ஆசிய சிங்கம் (Panthera leo persica) அல்லது இந்திய சிங்கம் அல்லது பாரசீக சிங்கம் என அழைக்கப்படுவது சிங்கங்களில் ஒரு கிளையினம் ஆகும். இவைதற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப் பூங்காவில் உள்ளன. இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதை அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் பட்டியலிடப்பட்டுள்ளது. 2010 முதல் இந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் தேசியப் பூங்காவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இது குசராத் மாநில விலங்காகும்.
மே 2015 இல், 14 வது ஆசியச் சிங்கக் கணக்கெடுப்பு சுமார் 20,000 கிமீ 2 (7,700 சதுர மைல்) பரப்பளவில் நடத்தப்பட்டது, இந்த பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளதாக தெரியவந்தது. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண்கள் சிங்கங்களும், 213 குட்டிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டு 600 ஆக அதிகரித்து, 2020 இல் 674 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிங்கங்களின் பரவல் 2015 இல் 22,000 சதுர கி.மீ பரப்பு என்பதில் இருந்து 2020 இல் 30,000 சதுர கி.மீ என உயர்ந்துள்ளது. இதன் மூலம் சிங்கங்களின் பரவல் பரப்பளவு 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஆசிய சிங்கங்கள் என்பவை இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் ஒன்றாகும். பிற பெரும் பூனை இனங்கள் வங்காளப் புலி , இந்தியச் சிறுத்தை , பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவை ஆகும்.
ஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனமானது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முற்காலத்தில் இவை பாரசீகம், இஸ்ரேல் , மெசபடோமியா , பலுசிஸ்தானில் இருந்து, மேற்கில் சிந்து கிழக்கில் வங்காளம்வரையிலும் தெற்கில் நருமதை ஆறுவரையிலும் காணப்பட்டன. ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்றுக்குறைவாக இருக்கும். பெண் சிங்கத்துக்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படா. ஆனால் சிங்கக் குட்டிகள் உடலில் புள்ளிகள் ,கோடுகள் காணப்படும்.
நோய் அச்சுறுத்தல்
இந்தச் சிங்கங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 2016 ஆம் ஆண்டில் 104 சிங்கங்களும் 2017 இல் 80 சிங்கங்களும் இறந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 23 சிங்கங்கள் 20 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தது, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.
2011 ஆம் ஆண்டிலேயே ஒரு சிங்கத்தின் மரணத்துக்கு ஆடுகளைத் தாக்கும் பி.பி.ஆர்.எஸ். என்ற வைரசே காரணம் என்று விலங்கின நோய்கள் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலுக்கான மையம் (சி.ஏ.டி.ஆர்.ஏ.டி), இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.வி.ஆர்.ஐ) ஆகியவை எச்சரித்தன. இந்த வைரசின் ஆபத்தில் இருந்து ஆசிய சிங்கங்களைக் காக்க மிகப் பெரிய ஒரு செயல்திட்டத்தை உடனடியாக மேற்கொண்டால்தான் இந்த அரிய வகை சிங்கங்களைப் பாதுகாக்க முடியும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.