அகில் (ஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது காழ்வை (Aquilaria malaccensis) என்பது முதன்மையாக அதன் கட்டைகளுக்காகப் பெரு மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் தாவர இனம் ஒன்றாகும். இது வங்காளதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், லாவோசு, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. இது வளரும் இடங்களின் இழப்புக் காரணமாக இது அழிவாய்ப்பு இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும்.
அகில் கட்டை
அகில் நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் (Agarwood) முதன்மையான வளப்பொருள் ஆகும். இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும். உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளை பொருளாகவேயாகும்.
இலக்கியம்
காழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.
காழ் என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரறிவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை. அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர்.
பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது. காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும். மகளிர் குவித்து விளையாடியதாகக் கூறப்படும் குறிஞ்சிப்பாட்டு மலர்களில் பூ இல்லாத சந்தனமர இலையும் ஒன்றாவது போல அகில்-மர இலைக்கொம்புகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
அகில் கள்ளியில் விளையும் நறுமணப் பொருள் (நான்மணிக்கடிகை).[சான்று தேவை]
கள்ளி வெயிலில் வெடித்து அகில் துகள்கள் அதிலிருந்து கொட்டும் (கம்பராமாயணம்)