நொச்சியில் (Vitex negundo) வெண்ணொச்சி. கருநொச்சி, நீலநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. ‘ வெண்ணொச்சி வெள்ளை நிறக் கிளைகளுடன் காணப்படும். இது மரமாக ஆற்றோரங்களில் சுமார் 30 அடி உயரம் வளரக்கூடியது. நொச்சியில் கிளை இல்லாத மார்கள் ஆறு ஏழு அடி உயரங்கூட வளரும். இந்த நொச்சி மார்களை வெட்டிப் படல் கட்டி வீடுகளுக்கு வேலி அமைத்துக்கொள்வர். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தித்தன் என்னும் அரசன் காலத்தில் உறையூர் காவற்காட்டில் நொச்சி வளர்ந்திருந்தது. நெடுங்கிள்ளியை நலங்கிள்ளி முற்றுகையிட்டபோது உறையூருக்குக் கோட்டை மதில் இருந்தது. நொச்சிப்பூ நீண்ட கொத்தாக மயிலை நிறத்தில் பூக்கும். இதன் இளமையான மார்களைக் கொண்டு மண் சுமக்க உதவும் தட்டுக்கூடைகள் பின்னிக்கொள்வார்கள்.
வேலியாக இருந்த ‘நொச்சி’ என்னும் சொல்லை மதிலைக் குறிக்கும் சொல்லாகவும் இலக்கியங்கள் பயன்படுத்திக்கொண்டன. நொச்சிப்பூ சூடி மதிலைத் தாக்கும் போர் நொச்சித்திணை என வகுக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
வெண்ணொச்சியானது சிறுமர வகையைச் சார்ந்தது. இது மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளைகலாக, ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். நீலமணி நிறத்தில் நொச்சியின் மலர் இருக்கும்.
மருத்துவப் பயன்கள்
இயற்கை மருத்துவத்தில் நொச்சி பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலியை, உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க, சருமப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்சனைகள், இயக்குநீர் குறைபாடுகள், சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் தடுக்க முடியும்.