அனகோண்டாக்கள் (Anaconda) தென் அமெரிக்க மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும். இப்பெயர் சில பாம்புக் குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய “யுனெக்டஸ் முரினஸ் என்பதனைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. வலையுரு மலைப் பாம்பையும் சேர்த்து இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். ஆராய்ச்சிக் கூடங்களில் பிடித்தோ கொன்றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.[சான்று தேவை]
கூடுதலாக நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாக மீன்கள், ஆற்றுக்கோழிகள், அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள், குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.
அனகோண்டாக்களால் தாக்கப்படுவதைக் கருவாகக் கொண்டு பல படக் கதைகள், திரைப்படங்கள் மற்றும் சாகசக் கதைகள் அமேசான் காட்டுப் பின்னணியில் புனையப்பட்டுள்ளன.
அனகோண்டா என்ற பெயர்:
அந்தீசு மலைத்தொடரின் கிழக்கே உள்ள கொலம்பியா, வெனிசுலா, கினியா, ஈக்வெடார், பெரு, பொலிவியா, பிரேசில் மற்றும் டிரினிடாட் தீவுகளில் காணப்படும் மிகப்பெரிய பாம்பாகிய யுனெக்டஸ் முரினஸ் (பச்சை அனகோண்டா) வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
யுனெக்டஸ் நோடியஸ் (மஞ்சள் அனகோண்டா) என்பது கிழக்கு பொலிவியா, தெற்கு பிரேசில், பராகுவே, வடகிழக்கு அர்ஜென்டினா ஆகிய இடங்களில் காணப்படும் சிறிய வகைப் பாம்புகளையும் குறிக்கும்.
வடகிழக்கு பிரேசில், பிரெஞ்சு கயானாவின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் அரியவகை பாம்பாகிய யுனெக்டஸ் டெஸ்சாயுயன்சியியையும் (கரும்புள்ளி கொண்ட அனகோண்டா) குறிக்கும்.
பெயர் வரலாறு
தேசிய புவியியல் இதழானது அனகோண்டா தமிழ் சொல்லான ஆனைக்கொன்ற என்பதில் இருந்து வந்தது என்கிறது.
மெரியம் வெப்ஸ்டர் இணைய அகராதியின்படி , இலங்கையில் காணப்படும் சிறிய பச்சை நிறமான சாட்டைப் பாம்பு வகையை குறிப்பிட பயன்படுத்தும் சிங்கள வார்த்தையான ஹெனகாண்டாயா என்ற சொல்லே மருவி அனகோண்டா எனப்படுகிறது. ஹெனகாண்டாயா என்பது இலங்கையில் இப்போது அழிந்து விட்ட நொறுக்குவான் வகையைச் சேர்ந்த பாம்பினத்தைக் குறிக்க பயன்படுத்தும் சொல் என மற்ற சில இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிச்சர்ட் பாயில் (ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் இலங்கை ஆங்கில ஆலோசகர்) தன்னுடைய ‘சிந்துபாத் இன் செரெண்டிப்’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்:
ஆங்கிலத்தில் அனகோண்டாவுக்கான முதல் குறிப்பு ஆர். எட்வின் (இது புனைப்பெயராய் இருக்கலாம்) ஸ்காட்ஸ் இதழுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் வெளிவந்தது. ஒல்லாந்தர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கையில் புலியை விழுங்கிய ஒரு பாம்பை தான் கண்டது குறித்து அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார். “பாம்பின் ஒரு பிரம்மாண்டமான வகையான அனகோண்டா. கிழக்கு இந்தியப் பகுதியில் இலங்கைத் தீவில் பல்லாண்டு காலம் வசித்து வந்த ஒரு ஆங்கிலேய சீமானின் கடிதத்தில் இருந்து தெரியவருவது” என்கிற தலைப்பில் 1768 ஆம் ஆண்டு பதிப்பு ஒன்றில் இது வெளியானது. ஆயினும், இது பாம்புகளைக் குறித்து வெகு குறைவான அறிவியல் அறிவே இருந்த ஒரு காலத்தில், கொழும்பின் வெளிப்புறப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு கற்பனை கலந்த சம்பவமே ஆகும்.