முள் முருக்கை (Erythrina variegata) ஆசியாவினதும், கிழகு ஆபிரிக்காவினதும் வெப்பவலயப் பகுதிகள், வடக்கு ஆத்திரேலியா, இந்தியப் பெருங்கடல் தீவுகள், பிஜிக்குக் கிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த, கிளைகளில் முட்களைக் கொண்ட ஒரு மரம் ஆகும். இதற்கு எரித்ரைனா இண்டிக்கா (Erythrina indica) என்ற மாற்று அறிவியல் பெயரும் உண்டு.
பெயர்கள்
இதற்கு கல்யாண முருங்கை முள்முருங்கை, கிஞ்சுகம், கவிர், புழகு, முள்முருக்கு, மலை எருக்கு போன்ற பெயர்கள் உண்டு. முருங்கை போல் கிளைகளை வெட்டி வைத்தால் வேர் பிடித்து வளரும் தன்மையுடையது. மரத்தின் தண்டில் முட்கள் ஆங்காங்கே இருப்பதால், ‘முள்’முருங்கை என்று பெயர் பெற்றது. முருக்கு (பலாசம்) மற்றும் முள் முருக்கு ஆகிய தாவரங்கள், ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், வேறுபடுத்திக் காட்ட ‘முள்’முருக்கு எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
விளக்கம்
இது 27 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மூன்று சிற்றிலைகளுடன் கூடிய கூட்டிலை வடிவம் கொண்ட இதன் இலைகளின் காம்பு 20 செமீ வரை நீளம் உள்ளது. ஒவ்வொரு சிற்றிலையும் 15 செமீ நீள, அகலங்களை உடையதாக இருக்கக் கூடும். இதன் மணமில்லாத செந்நிறப் பூக்கள் அடர்த்தியாகக் காணப்படும். அவரை போன்ற பருப்புக்கனிகள் (pods) 15 செமீ வரை நீளமான உருளை வடிவம் கொண்டவை. விதைகள் சிவந்த மண்ணிறத்தில் இருக்கும். இம்மரம் ஒரு அழகூட்டும் தாவரம் என்ற வகையிலும் மதிப்பு உள்ளது. இவ்வினத்தில் பல வேறுபாடுகள் உண்டு. இலை நரம்புகள் மஞ்சள் அல்லது இளம் பச்சை நிறத்தில் உள்ள பார்செல்லி வகை, வெண்ணிறப் பூக்கள் கொண்ட அல்பா வகை என்பன குறிப்பிடத்தக்கவை. இத் தாவரத்தை விதை மூலமாகவோ அல்லது பதியமுறை (Vegitative) மூலமாகவோ வளர்க்க முடியும். கிளைகளை நட்டு வளர்ப்பதே பொதுவாகக் கையாளப்படுவதும் இலகுவானதுமான முறையாகும்.
இலக்கியப் பயன்பாடு
ஏறத்தாழ 2000-2200 ஆண்டுகளாக முருக்கு என்னும் பெயர் வழங்கிவந்துள்ளது. சங்க இலக்கியத்திலே வந்துள்ள சில இடங்கள்:
(அழல் என்றால் தீ)
கலித்தொகையில், பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/ என்று பிணிவிடுப்பதைக் குறிக்கின்றார்கள்.