குதிரை

குதிரை (வகைப்பாட்டியல்:Equus ferus caballus, ஆங்கிலம்: horse), பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி. குதிரை, பாலூட்டிகளில் வரிக்குதிரை, கழுதையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இதன் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டே தூங்க வல்லவை.


சொற்பிறப்பு


குதிரை குதித்து ஓடியதைப் பார்த்துக் குதிரை எனப்பட்டது;​ பரிந்து ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றழைக்கப்பட்டது.


உயிரியல் கூறு


குறிப்பிட்ட சொற்கள் மற்றும் சிறப்பு மொழியின் மூலமாக குதிரையின் உடற்கூறியல்,வேறுபட்ட வாழ்க்கைக் கட்டங்கள், அவற்றின் வண்ண வேறுபாடுகள் மற்றும் இனங்கள் ஆகியவை விவரிக்கப்படுகிறது. பின்வரும் சொற்கள் பல்வேறு வயது குதிரைகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது:


 • ஃபோல் (Foal) அல்லது குட்டிக்குதிரை:

 • யார்லிங் (Yearling):

 • கோல்ட் (Colt):

 • ஃபில்லி(Filly):

 • மேர்(Mare):

 • பொலிக்குதிரை:

 • கேல்டிங் (Gelding) அல்லது ஆண்மை நீக்கிய குதிரை:

 • வாழ்நாள் மற்றும் வாழ்க்கைக் கட்டங்கள்


  இனம், மேலாண்மை மற்றும் சூழலைப் பொறுத்து, நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது. குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கூட உயிர் வாழ்ந்துள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் மூலமாக 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய பெல்லி என்று அழைக்கப்பட்ட குதிரையானது சுமார் 62 வயது வரை வாழ்ந்துள்ளது என்று அறியப்பட்டுள்ளது. நவீன காலத்தில், 2007ம் ஆண்டு தனது 56வது வயதில் உயிரிழந்த, சுகர் பஃப் எனும் குதிரையே உலகில் வயதான குதிரையாக கின்னசு உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


  உடற்கூறு


  உயரம்


  ஒரு சராசரிக் குதிரையின் உயரமானது அதன் கழுத்தும் உடலும் சேரும் பகுதியின் அதிக பட்ச உயரப்பகுதியைக் கொண்டு கணக்கிடப் படுகிறது. ஏனெனில் குதிரையின் தலை மற்றும் கழுத்தைப் போல இந்த பகுதி அதன் உடம்பின் அசைவைப் பொறுத்து மேலும் கீழும் செல்லுவது இல்லை. சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 அங்குலம் உயரம் வரை வளரும்.


  எலும்புச் சட்டம்


  குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவெனில் இவற்றில் காறையெலும்பு இல்லை. இவற்றின் கால் முட்டிப்பகுதி மனிதனுடையதைப் போல் அல்லாமல் மனித மணிக்கட்டை ஒத்து இருப்பதால் இவற்றால் நின்று கொண்டே தூங்கவியலும். குதிரைகளுக்கு கால் முட்டிக்குக் கீழே தசைகள் கிடையது. தோல், தசைநார்கள், சவ்வுகள் ஆகியனவே எலும்பைச் சூழ்ந்துள்ளன.


  குளம்புகள்


  இரை விலங்குகளாக இருப்பதால் கால்களும் குளம்புகளும் ஒரு குதிரையின் மிக முக்கியமான உறுப்புகள் ஆகும். குளம்பின் வெளிப்பகுதி மனிதனின் விரல் நகங்களில் உள்ள வகைப் பொருளால் ஆனது. வளர்க்கப்படும் குதிரைகளில் மிகுதியான பயன்பாட்டின் காரணமாக குளம்புகள் தேய்ந்துவிடாமல் இருக்க இரும்பிலான லாடங்களைப் பொருத்துவர். குதிரைகள் வளரும்போது குளம்புகளும் வளர்வதால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை லாடங்களை மாற்ற வேண்டியிருக்கும்.


  பற்கள்


  ஒரு குதிரையின் வயது மதிப்பீடு அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். குதிரையின் வாழ்நாள் முழுவதும் அதனுடைய பற்கள் வளர்ந்து கொண்டே இருந்தாலும் தொடர்ந்து மேய்ச்சலில் ஈடுபடுவதினால் அப்பற்கள் தேய்ந்து கொண்டும் இருக்கும்.


  செரிமானம்


  குதிரைகள் தாவர உண்ணிகளாக இருப்பதால் புல்வகைத் தாவரங்களை நாள் முழுவதும் மேய்கின்றன. இவற்றின் செரிமான மண்டலம் இதற்கேற்ப தகவமைந்துள்ளது. மனிதனுடன் ஒப்பிடுகையில் இவற்றின் இரைப்பை சிறிதாகவும் பெருங்குடல் நீண்டதாகவும் உள்ளது. இதனால் சத்துக்கள் சீராகக் கிடைக்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு 450 கிலோ எடையுள்ள குதிரை ஒரு நாளில் 7 இலிருந்து 11 கிலோ உணவைத் தின்னும். மேலும் 38-இல் இருந்து 45 லிட்டர் வரை நீர் அருந்தும். இவை அசை போடாத விலங்குகள். எனவே ஒரே ஒரு இரைப்பை மட்டுமே உள்ளது. எனினும் இவற்றின் குடலுக்கு முன்னர் உள்ள சீக்கம் (Cecum) என்னும் சிறப்பான அமைப்பினால் இவற்றால் புற்களில் உள்ள செல்லுலோசையும் (Cellulose) செரிக்க இயலும். குதிரைகளால் வாந்தி எடுக்க இயலாது. இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை உண்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாகக் கூடும்.


  உணர்திறன்


  குதிரைகள் தங்கள் வாழிடத்தில் கொன்றுண்ணிகளால் தாக்கப்படும் வாய்ப்புள்ளதால் மனிதர்களை விட மேம்பட்ட உணர்திறனைக் கொண்டுள்ளன. குதிரைகளின் பார்வைத்திறன் சிறப்பானது. தரையில் வாழும் பாலூட்டிகளில் யாவற்றிலும் குதிரையின் கண்ணே பெரியது. இவற்றால் இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும். இவற்றால் பகலிலும் இரவிலும் நன்கு பார்க்க முடியும். எனினும் குதிரைகளுக்கு நிறக்குருடு இருப்பதால்தால் இரு நிறங்கள் மட்டுமே தெரியும்.


  குதிரைகளின் கேட்கும் திறனும் அதிகம். இவற்றால் தமது காது மடல்களை 180 பாகை வரை திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலே எந்தப் பக்கம் இருந்து சத்தம் கேட்டாலும் உணர முடியும். இவற்றின் தொடுதிறனும் நுட்பமானது. கண், காது, மூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை. குதிரையின் தொடுதிறனானது தன் உடம்பில் ஒரு சிறு பூச்சி அமர்ந்தால் கூட அறியுமளவுக்கு நுட்பமானது.


  தனக்குப் பிடித்தமான தீனியைத் தேர்ந்தெடுத்துப் பிரித்து உண்ணுமளவுக்கு இவற்றின் சுவைதிறன் உள்ளது. குதிரைகள் பொதுவான நச்சுத்தன்மையுள்ள தாவரங்களை உண்பதில்லை. எனினும் சத்துள்ள இரை போதுமான அளவு கிடைக்காத நிலையில் இவை அத்தாவரங்களையும் உண்ணலாம்.


  அனைத்து குதிரைகளும் பொதுவாக நான்கு அடிப்படை நடையில் நகரும். சராசரியாக இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் குதிரை 6.4 கிலோமீட்டர்கள் (4.0 மைல்கள்) வேகத்தில் இயங்குகின்றது.


  குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும். குதிரைகளின் கால்களில் உள்ள சிறப்பான ஒரு அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும். கூட்டமாக இருக்கும் போது குதிரைகள் நன்கு தூங்கும். ஏனெனில் பெரும்பாலான குதிரைகள் உறங்குகையில் சில குதிரைகள் விழித்திருந்து இரைகொல்லிகள் வருகின்றனவா என்று பார்த்திருக்கும். இதனால் தனித்திருக்கும் குதிரைகள் இந்த அச்ச உள்ளுணர்வினால் நன்கு தூங்காது. குதிரைகள் மனிதர்களைப் போல் நீண்ட நேரம் ஆழ்ந்து தூங்காமல் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கும். கொல்லைப் படுத்தப்பட்ட ஒரு குதிரையானது சராசரியாக ஒரு நாளைக்கு 2.9 மணி நேரம் தூங்குகிறது. மேலும் குதிரைகள் ஒரு நாளில் நான்கில் இருந்து பதினைந்து மணி நேரம் நின்று கொண்டே ஓய்வெடுக்கின்றன.


