மணிப் பல்லி (beaded gecko) என்பது லூகாசியம் டமாயியம் எனப்படும் ஆத்திரேலியாவில் மட்டுமே காணப்படும் பல்லி வகைகளுள் ஒன்றாகும்.
விளக்கம்
லூகாசியம் பேரினத்தின் ஒரு சில இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இச்சிற்றினங்களும் ஆத்திரேலியாவில் மட்டுமே காணக்கூடியன. சுமார் 7 செ.மீ நீளமுடைய மணி பல்லி, சிவப்பு கலந்த பழுப்பு நிறமுடையது. நுரை நிறத்தில் காணப்படும் வெளிறிய முகடுடைய முதுகெலும்பு பட்டைகளைச் சுற்றி மணிகளின் சங்கிலிகளைப் போலத் தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது. உடலின் பக்கவாட்டுப்பகுதிகளிலும், கால்களைச் சுற்றியும், வெளிறிய பழுப்பு நிற கறைபோன்ற ஒற்றை வரிக் கோடுகள் சிதறிய புள்ளிகளுடன் காணப்படும். இப்பல்லி சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் வட்ட வடிவ முகத்தினைக் கொண்டுள்ளது. மேல் கண்ணிமையானது வெண்மை அல்லது நுரை நிறத்தில் காணப்படும். இக்கண் இமையால் கண்ணை மறைக்கவோ, பாதுகாக்கவோ அல்லது சுத்தம் செய்யவோ இயலாது. மாறாகக் கண்ணை மூடியிருக்கும் ஒளி ஊடுருவும் செதில் போல அமைந்துள்ளது. கண்ணைச் சுத்தமாக வைத்திருக்க இப்பல்லி தன்னுடைய நீண்ட தட்டையான நாக்கைப் பயன்படுத்துகிறது. ஒப்பீட்டளவில் பெரிய கண்களை உடையது. மெல்லிய கண்மணியானது பகல் வேளையில் செங்குத்து பிளவு உடையதாகவும், இருட்டு நேரங்களில் வட்டமாகவும் மாறுகின்றது. வாலானது உடலின் தொடர்ச்சியாக நேராக உள்ளதால் உடலின் தொடர்ச்சியான வடிவம் வாலிலும் காணப்படும். ஆனால் பழுப்பு நிறப் புள்ளிகள் கொண்ட அடர் வண்ண வாலினை மறு உருவாக்கத்தின் போது தோற்றுவிக்கும். இப்பல்லியின் கால்விரல்கள் தட்டையாகவும் ஒட்டும் பட்டையற்று, வெண்மை நிறத்தில் உள்ளது. இக்கால்கள் மரங்களில் ஏறுவதற்கு உகந்ததாக இல்லை மணிகளால் ஆன கெக்கோ இரவு நேரமானது. பகலில் ஒளிந்துகொண்டு இரவில் வெளியே உணவைத் தேடி அதிக தூரம் பயணிக்கிறது.
பரவல்
மணிப் பல்லிகள் ஆத்திரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் வடக்கு பிராந்தியத்திலும் வறண்ட மற்றும் பகுதி வறண்ட காலநிலை நிலவும் பகுதிகளில் காணப்படுகின்றன
சூழலும் மற்றும் வாழ்விடம்
மணி பல்லிகள் நிலப்பரப்பு (நிலத்தில் வசிக்கும்) விலங்கு ஆகும். இது ஆத்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியில் சவனா வனப்பகுதியிலிருந்து ஸ்பைனிஃபெக்ஸ்-சாண்ட்மலைகள் வரையிலான வறண்ட பாலைவன வாழ்விடங்களில் காணப்படுகிறது. இப்பள்ளிகள் திறந்தவெளிகளில் உள்ள பூச்சிகள் மற்றும் சிலந்திகளின் சிறு துளைகளில் பகல் பொழுதில் மறைந்து காணப்படும். இரவில் இரைதேடி வேட்டையாட வெளிவருகின்றது. வேகமாகச் செல்லக்கூடிய இந்த பல்லி பரந்த நிலப்பரப்பில் இரைதேடும் தன்மையுடையது.
இனப்பெருக்கம்
மணிப் பல்லிகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வகையின. பெண் பல்லிகள் தொகுப்பு ஒன்றில் 2 முட்டைகள் என இடும். பெரும்பாலான ஆத்திரேலிய நாட்டு ஊர்வனவற்றைப் போலவே இந்த பல்லிகளின் இனப்பெருக்க காலமும் உள்ளது. இதன் இனப்பெருக்க காலமானது செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து திசெம்பர் வரை இருக்கும். ஆண் பல்லியில் ஓர் இணை இனப்பெருக்க உறுப்புகள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்கக்கூடியது.
உணவு
பிற சிறிய பல்லிகளைப் போலவே மணிப் பல்லியும் பூச்சிகளை முக்கிய உணவாக உட்கொள்கின்றன. தாடையில் குறுகிய பற்கள் காணப்பட்டபோதிலும் உணவினை மென்று சாப்பிடுவதைவிட நொறுக்கிச் சாப்பிடுவதையே இப்பல்லிகள் விரும்புகின்றன.
அச்சுறுத்தல்கள்
வாழ்விட இழப்பு, நாய்கள், பூனைகள் மற்றும் நரிகள் உள்ளிட்ட கொன்று திண்ணிகளின் தொந்தரவு இதன் அச்சுறுத்தலாக உள்ளன.