வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. “வெற்றி வாகை சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
உடற்பண்புகள்
இது 18 மீ முதல் 30 மீ வரை வளரக் கூடிய மிதமான அல்லது பெரிய வகை மரமாகும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும் பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது. இலைகள் இரட்டைச்சிறகமைப்பையும், அடிக்காம்பு (Rachis) 70-90 மிமி நீளமும், மேற்காம்புகள் (Rachillae) 1 – 5 இணைகளாகவும், 50-70 மிமி நீளமும் காணப்படும். சிற்றிலைகள் 3-11 இணைகளுடனும், நீள்வட்டம் மற்றும் முட்டைப் போன்ற வடிவிலும்,சமச்சீரற்ற நிலையிலும் காணப்படும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். இளமஞ்சள்/வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது.