பழுப்பு மலை அணில் (ரட்டுபா மேக்ரூரா) இலங்கையின் ஊவா மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலுமுள்ள மலைப்பகுதிகளிலும், இந்தியாவின் தமிழ்நாடு, கேரள, கருநாடக மாநிலங்களிலுள்ள காவிரிக்கரைக் காடுகளிலும் மலைக்காடுகளிலும் காணப்படும் பெரிய மர அணிலாகும். நரையணில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மலையாளத்தில் மலையண்ணான், சாம்பலண்ணான், புள்ளியண்ணான் என்ற பெயர்களாலும் கன்னடத்தில் பெட்ட அல்லுவா என்றும் அழைப்பர். இவ்வணில்கள் பழுப்புநிறமாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள பிற மலை அணில்களுடன் ஒப்பிட இது சிறிய இனமாகும். வேடையாடப்பட்டதாலும் காடுகள் அழிக்கப்படுவதாலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவற்றை அச்சுறு நிலையை அண்மித்த இனமாக அறிவித்துள்ளது.
உடலமைப்பு
பழுப்பு மலை அணில்களின் முதுகுப்புறம் பெரும்பாலும் பழுப்பு நிறத்திலிருக்கும். இடையிடையே மயிர்கள் நரைத்தாற்போல இருக்கும். அடிப்பகுதி கோழிமுட்டைபோன்ற மங்கலான வெளிர்நிறத்திலிருக்கும். காதுகள், பின்னந்தலை, நடுமுதுகுவரை ஆகியன அடர்பழுப்பாகவோ கறுப்பாகவோ இருக்கின்றன. இவற்றின் மூக்குப்பகுதி இளஞ்சிவப்பாகவிருக்கும்.
காதுகள் சிறிதாகவும் வட்டமாகவும் மயிர்க்கொத்துடன் இருக்கின்றன. தலையும் வாலைத்தவிர்த்து எஞ்சிய பகுதியும் சேர்ந்து 25 முதல் 45 செ.மீ. நீளம்வரை இருக்கும். வால் எஞ்சிய உடற்பகுதியைக்காட்டிலும் நீளமாகவிருக்கும். நரைமுடிபோலவோ சாம்பல்நிறமயிர்போலவோ மூடியிருக்கும். இவற்றின் அகலமான பாதங்களும் நன்கு வளர்ந்த நகங்களும் மரங்களைப்பற்றி ஏறுவதற்கு உதவியாகவுள்ளன. இவை கைகால்களில் நன்கு வளர்ந்த நான்கு விரல்களையும் ஒரு சிறு கட்டைவிரலையும் கொண்டிருக்கின்றன.
இவை 1.5 கிலோ முதல் 3 கிலோ வரை எடையளவுக்கு வளர்வன.
நடத்தை
பழுப்பு மலையணில்கள் புளிய இலைக்கொழுந்துகளையும், வாகை மரங்களின் கொழுந்து, பூந்தூள், மரப்பட்டை ஆகியவற்றையும் தின்கின்றன. இவற்றைத்தவிர பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், முட்டைகள் போன்றவற்றையும் இவை தின்னும். ஒடை மரங்களிருப்பின் அவற்றின் பழங்களை இவை விரும்பித் தின்னும். குட்டிகள் கூட்டைவிட்டி வெளியேறியபின் சிலகாலத்திற்கு இந்தப்பழங்களை மட்டுமே தின்னும்.
இவ்வணில்களின் காணுந்திறன் கூர்மையானது. அதனால் இவற்றால் கொன்றுண்ணிகள் வருவதறிந்து தப்ப முடிகிறது. இவற்றின் கேள்திறன் சற்று மந்தமானது. இவற்றின் கூப்பாடு விட்டுவிட்டு சத்தமாக ஒலிக்கும் கொக்கரிப்புப் போல இருக்கும். காலையிலும் மாலையிலும் அதைக் கேட்கலாம். அருகிலுள்ள மற்ற அணில்களைத் தொடர்புகொள்ள மெலிதாக விர்ரென்ற ஒலியை எழுப்பும்.
இவை தனியாகவோ இணையுடனோ வாழ்கின்றன.
பரம்பல்
இவை இலங்கையின் மத்திய மற்றும் ஊவா பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் காவிரி நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன.
உள்ளினங்கள்
பின்வரும் அட்டவணை ரட்டுபா மேக்ரூராவின் மூன்று துணையினங்களையும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.
சூழியல்
மருத, புளிய, மா, புங்கை, வாகை, நாவல் மரங்கள் வளரும் ஆற்றங்கரை மலைக்காடுகளிலும், பசுமை மாறாக்காடுகளிலும் இவை வாழ்கின்றன. அத்தகைய காடுகளுக்கருகே இருக்கும் மாந்தோப்புகளிலும் இவற்றைக் காணலாம். மலபார் மலை அணில்களும் காணப்படும் காடுகளில் இவை சற்று வறண்டபகுதிகளில் இருக்கின்றன.
காப்புநிலை
இவ்வணில்கள் வாழும் காடுகள் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவை அழிந்து வருகின்றன. எனவே இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) இவ் அணில்களை அழியும் நிலைக்கு அருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் 150 மீ முதல் 500 மீ வரையிலான உயரத்தில் ஐந்து இடங்களில் மட்டுமே அறியப்பட்டுள்ளன. கேரளாவிலுள்ள சின்னார் கானுயிர்க் காப்பகத்திலும், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவில்லிபுத்தூர் நரை அணில் காப்பகத்திலும் இவற்றைக் காணலாம். இவ்விடங்களைத்தவிர பழநி மலை, சிறுமலை, தேனி வனப்பிரிவு, திருவண்ணாமலை, ஓசூர் வனப்பிரிவு, ஆனைமலை புலிகள் காப்பகம், கருநாடகத்தின் காவேரி காட்டுயிர் புகலிடம் ஆகிய இடங்களிலும் இவை பதிவாகியிருக்கின்றன.