பச்சிலைப்பூ, பச்சிலை, அல்லது பசும்பிடி (Garcinia spicata) என்பது நடுத்தர அளவான மரவகை ஆகும். இது 30 அடி உயரம்வரை வளரக்கூடிய குளூசியேசி குடும்பத்தைச் சேர்ந்த மரம் ஆகும். இது இந்தியா, இலங்கையை தாயகமாக கொண்டது.
விளக்கம்
பசும்பிடி ஓர் மரமாகும். இது பச்சிலைப்பூ, பச்சிலை எனவும் அழைக்கப்பட்டது. இதன் கொழுந்து நறுமணம் உள்ளது. இதன் மிகுமணத்தால் இதன்பூ இலைமறை பூவாயிற்று’ போலும். இதன் முன்னைய தாவரப்பெயர் லாங்தோ கைமஸ் ஒவாலிபோலியஸ் என்பதாகும். இதன் மலர் இரண்டு அங்குலம் முதல் மூன்று அங்குலம் வரை அகலமானது. பூக்களில் 4 – 5 புறவிதழ்கள், 4 – 5 அகவிதழ்கள் கொண்டிருக்கும். சூல்முடியானது அகன்றதகவும் வழவழப்பானதாகவும் இருக்கும். இதன் கனியானது பெர்ரி என்ற சதைக்கனி ஆகும். இந்த மரத்தில் பெரும்பாலும் மஞ்சள் நிறமான கசிவு நீர் காணப்படும். இதன் தனியிலை, தோல் போல் தடித்ததாக இருக்கும். இதன் அடிமரம் மஞ்சள் கலந்த வெண்ணிறமாக இருக்கும். மேலும் இது மிகவும் வன்மை உடையதாக இருக்கும். இந்த மரம் கட்டிட வேலைக்கு உகந்தது.
மலர்
இந்த மலரின் இளமுகிழ் சுவைக்காகவும், நறுமணத்துக்காகவும் வாயில் போட்டு மெல்லப்படும் என்பதைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. குன்றத்துக் கோதையர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்று பசும்பிடியும் ஆகும்.
காணப்படும் இடங்கள்
இம்மரம் தென் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தென்னார்க்காடு மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் முதலிய மாவட்டங்களிலும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் தென் கன்னட மாவட்டம் முதல் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள மலைப்பகுதிகளில் வளரும்.
இலக்கியத்தில்
‘பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா’ என்று கபிலர் (குறிஞ்சிப் பாட்டு. 70) என்று இத்தாவரத்தைக் குறிப்பிடுகிறார். இதில் காணப்படும் ‘பசும் பிடி’ என்பதற்குப் ‘பச்சிலைப்பூ’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். ‘பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்’ என்பது பரிபாடல் (19: 75), இதற்குப் பரிமேலழகர் ‘பச்சிலையது இளைய கொழுந்து’ என்று உரைகண்டார்.
என்றும் பதிற்றுப்பத்தால் (81:24-25) குறிப்பிடப்படுகிறது.
பச்சிலை மரம் தமாலம் பசும்பிடி என்னும் பேரே என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது.
இது ஒரு மரம் எனவும். பெருவாய் மலர் உடையது எனவும். இதன் கொழுந்து மணமுள்ளது எனவும்தான் அறிய முடிகிறது. இதனைக் கொண்டு இதனுடைய உண்மையான தாவரப் பெயரைக் கணிக்க இயலவில்லை. ஆயினும், இதனைப் பச்சிலை எனக் கொண்டு கலைக் களஞ்சியம் இதற்குக் கார்சீனியா ஸாங்தோகைமஸ் என்னும் தாவரப் பெயரைக் குறிப்பிட்டுள்ளது.
இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவனது கோப்பெருந்தேவி கொல்லிமலை அரண்மனையில் கொடை வழங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் பெருவாய் மலரையும், பசும்பிடியையும் மென்று மகிழ்ந்துகொண்டிருந்தாள்.
திருப்பரங்குன்றத்தில் பூத்திருந்த மலர்கள் ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்று பசும்பிடி.