மெயின் கூன் (Maine Coon) மிகப் பெரிய வளர்ப்புப் பூனை இனங்களுள் ஒன்று. இது தனித்துவமான உடல் தோற்றத்தையும் பெறுமதியான வேட்டையாடும் திறனையும் கொண்டுள்ளது. இது வட அமெரிக்காவின் மிகப் பழைய இயற்கை இனங்களுள் ஒன்று. குறிப்பாக இது மெயின் மாநிலத்தைத் தாயகமாகக் கொண்டது. இது இந்த மாநிலத்தில் அதிகாரபூர்வ மாநிலப் பூனையாக உள்ளது.
மெயின் கோனின் தோன்றிய இடம், அது ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பன குறித்த துல்லியமான பதிவுகள் எதுவும் இல்லை. எனவே இவை குறித்துப் பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இது பூனைகள் கண்காட்சிகளில் பிரபலமானதாக விளங்கின. ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் வெளிநாடுகளில் இருந்து நீண்ட உரோமங்களைக் கொண்ட இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மெயின் கூனினின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனினும் அதற்குப் பின்னர் மெயின் கூன் மீண்டும் பிரபலமாகித் தற்போது உலகில் மக்களால் விரும்பப்படும் பூனை இனங்களுள் ஒன்றாக இது உள்ளது.
மெயின் கூன், பெரியதும் நன்றாகப் பழகக் கூடியதுமான பூனை. இதனால் இதற்கு “சாதுவான பூதம்” என்னும் பட்டப்பெயர் உண்டு. மார்புப் பகுதியில் காணப்படும் பிதுக்கம், வலிமையான எலும்பு அமைப்பு, முக்கோண வடிவ உடலமைப்பு, சமமற்ற இரண்டு உரோமப் படைகள், நீளமானதும் உரோமங்களுடன் கூடியதுமான வால் என்பன இதன் சிறப்பியல்புகள். இவ்வினம் பல்வேறுபட்ட நிறங்களை உடையது. இளம் ஊதா, சாக்லெட் நிறங்கள் மட்டும் இதன் மரபுப் பண்பாக அனுமதிக்கப்படுவது இல்லை. புத்திசாலித்தனம், விளையாட்டுத்தன்மை, சாதுவான குணம் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற மெயின் கூன், நாயைப் போன்ற இயல்புகளைக் கொண்டது என அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகிறது. இவற்றுக்கு இதயத்தசைப் பெருக்க நோய், இடுப்புக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், பெயர்பெற்ற பூனை வளர்ப்பாளர்கள் நவீன முறைகளைக் கைக்கொண்டு இப்பிரச்சினையைக் குறைக்க முயல்கின்றனர்.
வரலாறு
தோற்றம்
இதன் தோற்ற மரபுவழி குறித்து எதுவும் தெரியவில்லை. இது குறித்து ஊகங்களும் மரபுக் கதைகளும் மட்டுமே உள்ளன. இவற்றுக் ஒரு கதை 1793 இல் கொல்லப்பட்ட பிரான்சின் அரசி மேரி அன்டொய்னெட் என்பவருடன் தொடர்புபட்டது. இந்தக் கதைப்படி, இறப்பதற்கு முன் அன்டொய்னெட் கப்டன் குளோ என்பவரின் உதவியுடன் பிரான்சை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சி செய்தார். அவர் மிகவும் பெறுமதியானவையாகக் கருதிய அவரது பொருட்களை குளோ வின் கப்பலில் ஏற்றினார். இவற்றுள் அவருக்கு விருப்பமான ஆறு துருக்கி அங்கோரா பூனைகளும் இருந்தன. அரசி திட்டப்படி ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்லாவிட்டாலும் அவரது பூனைகள் மெயின் மாநிலத்தில் உள்ள விஸ்காசெட் கரையை அடைந்தன. இப்பூனைகள் அங்கே பிற குட்டையான உரோமங்களைக் கொண்ட இனங்களுடன் இனப்பெருக்கம் செய்யப்பட்டு இன்றைய மெயின் கூன் இனமாக வளர்ச்சி பெற்றன.
இன்னொரு கதையின்படி, கப்டன் சார்லசு கூன் என்னும் ஆங்கிலேயக் கடலோடி தனது கப்பலில் நீளமான உரோமங்களைக் கொண்ட பூனைகளை வைத்திருந்தார். அவரது கப்பல் நியூ இங்கிலாந்தின் துறைமுகங்களில் நங்கூரமிடும் காலங்களில், அவரது பூனைகள் கப்பலில் இருந்து வெளியே சென்று காட்டுப் பூனைகளோடு சேர்ந்து நீள உரோமங்கொண்ட குட்டிகளை உருவாக்கின. இவ்வாறு உருவான நீண்ட உரோமங்களைக் கொண்ட குட்டிகள் “கூனின் பூனைகள்” என அழைக்கப்பட்டன.