நாகப்பாம்பு

நாகம் நஞ்சுள்ள பாம்பு ஆகும். இது நாஜா என்ற வகையில் எலாப்பிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. நாகப்பாம்புகள் பொதுவாக ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் வெப்பமண்டல, பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. இந்தியாவில் இதை நல்ல பாம்பு என்று அழைக்கின்றனர். இந்தியாவின் பெரும் நான்கு நச்சுடைய பாம்புகளில் இதுவும் ஒன்று.


சங்க இலக்கியங்களில் நாகம்


 • படமெடுத்தாடும் நாகத்தை இடி தாக்கும் நாகம்

 • நாகம் தன் நஞ்சைக் கக்கும். அது இறுகி மணியாக மாறும்.

 • முப்புரம் எரிக்கும்போது சிவபெருமானுக்கு மலை வில்லாகவும், நாகம் நாணாகவும் பயன்படுத்தப்பட்டது என்பது ஒரு புராணக் கதை.

 • ஐந்து தலை கொண்ட நாகம் என்பதும் ஒருவகைக் கற்பனை.

 • உடலமைப்பு


  நாகப்பாம்புகளின் உடலில் காணப்படும் சிறப்பான உறுப்பு தலையில் இருக்கும் ஒரு விரியக் கூடிய தசை ஆகும். இவை தாக்கும் போதோ, தற்காப்புக்காகவோ அவற்றை விரிக்கும். இது எதிரியை அச்சுறுத்தவே ஆகும். இதனை படம் எடுத்தல் என்பர். இப்பாம்புகள் மஞ்சள் கலந்த வெள்ளை, கரும்பழுப்பு மற்றும் வெளிர்சாம்பல் நிறங்களில் இருக்கின்றன. இதன் நிற அமைப்பின் காரணமாக அது தான் வாழும் தரையில் புற்களுக்கு இடையே அரிதாகவே கண்ணுக்குத் தெரிகிறது. ஒருவகை நாகப் பாம்பின் படத்தில் மூக்குக் கண்ணாடி போன்ற குறி ஒன்றுள்ளது. இதனால் கண்ணாடிப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.


  நச்சுச் சுரப்பி


  நச்சுப் பாம்புகளைப் போலவே இப்பாம்பின் தலையில் இரண்டு நச்சுச் சுரப்பிகள் மேல்தாடையில் உள்ள இரண்டு பெரிய பற்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இப்பாம்பு இதன் பற்களால் கடிக்கும் பொழுது அவற்றின் வெளிப்புறம் அமைந்த துளை வழியாக நச்சு கடிபட்ட உயிரினத்தின் இரத்தத்துடன் கலக்கிறது. இப்பாம்பிற்கு நச்சுப்பல் உடைந்து போனால் கூட அந்த இடத்தில் புதிய நச்சுப் பல் முளைத்து விடுகிறது.


  நச்சுத் துளிகள்


  இப்பாம்பு கடிக்கும் பொழுது இதனிடமிருந்து வெளியேறும் நச்சுத்துளியின் அளவு 4 முதல் 6 துளிகள் அளவாக உள்ளது. இவை பிடிபட்ட உயிரினத்தைக் கொல்வதற்கு போதுமானதாக உள்ளது. மயில், சிங்காரக் கோழிகள் போன்றவற்றிற்கு இந்த நச்சு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இப்பாம்பு கடித்தால் மனிதனுக்கு இறப்பு நேரிடும். இப்பாம்பின் நச்சு மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடிபட்டவனுக்குப் பெருங்களைப்பும், அடக்க முடியாத தூக்கமும் ஏற்படுகின்றன. பின்பு மூச்சடைக்கிறது. தலை சுற்றுதல், வாந்தி எடுத்தல், உடல் குளிர்தல், இருதயச் செயல்பாடு குறைதல் போன்றவை ஏற்பட்டு மனிதன் இறக்கிறான். நாகப்பாம்பு கடித்தால் நச்சு இரத்தத்தில் கலந்து விடாது தடுப்பதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


  வாழ்விடம்


  இப்பாம்பு கற்களுக்கு அடியில், இடிபாடுகளுக்கிடையில் வாழக்கூடிய தன்மையுடையது. சில சமயம் வீட்டுக்குள்ளும் புகுந்து விடும்.


  உணவு


  இப்பாம்புகள் பிற பாம்புகளைப் போல் தனது அசைந்தியங்கும் தாடைகளின் உதவியுடன் இரையை முழுதாக விழுங்கும். இவை பல்லி, சிறு பாம்புகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டி வகைகளை உணவாக உட்கொள்கின்றன.

  வெளி இணைப்புகள்

  நாகம் பேரினம் – விக்கிப்பீடியா

  Naja – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *