மீன்பிடிப் பூனை (இலங்கை வழக்கு: கொடுப்புலி; Fishing cat) என்பது ஒரு நடுத்தர காட்டுப்பூனை இவை தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. 2008 ஆம் ஆண்டில், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்த பூனையை அருகிய இனம் என்று தன் செம்பட்டியலில் கூறியுள்ளது. மீன்பிடிப் பூனைகளின் வாழிடமான சதுப்புநிலங்கள் அழிக்கப்படுவதால் கடந்த பத்தாண்டுகளில் கடுமையாக குறைந்துள்ளது. இந்த மீன்பிடி பூனைகள் ஆறுகளை ஒட்டிய இடங்களிலும், நீரோடைகள் , ஏரிகள், சதுப்பு நிலப் பகுதிகள் போன்ற இடங்களில் வாழ்கின்றன. மீன்பிடிப் பூனை மேற்கு வங்கத்தின் மாநில விலங்கு ஆகும்.
பண்புகள்
மீன்பிடிப் பூனைகள் சற்று பெரிய பூனைகள் ஆகும். இவை விட்டுப் பூனைகளைவிட இரண்டு மடங்கு பெரியது ஆகும். இது பழுப்பு நிறம் கலந்த சாம்பல் நிறத்தில் உடலும், அதில் கரும் புள்ளிகளும், குறுகிய வாலும் உண்டு. இதன் கன்னத்தில் ஒரு சோடி பட்டைகள் காணப்படும். நெற்றிப் பகுதியில் ஆறுமுதல் எட்டுவரையிலான கருங்கோடுகள் இதன் தனித்த அடையாளம் ஆகும். இவற்றின் தலையில் இருந்து உடல் நீளம் 57–78 செமீ (22–31 அங்குலம்), இதன் சிறிய வால் 20–30 செமீ (7.9–11.8 அங்குலம்), இதன் எடை 5–16 கிலோ ஆகும்.
இந்தியாவில் காணப்படும் இடங்கள்
இந்தியாவில் அசாம், மேற்கு வங்கத்தின், சுந்தரவனக்காடுகள், ஒரிசாவில் உள்ள சில்கா ஏரி, கேரளத்தில் உள்ள உப்பங்கழிக்காயல் ஆகிய இடங்களில் இதைக் காணலாம்.
வெளி இணைப்புகள்
மீன்பிடிப் பூனை – விக்கிப்பீடியா