நாகமரம்

நாகமரம் (Mesua ferrea) எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் வடிவம், இதன் இலையமைப்பு, நறுமணம் மிக்க பூக்கள், வலிமையான பலகை என்பவற்றுக்காக இது அயன மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இலங்கையின் அயன மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இது இந்தியாவின் அசாம் மாநிலம், தென் நேபாளம், இந்தோசீனா, மலாயத் தீபகற்கம் என்பவற்றிற்க்கு பயிரிடப்படுகிறது. இதுவே இலங்கையின் “தேசிய மரம்” ஆகும்.

100 அடி உயரம் வரை வளரும் இத்தாவரத்தின் அடிப்பகுதி 2 மீ விட்டம் வரை வளர்வதுண்டு. இலங்கையின் ஈர வலயத்திற் கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரமான பகுதி வரையில் இத்தாவரம் பரவலாகக் காணப்படும். எளிமையான, ஒடுங்கிய, நீண்ட, கடும் பச்சை நிறமான இதன் இலைகள் 7-15 செமீ வரை வளரக்கூடியன. இதன் இலைகளின் கீழ்ப்புறம் சற்று வெள்ளையாக இருக்கும். இதன் இளந்தளிர்கள் செந்நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த ஊதா நிறம் வரையிலும் இருப்பதுடன் கீழ் நோக்கி வளைந்திருக்கும். இதன் பூக்கள் 4-7.5 செமீ வரையான விட்டம் கொண்டிருக்கும். நாகமரப் பூக்களில் வெள்ளை நிறத்திலான நான்கு இதழ்களும் நடுவில் மஞ்சள் நிறமான மகரந்தமும் காணப்படும்.

இலங்கையின் 96 எக்டேயர் (238 ஏக்கர்) பரப்பளவு கொண்ட தேசிய நாகமரக் காடு தன்னகத்தே ஏராளமான நாகமரங்களைக் கொண்டுள்ளது. இக்காடு 8 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சி செய்த நான்காம் தப்புல மன்னனால் உருவாக்கப்பட்டதாகப் பொதுவாகக் கூறப்படுகிறது. அவ்வாறாயின், மனிதனால் உருவாக்கப்பட்ட காடுகளில் இதுவே மிகப் பழையதாகும். இது மட்டுமே உலர்வலயத்தில் அமைந்துள்ள ஈரவலய வன்பலகைத் தாவரக் காடாகும் என அறியப்படுகிறது.

நாகமரம் புன்னைமர இனத்தில் ஒன்று. புன்னாகம் மலையில் வளரும் மரம்.

பாரி வள்ளல் நாக மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த நெடுவழியில் சென்றுகொண்டிருந்தபோது படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த சிறிய முல்லைக் கொடிக்குத் தன் பெரிய தேரையே படர்வதற்காக நிறுத்திவிட்டுச் சென்றானாம்.

பயன்பாடுகள்

 • இது இலங்கையின் தேசிய மரம் ஆகும். இதன் பலகை மிக உறுதியானதும் நிறை கூடியதும் வலியதும் ஆகும். இதன் பலகையானது ஒரு கன அடி 72 இறாத்தல் நிறையுடைய அதேவேளை இதன் அடர்த்தி 1.12 தொன்/மீ3 ஆகும். நாகமரப் பலகை ஆழ்ந்த, கடுமையான செந்நிறத்திற் காணப்படும். நீடித்துழைக்கக் கூடிய இதன் பலகை தொடருந்துத் தண்டவாளங்கள் மற்றும் உறுதி மிக்க பலகை தேவைப்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
 • இதன் பிசின் ஒரளவு நச்சுத் தன்மையானது எனினும் இதன் பல்வேறு பகுதிகளும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் வித்துக்களிலிருந்து பெறப்படும். எண்ணெய் தோய் நோய்களுக்கும் என்பு நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
 • பெயர்கள்

  இந்திய மொழிகளில் இதற்குப் பல பெயர்கள் கூறப்படுகின்றன.

 • ஆங்கிலம்: Ceylon Ironwood
 • சிங்களம்: நா (නා)
 • சமசுகிருதம்: சம்பெர்யாஹ்; நாக; நாககேசர; நாகபுஷ்ப (नाग, नागर, नागकेशर)
 • இந்தி: கஜபுஷ்பம்; நாககேசர (नाग केसर)
 • வங்காளி: நாகேசர்
 • கன்னடம்: நாகசம்பிகே (ನಾಗಸಂಪಿಗೆ)
 • மலையாளம்: நாகசம்பகம்; வெயிலா
 • மராத்தி: நாகசம்பே
 • தெலுங்கு: நாககேசர
 • புன்னாகம் (மலர்)

  சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் நாகம் , புன்னாகம் ஆகிய மலர்களும் இடம்பெற்றுள்ளன. புன்னாகம் மரத்தில் பூக்கும் மலர். ‘நறும்புன்னாகம்’ எனச் சங்கப்பாடல் குறிப்பிடுவதிலிருந்து இது மக்கள் விரும்பும் மணம் வீசக்கூடியது எனத் தெரியவருகிறது.

  அடிக்குறிப்பு

  வெளி இணைப்புகள்

  நாகமரம் மரம் – விக்கிப்பீடியா

  Mesua ferrea – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *