கறகால் பூனை (Caracal) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனை ஆகும். இதன் சுற்றளவு ஏறக்குறைய ஒரு மீட்டர் (3.3 அடி) இது ஆப்பிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், தென்மேற்கு ஆசியா, இந்தியா ஆகிய இடங்களை இருப்பிடமாகக் கொண்டது. இந்த பூனை பெயரான கறகால் என்பது துருக்கி மொழியில் இருந்து தோன்றியது துருக்கியில் கறகால் என்றால் “கருப்பு காது” என்று போருள் ஊனுண்ணிகளான இப்பூனைகள் பொதுவாக பறவைகள், கொறிணிகள், சிறு பாலூட்டிகள் முதலானவற்றை இரையாகக் கொள்கின்றன. பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இப்பூனை ஏறத்தாழ 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரை குதித்துப் பிடிக்க வல்லது. இதன் சினைக்காலம் இரண்டில் இருந்து மூன்று மாதங்கள். ஒன்றில் இருந்து ஆறு குட்டிகள் வரை ஈனும். மனிதர்களால் அடைத்து வைத்து வளர்க்கப்படும் பூனைகள் சராசரியாக 16 ஆண்டுகள் வரை வாழும். பண்டைய எகிப்துக் காலகட்டத்தில் இப்பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டு வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தோற்றம்
கறகால் பூனை ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருந்தாலும் வலுவான உடற்கட்டைக் கொண்டிருக்கும். நடுத்தர அளவிலானது. குறுகலான முகமும் நீண்ட கோரைப்பற்களையும் கொண்டிருக்கும். கறகால் பூனையின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் சுமார் 4.4 சென்டிமீட்டர் (1.75 அங்குள) முக்கோண வடிவ நீண்ட காதுகள் ஆகும். இந்த காதுகளின் முனையில் கொத்தான முடிகள் காணப்படும். இதற்கு நீண்ட கால்கள், குறுகியவால் (10 – 13 அங்குல நீளம்). உடல் முழுவதும் செந்நிற சாம்பல் நிறமும் வயிற்றுப் பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறமும் கொண்டிருக்கும். பெண் பூனைகள் கடுவன்களை விடச் சிறியன.