மர்மோட் (Marmot) என்பவை மர்மோட் பேரினத்தில் கொறிணி இனத்தைச் சேர்ந்த பெரிய அணில் ஆகும். இவ்வினத்தில் 15 வகைகள் உள்ளன. இவற்றுள் சில மலைப்பகுதிகளில் குறிப்பாக ஆல்ப்ஸ் மலை, வட அபென்னைன் மலை, கார்பத்தீய மலைகள், தத்ரா மலைகள் மற்றும் ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆசியாவில் பைரெனீசு மலைகளிலும் காணப்படுகின்றன. மேலும் சில வகைகள் வட அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடர், கருமலைகள், காஸ்கேடு மலைகள், பசிபிக் மலைகள் மற்றும் சியெரா நெவடா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவின் லடாக் பகுதியிலும் பாக்கிஸ்தானின் தியோசாய் தேசியப்பூங்காவிலும் சில வகைகள் காணப்படுகின்றன. சில வட அமெரிக்கப் புல்வெளிப் பிரதேசங்களிலும் யுரேசியப் புல்வெளிகளிலும் பரவி வாழ்கின்றன. இதே போன்ற அளவு மற்றும் உருவ ஒற்றுமையுள்ள ஓர் உயிரினம் தரை நாய் ஆகும். ஆனால் அது மர்மோட் இனத்தைச் சேர்ந்ததல்ல.
வாழ்க்கை
பொதுவாக மர்மோட்டுகள் புதர்களிலும் தரைகளில் வளை அமைத்து வாழும் விலங்காகும். மஞ்சள் வயிற்று மர்மோட்டுகள் பாறைக்குவியல்களுக்கிடையேயும் வாழும். இவை குளிர்காலங்களில் மூன்று மாதங்கள் நீண்ட துயிலுக்கு ஆட்படும். மர்மோட்டுகள் சமூகமாகக் கூடி வாழும் விலங்குகள் ஆகும். ஆபத்துகள் ஏதேனும் தென்படின் இவை தங்களுக்கிடையே ஒலி எழுப்பி மற்ற மர்மோட்டுகளை எச்சரிக்கும். இவை புற்கள், பழங்கள், மரப்பாசிகள், பாசிகள், வேர்கள் மற்றும் பூக்களை உண்ணும் தாவர உண்ணிகளாகும்.
உடல் அமைப்பு
இவ்வகைக் கொறிணிகள் வகைக்கேற்ப நீண்டும் பளுவானதாயும் இருக்கும். சாதாரணமாக இவற்றின் எடை 3 முதல் 7 கி.கி வரை(6.6 முதல் 15.4 பவுண்டுகள்) இருக்கும். இவை குளிர் பிரதேசங்களுக்கேற்ற வாழ் தகவமைப்பு கொண்டவை. உடல் மற்றும் காது முழுவதும் மயிர் மூடிக் காணப்படும். இவற்றின் சிறிய கால்கள் மற்றும் வலுவான நகங்கள் வளை தோண்டுவதற்கு உதவும். முழு உடலும் 30 முதல் 60 செ. மீ (11.8 டொ 23. 6 அங்குலம்) நீளம் கொண்டவை. இதன் வால் மட்டும் 10 செ.மீ முதல் 25 செ.மீ வரை இருக்கும். இதன் உடல் முழுதும் உள்ள நீண்ட அடர்ந்த மயிரானது நீண்ட நார் போன்று மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். பழுப்பு, செம்பழுப்பு, கருப்பு மற்றும் சாம்பலும் வெண்மையும் கலந்த நிறங்களிலும் இருக்கும்.