மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.

 • குற்றெழுத்துகளுக்கு (குறில் எழுத்துகளுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
 • நெட்டெழுத்துகளுக்கு (நெடில் எழுத்துகளுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
 • தனி மெய்யெழுத்துகள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
 • உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும்.
 • ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம் என்பன ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.
 • மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.

அடிக்குறிப்பு

 • கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
  நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. – தொல்காப்பியம் நூன்மரபு 7
 • “இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை” – நன்னூல்
 • பிற்காலத்தவர் இதனைக் கைந்நொடி எனக் கூறுவது பொருந்தாது.


குறிப்பு

எண்ணுவோம் ஒருவர் படித்துக்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குத் தெரியாமலேயே அவர் இமை நொடிக்கிறது. அதாவது மூடித் திறக்கிறது. இதுதான் இமைநொடி. இயல்தாக எழும் இமைநொடி. மாந்தர் இமைநொடி. பிற உயிரினங்களின் இமைநொடி அன்று.

‘அன்பு அரவணைக்கும்’ என்று ஒருவர் சொல்வதாக வைத்துக்கொள்வோம். இந்தத் தொடரில் ‘அன்பு’ என்பதை ஒலிக்க இரண்டரை மாத்திரை. இதுவே குற்றியலுகரமாக ஒலிக்கப்படும்போது இரண்டு மாத்திரை.

அடுத்த சொல் வரும்போது விட்டிசை. பின்னர் ‘அரவணைக்கும்’ என்று வரும் சொல்லை ஒலிக்கும்போது ஏழு மாத்திரை. இத்தொடரை இயல்பாக மொழிய 10 மாத்திரையாவது வேண்டும். இப்போது எண்ணுவோம்.

‘கைந்நொடி’யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று – என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் எனபதை இவ்விடத்தில் முன்வைப்பதே நல்லது. நன்னூலாரும் இதனைக் கூறவில்லை என்பதை ஆய்ந்து உணர்ந்துகொள்வோம்.


மாற்றுக்கருத்து:

கைந்நொடி’யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று – என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் .

என்று மேலே கூறப்பட்ட கருத்து மறுக்கத் தக்கதாகும் ஏனெனில் கால்,அரை, முக்கால் போன்ற மாத்திரை அளவு பற்றிக் கூறியவர் முத்துவீரியம் என்ற இலக்கண நூலை எழுதிய முத்துவீரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாத்திரை அளவு பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த வகுப்பறையில் ஒரு மாணவன் எழுந்து நின்று ஆசிரியரை நோக்கி, ‘ஆசிரியரே, நீர் மெய்எழுத்துகளுக்கு அரை மாத்திரை என்று கூறினீர்கள்.

அந்தக் கால அளவு இயல்பாக கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணிமை பாதி இறங்கி வருகின்ற கால அளவு என்று கூற வேண்டுமா?’ என்று வினவினால் அதற்கு ஆசிரியர் ‘இயல்பாகக் கண்ணிமைக்கும் நேரத்தைக் கணக்கிட்டு அதை இரண்டாக வகுத்துக் கொண்டால் அரை மாத்திரை கால அளவு கிடைத்துவிடும்’ என்று கூறிவிடுவார்.

அக்கருத்து மாணவருக்குத் துல்லியமான அரை மாத்திரை கால அளவை அளந்து கொள்ள இயலாமல் போய்விடும்.அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் இயல்பாக இமைக்கும் கால அளவை அளந்து அரை மாத்திரைக்கு உரிய கால அளவை மிகத் துள்ளியமாகக் கூறிவிடலாம். வசதி வாய்ப்பு இல்லாத அக்காலத்தில் அரை மாத்திரைக்கு உரிய கால அளவை முத்துவீரியம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் பகுத்து உரைத்திருப்பது மிகச் சரி என்றே கூறிவிடலாம்.

வெளி இணைப்புகள்

மாத்திரை – விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.