  மனிதர்களுடன் இடைவினை


  உலகெங்கும் குதிரைகள் பல நூற்றாண்டுகளாக மனிதக் கலாசாரத்துடன் ஒட்டி பங்கேற்றுள்ளன. குதிரைகள் வேலை வாங்கவும் (ஏருழ, வண்டி இழுக்க, காவல் படை), விளையாட்டுக்களிலும் (குதிரைப் பந்தயங்கள், குதிரையேற்றம்,போலோ) மனமகிழ்விற்காகவும் போர்க்காலங்களிலும் அலங்கார அணிவகுப்புக்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 2008ஆம் ஆண்டில் ஏறத்தாழ 59,000,000 குதிரைகள் உலகெங்கிலும் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது; இதில் அமெரிக்காவில் 33,500,000, ஆசியாவில் 13,800,000 மற்றும் ஐரோப்பாவில் 6,300,000 இருப்பதாகவும் குறைந்தளவில் ஆபிரிக்கா மற்றும் ஓசியானாவில் உள்ளதாகவும் அதன் அறிக்கைக் கூறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே 9,500,000 குதிரைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இந்தக் குதிரைகளால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நேரடியாக $39 பில்லியன் செலவு எனவும், மறைமுகச் செலவுகளைக் கணக்கிட்டால் $102 பில்லியன் எனவும் அமெரிக்க குதிரைகள் சங்கம் கருதுகிறது. 2004ஆம் ஆண்டில் அனிமல் பிளானெட் என்ற தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்த்திய கருத்துக் கணிப்பின்படி 73 நாடுகளைச் சேர்ந்த 50,000 நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குதிரையை உலகின் நான்காவது மிகவும் விரும்பப்படும் விலங்காக வாக்களித்துள்ளனர்.


  விளையாட்டு


  பழங்காலத்தில் பலதரப்பட்டோர் கற்று பயன்படுத்தும் ஒரு திறனாக குதிரையேற்றம் இருந்தது. குறிப்பாக குதிரைப்படை வீரர்கள் குதிரையேற்றம் கற்றனர். குதிரை போக்குவரத்து விலங்காகவும், வேளாண்மை செயற்பாடுகளுக்கும் பயன்பட்டது. இக்காலத்தில் குதிரையேற்றம் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாகவும் இருக்கிறது.


  குதிரைப் பந்தயம் என்பது ஒரு குதிரைச்சவாரி விளையாட்டு ஆகும். மேலும் இது முக்கிய சர்வதேச துறையாக உள்ளது. உலகில் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் இது பார்க்கப்படுகிறது.


  போரியல்


  குதிரைப் படைகளை பண்டைய காலம் தொட்டே போரில் பயன்படுத்தி வருகின்றனர். சங்ககாலத் தமிழக அரசர்கள் வைத்திருந்த 4 நிலப்படைகளுக்குள் பரிப்படை என்ற குதிரைப்படையும் அடக்கம். இந்திய 64 ஆயகலைகளில் இக்குதிரையேற்றம் பற்றிய பரிநூலும் அடக்கம்.


  பணிக்காக


  குதிரைகள் பயன்படுத்தப்படும் சில பணிகளுக்கு மாற்றுத் தொழில்நுட்பம் முழுவதுமாக வளரவில்லை. காட்டாக குதிரையேறிய காவல்படையினர்களே சில பாதுகாப்பு நடடிக்கைகளுக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் இன்னமும் திறம்பட்ட அமைப்பாக விளங்குகின்றனர். கால்நடைப் பண்ணைகளிலும் தொலைதூரங்களில் பரந்துபட்ட விலங்குகளை மேய்க்க குதிரையிலேறிய மேய்ப்பர்களே பயன்படுத்தப்படுகின்றனர்.. சில நாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு, குறிப்பாக மலையேற்ற விபத்துக்களிலும் குழந்தைகளைத் தேடுதலிலும் பேரிடர் துயர் துடைப்பிலும் குதிரையேற்ற அணிகள் பயன்படுத்தப்படுகின்றன.


  குதிரைகள் பல நூற்றாண்டுகளாக வண்டிகளை இழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான குதிரை வண்டியிலிருந்து மன்னர்களுக்கான தேர்கள் வரை ஒருவரையோ பலரையோ இழுக்கும் வண்ணம் வண்டிகள் வடிவமைக்கப்பட்டு குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தானுந்துகள் இவற்றிற்கான மாற்றுக்களாக இருப்பினும் தானூர்திகளால் சேதமடையக்கூடிய நிலப்பகுதிகளில், இயற்கை உய்விடங்களில், குதிரைகளே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சாலைகள் இடப்படாத நிலப்பகுதிகளில் இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. குதிரை வண்டிகள் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாதவை.


  உடல்வலுசார் பணிகளுக்கு குதிரைகளே நெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளன. இதனாலேயே இவற்றுக்கு மாற்றாக உள்ள இயந்திரங்களின் திறன் குதிரைத் திறனால் வரையறுக்கப்பட்டுள்ளன. இன்றளவும் பல வளர்ச்சியடையாத நாடுகளில் விவசாயத்திற்கும் போக்குவரத்திற்கும் குதிரைகளும் கோவேறுக் கழுதைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக 100 மில்லியன் குதிரைகள் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடுகின்றனர்; இதில் ஆபிரிக்காவில் மட்டுமே 27 மில்லியன் குதிரைகள் இவ்வேலைகளைச் செய்கின்றன. குதிரைகளை விவசாயத்தில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.


  மனமகிழ்வு மற்றும் பண்பாட்டில்


  தற்கால குதிரைகள் பலமுறை தங்களின் வரலாற்று பயன்பாடுகளை மீண்டும் நிகழ்த்திடப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் இருந்தபடியே அலங்காரம் செய்யப்பட்ட குதிரைகள் பல நிகழ்நிலைக் காட்சிகளில் வரலாற்று நிகழ்ச்சிகளை மீண்டும் நிகழ்த்துகின்றன. குதிரைகள் பண்பாட்டு வழக்கங்களை பேணவும் விழாக்களில் அலங்கார உலா வரவும் பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் மன்னர் மரபினரையும் மகனையான (சமூகத்தில் உயர்ந்த) நபர்களையும் கொண்டு செல்ல குதிரைகள் இழுக்கும் சீர் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது குடியரசுத் தலைவர் , பாதுகாப்பு சிக்கல்கள் பெருகுவதற்கு முன்னால், குதிரைகளால் இழுக்கப்பட்ட சீர் வண்டியிலேயே அழைத்து வரப்பட்டார்.


  தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் குதிரைகள் அடிக்கடி காண்பிக்கப்படுகின்றன. குதிரைகளை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உண்டு. வரலாற்றுத் திரைப்படங்களில் உண்மை நிலையை ஒட்டி காட்டிட குதிரைகளோ அவற்றின் எண்ணிமப் படிவங்களோ பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரப் படங்களிலும் குதிரைகளும் குதிரைச் சின்னங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பல்வகை கோட் ஆஃப் ஆர்ம்ஸ், பதாகைகள் மற்றும் மரபுச் சின்னங்களில் குதிரைகளின் பல்வேறு நிலைகளைக் காணலாம். பல பண்பாடுகளின் தொன்மவியலில் வழமையான குதிரைகளைத் தவிர இறக்கைகளுடனோ கூடுதல் உறுப்புகளுடனோ குறிப்பிடப்படுகின்றன; சூரியன் மற்றும் சந்திரன் தேர்களை இழுக்க குதிரைகள் சித்தரிக்கப்படுவதும் உண்டு. சீன நாட்காட்டியில் 12-ஆண்டு சுழற்சியில் வரும் விலங்கு ஆண்டுகளில் குதிரையும் உள்ளது.. மேலும் சதுரங்க விளையாட்டில் குதிரைப் படை முக்கியமான ஒன்று.


  மருத்துவத்தில்


 • பாம்புக்கடி மருந்திற்கு குதிரை அல்லது செம்மறியாட்டின் மீது பாம்பின் நஞ்சை ஊசி மூலமாக பாய்ச்சுவர்.

 • அதனால் அக்கால்நடைகளின் நஞ்சு எதிர்ப்பு நீர்மங்கள் இரத்தத்தில் சுரக்கத் தொடங்கும்.

