மரகத மர போவா (அல்லது பச்சை மர போவா) என்பது ஒரு நஞ்சற்ற போவா வகையைச் சேர்ந்த ஒரு பாம்பு. இது பச்சை நிறத்தில் காணப்படும். இது மரத்தின் மீதே வாழ்கிறது. இப்பாம்பு தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகிறது. இதன் சிற்றினங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது 6 அடி நீளம் வரை வளரக்கூடியது. இது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் பரவலாக கொலம்பியா, ஈக்வெடார், பெரு, பிரேசில், வெனிசுவேலா, சுரினாம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது இரவில் இரை தேடும் பாம்பு. பகலில் ஏதேனும் மரத்தின் மீது உடலைச் சுருட்டி தலையை நடுவில் வைத்து ஓய்வெடுக்கும். சிறு பாலூட்டிகளை முதன்மையான உணவாகக் கொள்கிறது.