கட்டுவிரியன் பாம்பு

பங்காரசு வாசியேட்டசு (அறிவியல் பெயர்: Bungarus fasciatus) தமிழில் : கட்டுவிரியன் பாம்பு. இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் எலாப்பிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சுப்பாம்பு இனமாகும். இதன் உடலில் கருப்பிலும் மஞ்சளிலுமாக வளையங்கள் மாறிமாறி காணப்படுகின்றன. கிராமங்களில் முன்பு இப்பாம்பு கடிக்கு போடப்படும் ‘பாடம்(மந்திரம்)’ ஒவ்வொரு கட்டுக்கு ஒவ்வொரு பாடம் என்று போடப்படும். விஷம் இறங்க நேரம் ஆகும் . தெலுங்கில் பங்காரம் பாம்பு என்று அழைக்கப் படுகின்றது. இதன் பொருள் தங்கப்பாம்பு என்பதாகும். இப்பாம்பின் மஞ்சள் வளையங்கள் தங்கம் போன்று தோன்றுவதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனுடைய அறிவியல் பெயரான பங்காரசு (Bungarus) என்பது இத்தெலுங்குச் சொல்லில் இருந்தே பெறப்பட்டுள்ளது.


புவியியல் பரம்பல்


இப்பாம்புகள் இந்திய-சீனப்பகுதிகளிலும் மலேசியத் தீவக்குறையிலும் தென்சீனத்திலும் காணப்படுகின்றன. வடகிழக்கு இந்தியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, லாவோசு, வியட்நாம், சாவா, சுமத்திரா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.


இந்தியாவில் இவை பொதுவாக வடகிழக்கிலும் பீகார், ஒரிசாவிலும் உள்ளன. மேலும் தமிழகத்தின் பரவலான பகுதிகளிலும், ஐதராபாத்தின் மேற்கு, தெற்குப் பகுதிகளிலும் கோதாவரி, மகாநதிப் பள்ளத்தாக்குகளிலும் இவை உள்ளன.


வாழிடம்


காடுகள், வேளாண்நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான இடங்களில் இவை வாழ்கின்றன. கரையான் புற்றுக்களிலும் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள கொறிணிகளின் வங்குகளிலும் இவை வாழ்கின்றன.


உடற்தோற்றம்


இப்பாம்பு உடல் முழுதும் கருப்பு, மஞ்சள் நிறப்பட்டைகள் கொண்டது. உடலின் குறுக்குவெட்டுத்தோற்றம் முக்கோணவடிவுடையது. அகலமான தலையையும் கருப்பான கண்களையும் கொண்டது. இப்பாம்புகளின் பொதுவாக அறியப்பட்ட நீளம் 1800 மி.மீ அல்லது அதற்கும் குறைவானதாகும்.


உணவு


இப்பாம்புகள் பொதுவாக மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்கின்றன. எனினும் இவை மீன்கள், தவளைகள், அரணைகள், பாம்பு முட்டைகள் போன்றவற்றையும் தின்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.


நஞ்சு


இதன் நஞ்சு நரம்புகளைத் தாக்கிக் கொல்லக்கூடியது. நாகப்பாம்பின் நஞ்சைவிட 7 முதல் 14 மடங்கு குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. இதற்கான குறிப்பிட்ட எதிர்நச்சு இந்தியாவில் கிடைப்பதில்லை.


வெளி இணைப்புகள்

பங்காரசு வாசியேட்டசு – விக்கிப்பீடியா

Banded krait – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.