திருவிதாங்கூர் பறக்கும் அணில் (Petinomys fuscocapillus) தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படும் பறக்கும் அணில் இனம் ஆகும். அழிந்துவிட்டதாக கருதப்பட்ட இவ்வினம், 1989ல் 100 ஆண்டுகள் கழித்து மீண்டும் மைசூர் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர்களால் அடையாளம் காணப்பட்டது.
இவ்வணில்களை மலையாளத்தில் குஞ்ஞன் பாறான் (കുഞ്ഞൻ പാറാൻ) என்று அழைக்கிறார்கள். கன்னடத்தில் இவ்வணில் இனத்தின் பெயர் சிக்க ஆருபெக்கு (ಚಿಕ್ಕ ಹಾರುಬೆಕ್ಕು) என்பதாகும்.
உடலமைப்பு
திருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் சிறிய அளவிலானவை. இவற்றின் தலைப்பகுதியிலிருந்து வால் நீங்கலான உடற்பகுதியின் நீளம் 31.9 முதல் 33.7 செ. மீ. நீளம் வரை இருக்கும். வாலின் நீளம் 25 முதல் 28.7 செ. மீ. வரை இருக்கும். இந்த அணில்களின் எடை சராசரியாக 712 கிராம் இருக்கும்.
இவ்வணில்களின் முதுகுப்புறம் அடர்பழுப்பாகவோ சென்னிறமாகவோ இருக்கும். அடிப்புறம் வெளிர்மஞ்சள் நிறமாக இருக்கும். அந்த வெளிர்மஞ்சள் நிறமே குமட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்திருக்கும். இவ்வணில்கள் காற்றில் மிதந்தவாறே நெடுந்தூரம் தாவிச்செல்ல உதவும் மென்றோலின் ஓரங்களில் வெண்ணிற மயிர்கள் காணப்படுகின்றன.
இவை சார்ந்துள்ள பேரினத்தைச் சேர்ந்த ஏழு அணில் இனங்களும் காதுகளில் தேனடைவடிவ எலும்புகளைக் கொண்டிருக்கின்றன. அதுவே இந்தப் பேரினத்தின் அடிப்படை வகைப்பாட்டுக்கான தனிக்கூறாகும்.
நடத்தை
திருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் கிட்டத்தட்ட முழுமையாக 15-20 மீ. உயர மர உச்சிக்கவிகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்பவை. இவை பறக்கும் அணில்கள் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் பறவைகளைப்போலப் பறப்பதில்லை. மாறாக இவை மரத்திற்கு மரம் தாவும்போது தமது கால்களை விரித்து கால்களை ஒட்டியுள்ள மென்றோலைப் பரப்பி அதன்மூலம் காற்றில் கூடுதலாக மிதந்து செல்பவை. அதனால் இரு மரங்களிடையே தொலைவு கூடுதலாக இருந்தாலும் இவற்றால் எட்ட முடிகிறது.
இவ்வின அணில்கள் இரவாடிகளாக இருப்பதால் இவற்றைக் காணுதல் அரிது. பழங்களோடு மரப்பட்டைகள், குருத்துகள், இலைகள், சிறு விலங்குகள் முதலியவற்றையும் இவை தின்கின்றன.
இவ்வணில்கள் தனித்தனியாகவோ இணையுடனோ வாழ்பவை. இவ்வணில்களின் தலைமுறை இடைவெளி மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரை இருக்கலாம் எனக் கணித்துள்ளனர்.
பரம்பல்
திருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் இந்தியாவில் தமிழ் நாடு, கேரளம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. கோவா மாநிலத்திலும் இருக்க வாய்ப்புள்ளது. இலங்கையில் கண்டியைச் சுற்றியுள்ள பகுதியில் இவை காணப்படுகின்றன.
இவ்வினத்தின் இரு உள்ளினங்கள் அறியப்பட்டுள்ளன.
சூழியல்
திருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் பசுமைமாறாக் காடுகள், காடுகளின் ஓரங்கள் முதலிய இடங்களில் காணப்படுகின்றன , காடுகளுக்கு அருகிலிருக்கும் பயிர்த்தோட்டங்களில் இவை இரைதேடுவதுண்டு. சில வேளைகளில் பகுதி இலையுதிர் காடுகளிலும் இவை வாழ்வதுண்டு. 500 மீட்டர் முதல் 2000 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் இவை வாழ்கின்றன.
காப்புநிலை
திருவிதாங்கூர் பறக்கும் அணில்கள் சில பகுதிகளில் மட்டுமே வாழும் உள்ளக விலங்கு என்பதால் காடுகள் அழியும்போது அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. இவற்றை இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) 2008-ஆம் ஆண்டு அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டது. 2016-ஆம் ஆண்டுப் பட்டியலில் இவ்வின அணில்களை அச்சுறுத்தல் நீங்கிய இனமாகப் பட்டியலிட்டுள்ளனர். இருப்பினும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவற்றைத் தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகத்திலும் கேரளத்தின் பெரியாற்றுத் தேசியப் பூங்காவிலும் காண முடியும்.