ஜெர்மானிய மேய்ப்பன் நாய் (German Shepherd Dog) அல்லது அல்சேஷியன் ஒரு பெரும் அளவு உருவமுள்ள, ஜெர்மனியில் தோற்றுவாய் கொண்ட வளர்ப்பின நாயாகும்.
ஒப்புமையில், ஜெர்மன் ஷெஃபர்டுகள் புதிய வளர்ப்பின நாய்களாகும்; இவற்றின் தோற்றுவாய்க் காலம் 1899வது வருடமாகும். ஜெர்மன் ஷெஃபர்ட் நாயானது, துவக்கத்தில், மந்தைக் குழுவின் ஒரு அங்கமாக, மந்தையை மேய்த்துச் செல்வதற்காகவே உருவானதாகும். அவற்றின் வலிமை, நுண்ணறிவு மற்றும் கீழ்ப்படிதலுக்கான பயிற்சியின்போது அவை வெளிப்படுத்தும் ஆற்றல்கள் ஆகியவற்றின் காரணமாக, அவை உலகெங்கும் காவல் நாய், போர் நாய் எனப் பல்வேறு பணிகளிலும் நியமிக்கப்படுகின்றன.
உலகின் முதன்மையான காவல், பாதுகாப்பு மற்றும் ராணுவ நாய் என்பது ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்தான். அவற்றின் விசுவாசம் மற்றும் காத்து நிற்கும் இயல்பு ஆகியவற்றால், ஜெர்மன் ஷெஃபர்ட் நாயினம் மிகவும் பிரபலமான வளர்ப்பின நாய்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
வரலாறு
தோற்றுவாய்கள்
1800களில் வளர்ப்பினங்களை பொதுத்தரப்படுத்துவதற்கான முயற்சிகள் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டன. ஆட்டு மந்தைகளை மேய்ப்பதில் உதவி புரியவும் மற்றும் பிற விலங்கினங்களை இரையாக்கி வாழும் விலங்குகளிலிருந்து கால் நடைகளைக் காக்கவும் தேவையான பண்புகள் கொண்ட நாய்களின் இனம் வளர்க்கப்படலானது. ஜெர்மனியில், பகுதி சார்ந்த சமூகங்களில் இந்த முறைமை கடைப்பிடிக்கப்படலாயிற்று. மாடு மேய்ப்பர்கள், மேய்ச்சலுக்குத் தேவையான குண நலன்களான, நுண்ணறிவு, வலிமை மற்றும் மோப்பம் போன்ற கூரிய புலனுணர்ச்சி ஆகியவை கொண்டுள்ளதாக நம்பப்பட்ட நாய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வளர்க்கலாயினர்.
இதன் விளைவாக, தங்கள் வேலையைப் பிரமிக்கத்தக்க அளவில் திறம்படச் செய்யும் நாய்கள் உருவாயின; ஆனால், இவை, உருவ அளவிலும் தங்களது திறனிலும், பகுதி சார்ந்து பெரும் அளவில் மாற்றங்களைக் கொண்டிருந்தன.
இந்த வேறுபாடுகளை நீக்குவதற்காக, பொதுத் தரப்படுத்தப்பட்ட நாய்களின் வளர்ப்பினங்களை உருவாக்கும் ஃபைலாக்ஸ் சொசைட்டி என்னும் விலங்குகளுக்கான கழகம் ஒன்று ஜெர்மனியில் 1891வது வருடம் துவங்கப்பட்டது. ஆனால், இந்தக் கழகம், அது ஊக்கமளிக்க வேண்டிய பண்புகள் பற்றியே தகராறு மூண்டதால், மூன்றே வருடங்களில் கலைக்கப்பட்டது; நாய்கள் பணி சார்ந்த நோக்கங்களுக்காக மட்டுமே வளர்க்கப்பட வேண்டும் என்று சிலர் நம்பினார்கள்; வேறு சிலரோ நாய்கள் அவற்றின் தோற்றத்திற்காகவும் வளர்க்கப்பட வேண்டும் என்று கருதினார்கள். தங்களது இலக்கை அடைவதில் ஃபைலாக்ஸ் சொசைட்டி வெற்றி அடையாவிட்டாலும், சுயேச்சையாக, நாய்களின் வளர்ப்பினத்தைப் பொதுத் தரப்படுத்துவதிலான ஆர்வத்தை இது மக்களுக்கு ஊட்டியது.
