காட்டுப்பூனை ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ள பூனை. இது ஆசியாவில் சீனாவில் இருந்து, தெற்காசியா, நடு ஆசியா, நைல் பகுதி வரை பரவியுள்ளது. மேலும் இது இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. காட்டுப் பூனையை வெருகு என்று தமிழ் அகராதிகள் குறிப்பிடுகின்றன. வெருகு பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்களில் விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன.
இயல்பு
வீட்டுப்பூனைகளை விடச் சற்று பெரிதாக இருக்கும் இப்பூனைகள் 55 முதல் 94 செ.மீ நீளம் வரையும் 36 செ.மீ உயரம் வரையும் வளரும். மூன்றில் இருந்து 12 கிலோ எடை வரை இருக்கும். கடுவன் பூனைகள் பெட்டைகளை விடச் சற்று பெரியவை. அடர்ந்த காடுகளை விரும்பாத இப்பூனை சவான்னா புல்வெளி, வெளிப்பாங்கான காடுகள் முதலிய இடங்களில் வாழும். காட்டுப்பூனைகள் நன்றாக மரம் ஏற வல்லவை.
உணவு
காட்டுப்பூனை கொறிணிகள், அணில், முயல், தவளை, பறவைகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். ஊர்ப்புறங்களில் இவை வீட்டில் வளர்க்கப்படும் கோழி, வாத்து ஆகியவற்றையும் வேட்டையாடும்.