப்பனை” -இதற்கு காலிப்பனை என்கிற பெரும் உள்ளது. இதற்கும் பெயர்க்காரணம் தெரியவில்லை. பூத்தவுடன் காலியாகிவிடுவதாலா!…

இதுமட்டுமில்லை, தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் என்ற பெயர்களும் உண்டு.

சங்க காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு மேற்கூரையாகவும்,துறைமுகப் பகுதிகளில் இதன் ஓலைக்குடைகளின்கீழ் பலவிதமான கடைகளை நடத்தி வந்திருக்கிறார்கள்…

பயன்கள்

இம்மரத்தின் இலைகள் பனையோலை எழுது முறையில் பயன்பட்டன. மேலும் இம்மரத்திலிருந்து பனங்கள் எடுக்கப்பட்டது. இம்மரத்தின் இலைகள் குடையாகவும் விசிறியாகவும் பயன்படுகின்றன. கேரளத்தில் இது குடை பனை என்றும் அழைக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தாளிப் பனை மரம் – விக்கிப்பீடியா

Corypha umbraculifera – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *