ஆப்பிரிக்கப் புதர் யானைகள்

ஆப்பிரிக்கப் புதர் யானை (African bush elephant) (Loxodonta africana)இரண்டு ஆப்பிரிக்க யானை இனங்களில் இவை மிகவும் பெரியதாகும்.

முன்னர் இவ்வின யானையும், ஆப்பிரிக்கக் காட்டு யானையும் ஒரே இனமாக ஆப்பிரிக்க யானைகள் எனும் பெயரில் ஒரே இனமாக அடையாளம் காட்டப்பட்டது. தற்போதைய ஆய்வுகளில் இரண்டும் தனித்தனி இனமாகப் பகுக்கப்பட்டுள்ளது.

உடல் அமைப்பு

நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் பெரியதும், பரந்த தோள் கொண்டதும், வளுவானதும், 10.4 டன் எடையும், 3.96 மீட்டர் வரை உயரம் வளர்ந்த ஆப்பிரிக்கப் புதர் யானை ஒன்று அங்கோலாவில் சுட்டுக் கொல்லப்பட்டது. சராசரியாக ஆண் ஆப்பிரிக்கப் புதர் யானைகள் 3.2 மீட்டர் உயரமும், ஆறு டன் எடையும்; பெண் யானைகள் 2.6 மீட்டர் உயரமும், 3 டன் எடையும் கொண்டுள்ளது. ஆப்பிரிக்க புதர் யானைகளின் மிகப்பெரிய காதுகள், அதிகப்படியான உடல் வெப்பத்தை குறைக்கும் விதமாக செயல்படுகிறது. மேலும் இதன் பெரிய, நீண்ட மூக்கின் வளர்ச்சி அடைந்த நீண்ட தும்பிக்கைகள், (மனிதனின்) இரண்டு விரல் போன்றும் செயல்படுகிறது. ஆண் மற்றும் பெண் ஆப்பிரிக்கப் புதர் யானைகளின் நீண்ட, வளைந்த தந்தங்கள், இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும். இத்தந்தங்கள் உணவு உட்கொள்ளவும், சண்டையிடவும், பொருட்களை தூக்கவும், தகவல் தொடர்பிற்கும், நிலத்தை குத்தவும் பயன்படுகிறது.

உணவு

ஆப்பிரிக்க புதர் யானைகளின் வாழ்விடங்களைப் பொறுத்து இதன் உணவு முறை வேறுபடுகிறது. காடுகள், பாலைவனப் பகுதிகள், புல்வெளி பகுதிகளில் வாழும் ஆப்பிரிக்க புதர் யானைகள் புதர்ச் செடிகளையும், இலைகளையும், புல், பூண்டுகளையும் உண்டு வாழ்கிறது. ஆப்பிரிக்காவின் கரிபா ஏரியில் வளரும் செடிகளையும் உண்டு வாழ்கிறது. ஆப்பிரிக்க புதர் யானைகள் மரங்களை ஒடிக்க, தனது 30 செண்டி மீட்டர் நீளமும்; 10 செண்டி மீட்டர் அகலமுள்ள நான்கு கடைவாய்ப்பற்களை பயன்படுத்துகிறது.

சமூகப் பழக்க வழக்கங்கள்

வயதிற்கு வந்த ஆண் புதர் யானைகள், தனது யானைக் கூட்டத்தை விட்டு வெளியேறி தனியாக வாழ்கிறது. ஒரு யானைக்கூட்டத்தில் உள்ள பெண் யானைகள் மற்றும் வயதிற்கு வராத ஆண் குட்டி யானைகளை, வயதில் மூத்த பெண் யானை வழிநடத்தும். கூட்டத்தை விட்டு வெளியேறிய ஆண் யானை, கலவியின் போது மட்டும், யானைக் கூட்டத்தில் உள்ள, தன் வயதிற்கு ஏற்ற பெண் யானையை அனுகும்.

பெண் யானை குட்டி ஈனும் போது, யானைக்கூட்டத்தில் மற்ற பெண் யானைகள் உடனிருந்து காக்கும். மேலும் பிறந்த யானைக் குட்டியை தங்களது தும்பிக்கையால் தொட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தும்.

வயதிற்கு வந்த பெண் யானைகள், கலவியின் பொருட்டு ஆண் இளம் யானைகளை அழைக்க ஒரு விதமான ஒலியை எழுப்புகிறது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவும். இவ்வொலியைக் கேட்டு, இளம் பெண் யானையுடன் கலவிக்கு வரும் ஆண் இளம் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, முடிவில் சண்டையில் வென்ற ஆண் யானை, பெண் யானையுடன் கலவியில் ஈடுபகிறது. பெண் யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள் ஆகும். மகப்பேற்றின் போது, 90 செண்டி மீட்டர் உயரமும், 100 கிலோ எடை கொண்ட ஒரு குட்டியை மட்டும் ஈனுகிறது. ஐந்தாண்டு வரை குட்டி யானை தாய்ப்பால் குடிப்பதுடன், ஆறு மாதங்களுக்குப் பிறகு திடமான உணவையும் உட்கொள்கிறது.

மற்ற யானை இனங்களைப் போன்று, வயதிற்கு வந்த ஆண் யானைகளின் ஆண்மையியக்குநீர் அதிகமாக சுரக்கும் போது நெற்றியின் பக்கவாட்டில் மதநீர் பெருகி வழிந்து, வெறி பிடித்து மற்ற யானைகளையும், விலங்குகளையும், மனிதர்களையும் தாக்குகிறது. ஒரு நிகழ்வில் மதம் பிடித்த நிலையில் இருந்த புதர் யானை, காண்டாமிருகத்தைக் கொன்றது.

வேட்டையாடப்படல்

ஆப்பிரிக்கப் புதர் யானைகள் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இயற்கையில் தனக்கு நிகரான எதிரிகள் இல்லை எனினும் சிங்கம், முதலை, சிறுத்தை, கழுதைப்புலி போன்ற விலங்குகளால் குட்டி யானைகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகிறது.

மற்றொரு உயிரை உணவாகக் கொள்ளும் வேட்டை விலங்குகளாலும், மற்றும் இதன் நீண்ட தந்தம், எலும்புகள் மற்றும் தோலுக்காகவும் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் மனிதர்களால் ஆப்பிரிக்க புதர் யானைகள் வேட்டையாடி கொல்லப்படுகிறது. 1 சூலை 1975 அன்று வாசிங்டன் மாநாட்டின் ஒப்பந்தப்படி, (CITES) ஆப்பிரிக்க புதர் யானைகள் போன்ற அழிவின் விளிம்பு நிலையில் உள்ள காட்டுயிர்களின் பன்னாட்டு வர்த்தகத்தை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் தங்கள் பண்ணை நிலங்களை புதர் யானைகளிடமிருந்து காக்க நச்சுத் தன்மைக் கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால், யானைகள் இறக்க காரணமாகவுள்ளது.

இன வேறுபாடுகள்

2010-ஆம் ஆண்டின் ஆய்வின் படி, ஆப்பிரிக்க காட்டு யானைகளும், ஆப்பிரிக்கப் புதர் யானைகளும் தனித்தனி இனங்கள் என அறியப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கப் புதர் யானைகளில் 4 துணைப் பிரிவுகள் உள்ளது. அவைகள்:

  • தெற்கு ஆப்பிரிக்கப் புதர் யானை (L. a. Africana) – காபோன், தெற்கு காங்கோ வடிநிலப் பகுதிகள், நமீபியா, போட்சுவானா, சுவாசிலாந்து‎, சிம்பாப்வே‎, சாம்பியா, அங்கோலா, மலாவி, மொசாம்பிக் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
  • கிழக்கு ஆப்பிரிக்க புதர் யானைகள் அல்லது மசாய் யானைகள் (L. a. knochenhaueri) – ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியான கென்யா, ருவாண்டா, உகாண்டா, தான்சானியா, மற்றும் அங்கோலா கிழக்கு காங்கோ பகுதிகளில் காணப்படுகிறது.
  • மேற்கு ஆப்பிரிக்கப் புதர் யானைகள் அலல்து ஆப்பிரிக்க சமவெளி யானைகள் (L. a. oxyotis) – செனிகல், லைபீரியா, நைஜீரியா நாடுகளில் காணப்படுகிறது.
  • வடக்கு ஆப்பிரிக்க புதர் யானைகள் (North African Elephant) (L. a. pharaohensis) – சகாரா பாலைவனத்தின் விளிம்பில் இவ்வின புதர் யானைகள் வாழ்ந்தது.

பாதுகாப்பு

அழிவாய்ப்பு இனமாக அறிவிக்கப்பட்ட ஆப்பிரிக்க புதர் யானைகளை காக்கும் பொருட்டு கிழக்கு ஆப்பிரிக்காவிலும், தெற்கு ஆப்பிரிக்காவிலும் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இவ்வின யாணைகளின் எண்ணிக்கை 4% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளில் புதர் யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

காடுகள் மற்றும் புல்வெளிகளில் மனித ஆக்கிரமிப்புகளாலும், புதர் யானைகளுக்கு வெறுப்பூட்டும் ஐரோப்பிய தேனீக்களின் ஒலியை பதிவு செய்து ஒலிபரப்பப்படுவதாலும், புதர் யானைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகிறது.

வெளி இணைப்புகள்

ஆப்பிரிக்கப் புதர் யானைகள் – விக்கிப்பீடியா

African bush elephant – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.