கண் குத்திப் பாம்பு அல்லது பச்சைப் பாம்பு (Ahaetulla nasuta) என்பது ஒரு ஆபத்தில்லா பாம்பு ஆகும். இப்பாம்பு ඇහැටුල්ලා (ahaetulla) என்று சிங்களத்தில் அழைக்கப்படுகிறது. இவை இந்தியா, இலங்கை, வங்கதேசம், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
பச்சைப் பாம்புகள் ஒரு பகலாடி ஆகும். இதன் கடைவாயில் நச்சுப்பற்கள் உள்ளதால் தமது இரையைப் பிடித்து தனது வீரியமில்லாத நஞ்சை செலுத்திக் கொன்றுவிடும். இதன் உணவு தவளை, பல்லி, போன்றவை ஆகும். தான் அச்சுறுத்தப்படும்போது தனது கழுத்தையும், உடலையும் புடைத்துக் காண்பிக்கும். அப்போது செதில்களுக்கு இடையே கருமையும், வெண்மையும் கலந்த வரிவடிவத்தைக் காணலாம். மேலும் இவை தங்கள் வாயைத் திறந்து அச்சுறுத்தப்படும் திசையில் தங்கள் தலையை காட்டும். இதன் கூரான தலையைக் கொண்டு மனிதர்களின் கண்களைக் கொத்தி குருடாக்கிவிடும் என இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் (தமிழ்நாட்டில்) ஒரு கட்டுக்கதை உள்ளது. இந்தப் பாம்பு இனங்கள் முட்டைகளை தாயின் உடலில் உள்ளேயே வைத்து குஞ்சுகளை ஈனுகின்றன. இப்பாம்புகள் ஆண் துணை இல்லாமால்கூட சூல்தரித்து குட்டிகளைப் பெற்றெடுக்கும் திறனைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு பெண் பாம்பு ஆகஸ்ட் 1885 ஆண்டிலிருந்து ஆண் துணையின்றி பிரித்து வைக்கப்பட்ட நிலையில், 1888 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குட்டிகளை ஈன்றது. இவை இலேசான நஞ்சினைக் கொண்டுள்ளன. இதனால் தீண்டப்பட்டவருக்கு மூன்று நாட்கள் வீக்கம் இருக்கும்.