 • அந்த நஞ்சு எதிர்ப்பு நீர்மங்களை இரத்தத்தில் இருந்து தனியாகப் பிரித்துவிடுவர்.

 • அதுவேபாம்புக்கடி நஞ்சுக்கு மருந்தாகச் செயல்படுகிறது.

 • ஆனால் பாம்பின் நஞ்சை பாம்பே உறிந்து விடும் என்று மூடநம்பிக்கை சில பகுதி மக்களிடம் நிலவுகிறது.


  உடல் மற்றும் உளநலம் குன்றிய அனைத்து நோயாளிகளும் குதிரையுடன் பழகும்போது பயனடைகிறார்கள். மருத்துவக் குதிரையேற்றம் மூலம் இவர்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவதுடன் அவர்களது சமநிலை மற்றும் உறுப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்தி தன்னம்பிக்கையை ஊட்டுகிறது; இதனால் அவர்களுக்கு விடுதலை உணர்வும் தானியங்கு நம்பிக்கையும் பெறுகின்றனர். குதிரையேற்றத்தின் நன்மைகளை அங்கீகரித்து மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குதிரையேற்றப் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஹிப்போதெரப்பி என்று இவை குறிப்பிடப்படுகின்றன.


  நேரடியாகக் குதிரையில் பயணம் செய்யாவிடினும் குதிரை உதவும் மருத்துவத்தினால் உளநலம் குன்றியவர்களுக்கு மனநிலை மருத்துவம் வழங்கப்படுகிறது. எதிர்பார்ப்பு சீர்குலைவு, மனநிலை சீர்குலைவு, நடத்தைசார் சீர்குலைவு, வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை எதிர்கொள்வோருக்குக் குதிரைகளை கூட்டாளி விலங்குகளாகப் பயன்படுத்தி உள மருத்துவம் வழங்கப்படுகிறது. சோதனை முறையாக சிறைகளிலும் குதிரைகளைப் பயன்படுத்தி நடத்தைசார் சீர்கேடுகளை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


  பயன்தரும் பொருட்கள்


  மனித வரலாறு முழுவதும் குதிரைகள் மூலமாக மனிதன் பல பொருட்களைப் பெற்று வந்துள்ளான். குதிரையின் பால் பொருட்கள், இறைச்சி போன்றவற்றை மங்கோலியர் பயன்படுத்துகின்றனர். முற்காலத்தில் நீண்ட தொலைவு பயணம் செய்யும் மங்கோலியர் குதிரையின் குருதியையும் குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களால் உணவுக்காக நிற்காமல் நீண்ட தொலைவு செல்ல முடிந்ததாம். மேலும் சினையுற்ற குதிரையின் சிறுநீரில் இருந்து ஒரு வகை நொதி பிரித்தெடுக்கப்பட்டு அது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குதிரையின் தோல் கையுறை, காலணிகள் செய்யப்படுகிறது. குதிரையின் குளம்புகளில் இருந்து விலங்குப் பசை செய்யப்படுகிறது.


  பராமரிப்பு


  குதிரைகள் மேயும் விலங்குகளாக இருப்பதால் அவற்றுக்குப் போதிய அளவு புல் வகைத் தாவர உணவு அளிக்கப்பட வேண்டும். புல் வகை உணவைத் தவிர தானியங்களையும் தரலாம். எனினும் வல்லுனர்கள் குதிரையின் உணவில் பாதிக்கு மேல் புல் உணவையே தரவேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் இவை குடிப்பதற்கு நாளொன்றுக்கு 38 முதல் 45 லிட்டர் தூய குடிநீர் தேவை. வளர்க்கப்படும் குதிரைகள் காற்று, பனியில் பாதிக்கப்படாமல் இருக்க கொட்டகை தேவை. மேலும் குதிரையின் குளம்புகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். குதிரையின் பயன்பாட்டினைப் பொறுத்து லாடங்கள் அடிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். நோய்த் தடுப்புக்காக தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். பற்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். தானியக் களஞ்சியம் போன்ற அடைபட்ட இடங்களில் இருக்கும் குதிரைகள் அவ்வப்போது அவற்றின் உடல், மன நலனுக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும். பந்தயக் குதிரைகள் போன்றவற்றில் அவற்றின் உடல்மயிரும் பராமரிக்கப்பட வேண்டும்.


  வெளி இணைப்புகள்

  குதிரை – விக்கிப்பீடியா

  Horse – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *