நீலகிரி அணில் (Funambulus sublineatus) அல்லது நீலகிரி வரி அணில் இந்திய அணில் வகைகளுள் ஒன்றாகும். இவ்வினமும் இலங்கையிலுள்ள மங்கிய வரி அணில் இனமும் (Funambulus obscurus) ஒரே இனத்தின் துணையினங்களாக முன்பு கருதப்பட்டது. இப்போது மரபணு ஆய்வுகளின்படி அவற்றைத் தனித்தனி இனங்களாக அறிந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் சில பகுதிகளில் மட்டும் உள்ளக விலங்காக இருப்பதாலும் மிகச்சிறியதாக இருப்பதாலும் நீலகிரி வரி அணில்களைக் காண்பது அரிதாக உள்ளது. இதன் மலையாளப் பெயர் குஞ்ஞன் அண்ணான் (കുഞ്ഞൻ അണ്ണാൻ) என்பதாகும்.
உடலமைப்பு
நீலகிரி அணில்கள் சுமார் 40 கிராம் எடையுள்ளவை. இவை சார்ந்துள்ள பேரினத்தில் மிகச் சிறிய இனம் இவை. நீலகிரி அணில்களின் வாழிடங்களில் காணப்படும் மற்ற இரண்டு அணிலினங்களைக் காட்டிலும் அடர்நிறமாகவும் கூடுதலான மயிர் போர்த்தியும் இருக்கிறது. இவ்வணில்களின் முதுகுப்புறத்தில் வெளிரிய நிறத்திலான மூன்று கோடுகள் காணப்படுகின்றன. அவை மங்கலாகவும் நீளமான மயிர்களுக்குள் மறைந்தும் இருப்பதால் வெளியில் தெரிவதில்லை. வெளிர்நிறக் கோடுகளுக்கிடையே மூன்று முதல் 5 மி.மீ. விட்டமுடைய அடர்நிறக் கோடுகள் இருக்கின்றன. காட்டு வரையணில்களுக்கு உள்ளதுபோல இவற்றின் வாலில் சிகப்புக் கோடு இருப்பதில்லை. நீலகிரி அணில்களின் அடிநிறம் பசுமஞ்சளாக இருக்கும்.
நடத்தை
நீலகிரி அணில்கள் தனியாகவும் இணையுடனும் வாழும். நீலகிரி அணில்கள் புல்விரியன் பாம்புகளுக்கு உணவாவது அறியப்பட்டுள்ளது. மனிதர்களைக் கண்டாலே அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ளும் தன்மையுடையவை என்பதால் இவற்றின் நடத்தையைப் பற்றி அவ்வளவாகப் பதிவுகள் இல்லை.
அறிவியல் வகைப்பாடு
இவ்வணில் இனத்தின் உள்ளினமொன்று இலங்கையிலும் இருப்பதாக முன்னர் கருதப்பட்டு வந்தது. ஆனால் அவையிரண்டும் தனித்தனி இணங்கள் என்றும் அவற்றின் நெருங்கிய மரபுவழித்த் தொடர்புகள் வெவ்வேறு அருகமை அணில் இனங்களுடன் உள்ளன என்றும் அண்மையில் கண்டறிந்துள்ளனர். அதனால் இவற்றைத் தனித்தனியாக அறிவியல் வகைப்படுத்தி, இந்திய இனத்துக்கான 1880 பதிவுகளிலுள்ள பழைய பெயரான நீலகிரி வரி அணில் என்பதை வழங்குகிறார்கள். இலங்கை இனத்தை மங்கிய வரி அணில் (Funambulus obscurus) என அழைக்கிறார்கள்.
பரம்பல்
நீலகிரி அணில்கள் இந்தியாவில் தமிழ் நாடு, கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. மங்களூருக்குத் தெற்கில் தொடங்கி திருவனந்தபுரம் வரையுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் இவற்றின் வாழிடங்கள் அமைந்துள்ளன. பாலக்காட்டுக்கருகில் மலைத்தொடரில் இடைவெளி உள்ள இடத்தில் நீலகிரி அணில்கள் காணப்படுவதில்லை. இவற்றின் வாழிடங்கள் 200 மீட்டர் முதல் 1200 மீட்டர் உயரம் வரையிலான மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.
சூழியல்
நீலகிரி மேற்குத் தொடர்ச்சிமலைகளில் உள்ள வெப்பமண்டல பசுமை மாறா மழைக் காடுகளிலும், இலையுதிர் ஈரக்காடுகளிலும் நீலகிரி அணில்கள் வாழ்கின்றன. குறிப்பாக மூங்கில்களிடையே இவற்றைக் காணலாம்.
காப்புநிலை
நீலகிரி அணில்கள் தனியான சட்டப்பாதுகாப்பு எதுவுமற்றவை. இருப்பினும் கேரளத்திலுள்ள அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, சிம்மணி கானுயிர் உய்விடம், பெரியாற்றுத் தேசியப் பூங்கா, வயநாடு கானுயிர் உய்விடம் ஆகிய இடங்களிலும், தமிழகத்தின் தேக்கடி பறவைகள் உய்விடத்திலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது.
நீலகிரி அணில்களின் வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், மூங்கில்களை அறுப்பதாலும் இவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. காட்டுத்தீயும் இவ்வணில்களின் அழிவுக்குக் காரணமாகிறது. காடுகள் பிளவுபடுவதாலும் கொறிணியழிப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதாலும் நீலகிரி அணில் இனம் பாதிக்கப்படுகிறது. அதனால் நீலகிரி அணில்களை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் அழிவாய்ப்பு இனம் (Vulnerable species) எனக் குறிப்பிட்டுள்ளனர்.