வங்காளப் புலி அல்லது இராயல் பெங்கால் புலி (Panthera tigris tigris) புலியினத்தில் ஒரு சிற்றினம் ஆகும். இப்புலிகள் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேப்பாளம், பூட்டான், மியன்மார் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காடுகள், வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. எனினும் வெள்ளைப்புலிகளும் உண்டு. வங்காளப் புலி, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய விலங்காக உள்ளது. 2011-ன் கணக்கெடுப்பின்படி 2500 என்ற எண்ணிக்கை அளவிலேயே இவை உள்ளன. கன்ஹா தேசியப் பூங்கா இவ்வகையான வங்காளப் புலிகளுக்கு புகழ் பெற்றவை ஆகும். இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உடலியற் பண்புகள்
பரம்பல்
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகம் முழுதும் தோராயமாக 4,580 வங்கப்புலிகள் உள்ளன.
உணவு
வங்கப் புலிகள் ஊனுண்ணிகள் ஆதலால் இவை நடுத்தர மற்றும் பெரிய விலங்குகளான முயல், மான், காட்டெருமை, ஆடு, காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டையாடுகின்றன. இவை மரம் ஏறி முதனிகளையும் வேட்டையாடுகின்றன. இவை பொதுவாக இரவிலேயே வேட்டையாடுகின்றன. இப்புலிகள் நன்றாக நீந்த வல்லவை. பொதுவாக இப்புலிகள் வேட்டையாடியதும் இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன. இவற்றால் ஒரே நேரத்தில் 20 கிலோகிராம் வரை உணவு உட்கொள்ள முடியும்.
வாழிடம்
வங்காளப்புலி தற்பொழுது தீவிரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுவே இந்தியா, வங்காளதேசம் ஆகியவற்றின் நாட்டு விலங்கு ஆகும். இந்தியாவில் புலிகளைக் காக்கக் கொண்டுவரப்பட்ட புலி செயற்றிட்டம் (Project Tiger) என்னும் திட்டத்தினால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
அச்சுறுத்தல்கள்
புலிகளின் இயற்கையான வாழிடங்களை அழிப்பதும் வேட்டையாடுதலும் இப்புலிகளின் முக்கிய அச்சுறுத்தல்களாகும். அவற்றின் உடலில் இருந்து பல கிழக்கு ஆசிய நாடுகளில் மருந்துகள் செய்யப்படுகின்றன. எனவே, புலிகளின் தோல் தவிர அவற்றின் உடல்பாகங்களுக்காகவும் அவை வேட்டையாடப் படுகின்றன. புலிகள் மக்கள் வாழும் ஊர்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை ஊர் மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன.
புலிகளின் எண்ணிக்கை
2014
2014ஆம் ஆண்டு புலிகளை கணக்கெடுத்ததில் புலிகளின் எண்ணிக்கை பல மடங்காகக் கூடியுள்ளது.
2019
தேசிய புலிகள் தினமான 2019 ஜூலை 29 அன்று புலிகள் கணக்கெடுப்பு தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். புலிகள் கணக்கெடுப்பு குறித்த அந்த தகவலில், 2014-ல் கணக்கிடப்பட்ட புலிகள் எண்ணிக்கையை விட, இம்முறை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019 நிலவரப்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2,967 என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2014 கணக்கெடுப்பை விட, இது தோராயமாக 741க்கும் மேற்பட்ட எண்ணிக்கையை கொண்டிருக்கிறது.