முன்னாள் காலாட்படைத் தலைவரும், பெர்லின் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவருமான மேக்ஸ் வோன் ஸ்டெஃபனிட்ஜ் இத்தகைய முன்னாள் உறுப்பினர்களில் ஒருவர். நாய்கள் அவற்றின் பணி நிமித்தமே வளர்க்கப்பட வேண்டும் என்று இவர் உறுதியாக நம்பினார்.
1899வது வருடம், வோன் ஸ்டெஃபனிட்ஜ், நாய்களின் ஒரு கண்காட்சியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது,ஹெக்டார் லிங்க்ஸ்ரையன் என்னும் நாய் ஒன்று அவருக்குக் காட்டப்பட்டது. அந்த ஹெக்டாரானது பல தலைமுறைகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பின நாய்களின் பரம்பரையில் வந்ததாகும். ஒரு பணி நாய் என்னென்ன கொண்டிருக்க வேண்டும் என்று வோன் ஸ்டெஃபனிட்ஜ் நம்பினாரோ அவை அனைத்தையும் இது கொண்டிருந்தது. அந்த நாயின் வலிமை கண்டு மகிழ்ந்த அவர், அதன் நுண்ணறிவு மற்றும் விசுவாசம் ஆகியவற்றைக் கண்டு பிரமித்து, உடனடியாக அதை விலைக்கு வாங்கினார். அந்த நாயை விலைக்கு வாங்கிய பிறகு, அதன் பெயரை ஹோராண்ட் வோன் க்ராஃப்ரத் என்று மாற்றியமைத்த வோன் ஸ்டெஃபனிட்ஜ், வெரெனின் ஃபர் ட்யூட்ஷ் ஸ்காஃபெர்ஹண்ட் (ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களுக்கான கழகம்) என்னும் அமைப்பைத் துவக்கினார். முதல் ஜெர்மன் ஷெஃபர்ட் நாயாக ஹோராண்ட் அறிவிக்கப்பட்டது; மற்றும் இந்தக் கழகத்தின் வளர்ப்பினப் பதிவேட்டில் பெயரேற்றப்பட்ட முதல் நாயும் இதுவேயானது.
இந்தக் கழகத்தின் நாய் வளர்ப்பு நிரல்கள் அனைத்திலும் ஹோராண்டே மையமானதாக இருந்தது; கழகத்தைச் சார்ந்த பிற உறுப்பினர்களின், விரும்பத்தக்க குண நலன்களைக் கொண்ட நாய்களுடனும் இது இணையாக்கப்பட்டது. ஹோராண்ட் பல குட்டிகளுக்கு தகப்பன் ஆனாலும், அதன் மிகவும் வெற்றிகரமான வாரிசு என்பது ஹெக்டார் வோன் ஸ்க்வாபென் என்னும் நாய்தான்.
ஹெக்டார், ஹோராண்டின் மற்றொரு குட்டியுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபடுத்தப்பட்டு, இதன் விளைவாக பியோவுல்ஃப் பிறந்தது. பின்னர், இது மொத்தமாக எண்பத்து நான்கு குட்டிகளுக்குத் தகப்பனானது; இவற்றில் பலவும் ஹெக்டாரின் பிற குட்டிகளுடனான இனப் பெருக்கத்தின் வழியாகப் பெறப்பட்டவையே. பியோவுல்ஃபின் சந்ததியும் இவ்வாறு உள்ளாகவே இனப் பெருக்கம் செய்யப்பட்டு, இந்த நாய்க்குட்டிகளின் வழியாகவே அனைத்து ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களின் மரபிணைப்பும் துவங்கியது. வோன் ஸ்டெஃபனிட்ஜ்ஜின் வலிமையான, சமரசம் செய்து கொள்ளாத தலைமைப் பண்புகளால்தான் இந்தக் கழகம் தனது இலக்கை அடைய முடிந்தது என்று நம்பப்படுகிறது. ஆகையால், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் வளர்ப்பினத்தின் உருவாக்குனராக அவர் மதிக்கப்படுகிறார்.
பிரபலத்தன்மை
1919வது வருடம் யூகே நாய்ப்பட்டைச் சங்கம் முதன் முதலாக இந்த வளர்ப்பினத்தின் பதிவை ஏற்றுக் கொண்டபோது, ஐம்பத்து நான்கு நாய்கள் பதிவு செய்யப்பட்டன; 1926வது வருட வாக்கில் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்திற்கும் மேலாக உயர்ந்து விட்டது. முதலாவது உலகப் போர் முடிவுற்ற வேளையில், போரிலிருந்து திரும்பி வந்த வீரர்கள் இந்த வளர்ப்பினம் பற்றி மிகவும் உயர்வாகக் கூறியதை அடுத்து இந்த வளர்ப்பினம் சர்வதேச அங்கீகாரத்தை முதன் முறையாகப் பெற்றது. இந்த விலங்கின நடிகர்களான ரின் டின் டின் மற்றும் ஸ்ட்ராங்ஹார்ட் ஆகியவை இந்த வளர்ப்பினத்தை மேலும் பிரபலமாக்கின.
யுனைடட் ஸ்டேட்ஸில் முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்ட ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் சுவிட்சர்லாந்த் ராணி (க்வீன் ஆஃப் சுவிட்சர்லாந்த் ) என்பதாகும்; இருப்பினும், மோசமான வளர்ப்பு முறையால் இது ஈன்ற குட்டிகள் தொல்லையுறலாயின. இதன் காரணமாக, 1920களின் பிற்பகுதியில் இந்த இனத்தின் பிராபல்யமானது மங்கலானது. 1937 மற்றும் 1938 ஆகிய வருடங்களில், சைகர் ஃபெஃபர் வோன் பெர்ன் என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட், அமெரிக்க நாய்ப்பட்டை சங்கம் நிகழ்த்திய நாய் கண்காட்சியில் கிராண்ட் விக்டர் பட்டத்தை அடைந்தவுடன் இந்த வளர்ப்பினத்தின் புகழானது மீண்டும் அதிகரிக்கலானது. இருப்பினும், விரைவிலேயே இரண்டாவது உலகப்போர் முடிவுற்ற வேளையில் அந்தக் கால கட்டத்தில் நிலவி வந்த ஜெர்மனிக்கு எதிரான உணர்வு காரணமாக, இது மீண்டும் மதிப்பிழக்கத் துவங்கியது. நாளடைவில், இவற்றின் புகழ் மெல்ல மெல்ல அதிகரித்து 1993வது வருடம் யுனைடட் ஸ்டேட்ஸில் புகழ் வாய்ந்த வளர்ப்பின நாய்களில் இவை மூன்றாவது இடம் பெற்றன. இந்த இடத்தை இவை இன்றளவும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
மேலும், பிற பதிவீடுகளிலும் இந்த வளர்ப்பினம் மிகுந்த புகழ் பெற்றவற்றுள் ஒன்றாகத் திகழ்கின்றன.
பெயர்
வோன் ஸ்டெஃபனிட்ஜ் இந்த வளர்ப்பினத்திற்கு, ட்யூட்ஷர் ஸ்காஃபெர்ஹண்ட் , அதாவது “ஜெர்மன் மேய்ப்பன் (ஷெஃபர்ட்) நாய்” என்று நேரடியாகப் பொருள் படும்படியாகப் பெயரிட்டார்.
இந்த வளர்ப்பினத்தின் முதன்மையான நோக்கம் மாடு மேய்ப்பவர்களுக்கு உதவி புரிவதும், ஆடுகளைக் காப்பதுமாக இருந்ததால், இது இவ்வாறு பெயரிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், ஜெர்மனியிலுள்ள அனைத்து மந்தை மேய்ச்சல் நாய்களுமே இந்தப் பெயர்தாம் கொண்டிருந்தன; அதனால், இவை ஆல்ட்யூட்ஷ் ஸ்காஃபெர்ஹண்ட் அல்லது பழம் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் என்று அறியப்படலாயின. இந்த ஷெஃபர்ட் நாய்கள் முதன் முதலாக 1908வது வருடம் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டிஷ் நாய்ப்பட்டிச் சங்கம் 1919வது வருடம் இந்த வளர்ப்பினத்தை அங்கீகரிக்கத் துவங்கியது.
இந்தப் பெயரின் நேரடி மொழி பெயர்ப்பு இந்த வளர்ப்பினத்தின் அதிகாரப்பூர்வமான பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது; இருப்பினும் முதலாம் உலகப்போர் முடிவுற்ற வேளையில், இதன் பெயரில் “ஜெர்மன்” என்னும் சொல் இருப்பது, இந்த வளர்ப்பினத்தின் செல்லுமையைக் குறைக்கக் கூடும் என்று நம்பப்பட்டது; காரணம், அந்தக் கால கட்டத்தில் நிலவி வந்த ஜெர்மனிக்கு எதிரான உணர்வுதான்.
யூகே நாய்ப்பட்டி சங்கம் இந்த வளர்ப்பினத்திற்கு அதிகாரப்பூர்வமாக அலாஸ்தியன் ஓநாய் நாய்[a] என்று பெயரிட்டது. பல சர்வதேச நாய்ப்பட்டி சங்கங்களும் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டன. நாளடைவில், “ஓநாய் நாய்” என்னும் பிற்சொல் விடப்பட்டு விட்டது. 1977வது வருடம் நாய் ஆர்வலர்கள் பிரிட்டனின் நாய்ப்பட்டி சங்கங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, இந்த வளர்ப்பினத்தின் பெயரை மீண்டும் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் என்று பதியும்படி அனுமதிக்குமாறு பிரசாரம் மேற்கொண்டது வரையில், அலாஸ்தியன் என்னும் பெயரே ஐம்பது வருட காலத்திற்கு நீடித்திருந்தது.
நவீன கால வளர்ப்பினம்
வோன் ஸ்டெஃபனிட்ஜ் ஆரம்பத்தில் இந்த வளர்ப்பினம் பற்றி அளித்த சித்தாந்தத்திலிருந்து விலகி விட்டதாக நவீன ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் விமர்சிக்கப்படுகிறது: அதாவது ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் என்பவை பணி நாய்களாக மட்டுமே வளர்க்கப்பட வேண்டும் என்றும், இதன் குறைபாடுகளை விரைவில் களைய, இதன் வளர்ப்பு மிகவும் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.[b] அக்கறையற்ற வளர்ப்பினால், இந்த வளர்ப்பினத்தில் பிற குறைபாடுகளுடன் நோய்களும் பெருகி விட்டதாக விமர்சகர்கள் நம்புகிறார்கள். வோன் ஸ்டெஃபனிட்ஜ் மேற்பார்வையிட்ட வளர்ப்பின முறைமைகளில், குறைபாடுகள் விரைவில் களையப்பட்டன; ஆனால், நவீன காலத்தில் இந்த வளர்ப்பினம் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி இனப் பெருக்கம் செய்யப்படுவதால், நிறம் வெளிறுவது, இடுப்பின் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி மற்றும் ஒற்றை விரை மட்டுமே கொண்டுள்ளமை பலவீனமான மனப்போக்கு மற்றும் பற்கள் இழப்பு ஆகிய மரபியல் சார்ந்த பிரச்சினைகள் பொதுவாகக் காணப்படுகின்றன; மேலும், பருவ வயதை அடையும் போது முழுதும் திறவாத, வளைந்த அல்லது மூடிய காதுகளையும் இவை கொண்டுள்ளன.
விபரம்
ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் பெரும் உருவம் கொண்ட வளர்ப்பின நாய்கள். இவை, பொதுவாக தோளெலும்புகளுக்கு இடையிலான உயர் முகட்டில் 55 மற்றும் 65 சென்டிமீட்டர்கள் (22 மற்றும் 26 in) என்பதாகவும் மற்றும் 22 மற்றும் 40 கிலோகிராம்கள் (49 மற்றும் 88 lb) ஆகியவற்றிற்கு இடையிலான எடையும் கொண்டுள்ளன. இவற்றின் ஆதர்சமான உயரம், பிரிட்டிஷ் நாய்ப்பட்டை சங்க த்தின் பொதுத் தர நிலைகளின்படி,63 சென்டிமீட்டர்கள் (25 in) என்பதாகும். இவை குவி மாட அமைப்பு கொண்ட தலை, ஒரு நீண்ட சதுர-வெட்டான வாய் முகப்பு மற்றும் கருத்த நாசி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றின் தாடைகள், கத்திரி-போன்று கடிக்கக் கூடிய அமைப்புடன் மிகவும் வலுவானவை. கண்கள் நடுத்தர அளவில், பழுப்பு நிறம் கொண்டு இவற்றின் நுண்ணறிவு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளன. இவற்றின் காதுகள் பெரிதாகவும், எழுச்சியுற்று நிற்பதாகவும், முன் புறம் திறந்த வாக்கில் இணையாகவும், ஆயினும், பெரும்பாலான நேரங்களில் நடமாட்டத்தின்போது பின்புறம் பிடித்திழுக்கப்படுதாகவும் உள்ளன. உணர்ச்சி வயப்படுகையில் நிமிர்ந்த வாட்டத்திலும் மற்றும் விரைவான நடமாட்டத்தின்போது இறங்கி விடுவதுமான இயல்பு கொண்ட நீண்ட கழுத்தையும் இவை பெற்றுள்ளன. இவற்றின் வால் அடர்த்தியாக பின்னங் குதிகால் வரை நீண்டதாகவும் உள்ளது.
ஜெர்மன் ஷெஃபர்டுகள் பல நிறங்களிலும் இருக்கலாம். மிகவும் பொதுவானவை காய்ந்த பழுப்பு/ கருப்பு மற்றும் சிவப்பு/கருப்பு வகைகளாகும். இரண்டு வகைகளும் கருப்பு முகமறைகள் மற்றும், பொதுவாக அறியப்படும் “சேணம்” என்பதிலிருந்து உடல் முழுவதையும் மூடியுள்ள “போர்வை” என்னும் நிலை வரையிலுமான கருப்பு உடல் குறிகள் கொண்டிருக்கின்றன. அரிதான நிற வகைகளில், அழகிய கருநிறம், முழு-கருநிறம், முழு வெண்மை, கல்லீரல் நிறம், செங்கரடிப் பூ நிறம், புலி போல கோடிட்டமை மற்றும் நீலம் ஆகியவையும் அடங்கும்.
பல பொதுத்தர நிலைகளின்படியும், முழுவதும் கருப்பு மற்றும் அழகிய கரு நிறம் ஆகிய வகைகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியன; இருப்பினும் நீல நிறம் மற்றும் கல்லீரல் நிறம் கொண்டவை குறைபாடுகள் உடையவனவாகவும், முழுவதும்-வெள்ளை நிறம் கொண்ட வகைகள் உடனடியான நிராகரிப்புக்கு உட்பட்டதாகவும், சில பொதுத்தர நிலைகளின்படி கருதப்படுகின்றன. வெள்ளைத் தோலானது இந்த வகை நாய் கண் பார்வைக்கு உடனடியாகத் தென்படுவதால் பாதுகாவல் பணிக்குப் பொருத்தமற்றதாக இருப்பதும் மற்றும் பனி மூட்டம் அல்லது ஆட்டு மந்தைகளை மேய்த்தல் ஆகிய நேரங்களில் கண்ணில் தென்படாமல் இருப்பதுமே இத்தகைய நிராகரிப்பின் காரணம்.
ஜெர்மன் ஷெஃபர்டுகள் இரட்டைத் தோல்களைக் கொண்டுள்ளன. வருடம் முழுதும் உதிர்க்கப்படும் வெளித் தோலானது நெருக்கமானதாகவும், அடர்த்தியானதாகவும் ஒரு பருமனான உட்தோலைக் கொண்டும் உள்ளது. இந்தத் தோலானது நடுத்தரம் மற்றும் நீளம் ஆகிய இரண்டு வகைகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நீள்-ரோம மரபணு பின்னடையும் பாங்கு கொண்டுள்ளது. இது இந்த இனத்தை மிகவும் அரிதான ஒன்றாகச் செய்கிறது. நீள்-ரோம மாறுபாட்டின் ஏற்புடமை தரநிலைகளுக்கு இடையே மாறுபடுகிறது. இவை ஜெர்மன் மற்றும் யூகே நாய்ப்பட்டை சங்கங்களால் ஏற்கப்படுகின்றன; ஆனால், அமெரிக்க நாய்ப்பட்டை சங்கம் இதை ஒரு குறைபாடாகக் கருதுகிறது.
நுண்ணறிவு
ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் குறிப்பாக அவற்றின் நுண்ணறிவுத் திறனுக்காகவே வளர்க்கப்பட்டன. இந்தப் பண்பின் காரணமாகவே அவை இன்றும் புகழ் பெற்றுள்ளன. நுண்ணறிவைப் பொறுத்த வரையில், பார்டர் கோலி மற்றும் பூடில் என்னும் நாய் வகைகளுக்கு அடுத்தாற்போல, மூன்றாவது இடத்தில் அவை இருப்பதாகக் கருதப்படுகின்றன. நாய்களின் நுண்ணறிவு என்னும் புத்தகத்தில், ஸ்டேன்லி கோரென் இந்த இன நாய்களை அவற்றின் நுண்ணறிவின் அடிப்படையில் மூன்றாவது இனமாக மதிப்பிட்டார். இவை எளிய பணிகளை ஐந்தே முறை மீண்டும் மீண்டும் செய்தவுடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்ததாகவும் மற்றும் 95 சத நிகழ்வுகளில் இவை முதலில் அளிக்கப்படும் கட்டளையை நிறைவேற்றுகின்றன என்றும் அவர் கண்டறிந்தார். அவற்றின் உடல் வலிமையுடன் கூடுதலாக, இந்தப் பண்பும் இணைகையில் இந்த இனத்து நாய்கள், காவல்துறை, பாதுகாவலன் மற்றும் தேட்டம் மற்றும் இடர்மீட்பு நாய் ஆகிய பணிகளுக்கு உகந்தவையாகின்றன; இவை பெரும் உருவம் கொண்ட பிற வளர்ப்பின நாய்களை விடவும் விரைவில் பணிகளைக் கற்றுக் கொண்டு, ஆணைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் கொண்டுள்ளன.
வலியத் தாக்கும் மற்றும் கடிக்கும் தன்மைகள்
தமது கடி திறனுக்காக சில தனி நபர்களிடையே ஜெர்மன் ஷெஃபர்டுகள் மிகவும் புகழ் பெற்று அதன் விளைவாக சில அதிகார வரம்புப் பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நாய்ப்பட்டை சங்க புள்ளி விபரங்களின்படி, யுனைடட் ஸ்டேட்ஸின் மிகவும் புகழ் பெற்ற முதல் ஐந்து நாயினங்களில் ஜெர்மன் ஷெஃபர்டுகள் உள்ளன. சிறந்த முறையில் சமூகப் பழக்கங்கள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்ட ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவும் பெயர் பெற்றுள்ளன (கீழே கொடுக்கப்பட்டுள்ள மனப்போக்கு என்னும் பகுதியைக் காண்க. யுனைடட் ஸ்டேட்ஸில், பிற நாயினங்களை விடவும் ஜெர்மன் ஷெஃபர்ட் இனமே, நாய்க்கடிகளாக அறிவிக்கப்படுவனவற்றிற்குப் பொறுப்பானவை என்று ஒரு தோற்று வாய் அறிவிக்கிறது; மேலும், இவை சிற்றுருவம் கொண்ட வளர்ப்பின நாய்களைத் தாக்கும் போக்குடையவனவாக உள்ளன என்றும் அது கூறுகிறது. 1999வது வருடம் முதலான ஒரு ஆஸ்திரேலிய அறிக்கை சில ஆஸ்திரேலியப் பகுதிகளில் மிகவும் தாக்கும் நாயின வகைகளில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மூன்றாவது இடத்தில் இருப்பதாகப் புள்ளி விபரங்களை அளிக்கிறது.
இருப்பினும், நாய்க்கடித் தடுப்பு மற்றும் அது தொடர்பான விஷயங்களில் அறிவுரை அளிக்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், “ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த நாய்களின் எண்ணிக்கையைக் கண்டறிய தற்போது துல்லியமான வழி ஒன்றும் இல்லை. இதன் விளைவாக, எந்த இன நாய்கள் கடிக்கும் அல்லது கொல்லும் போக்கைக் கொண்டுள்ளன என்று தீர்மானிப்பதற்கும் ஒரு அளவீடும் இல்லை” என அறிவித்துள்ளன. இதைப் போன்று, நாய்கள் வலியத் தீங்கிழைத்தல் மற்றும் நாய்-மனித ஊடாடுதல்கள் ஆகியவற்றின் மீதான பணிக் குழுவின் அறிக்கைகள் மூலமாக அமெரிக்க கால்நடை மருத்துவக் கழகம் இவ்வாறு கூறுகிறது: “ஒரு குறிப்பிட்ட வளர்ப்பினத்தின் கடி விகிதத்தையோ அல்லது வளர்ப்பினங்களின் இடையில் அவற்றின் கடிவிகிதத்தை ஒப்புமை செய்வதோ ஏன் சாத்தியமல்ல என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கடிக்கும் நாயின் வளர்ப்பினம் சரியாகப் பதியப்படாமல் இருக்கலாம்; மேலும் கலப்பின நாய்களும் தூய இன நாய்களைப் போல விவரிக்கப்படுகின்றன. இரண்டாவதாக, ஒரு சமூகத்தில் ஏற்படும் கடி நிகழ்வுகளின் உண்மையான எண்ணிக்கை, குறிப்பாக அவை தீவிரமான காயங்கள் விளைவிக்காதபோது, அறியப்படுவதில்லை. மூன்றாவதாக, ஒரு சமூகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வளர்ப்பினம் அல்லது வளர்ப்பினங்களின் கூட்டான நாய்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அறியப்படவில்லை. காரணம், ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து நாய்களுமே உரிமம் பெற்றிருப்பது அரிதானது; மற்றும் தற்போதுள்ள உரிமம் குறித்த தரவுகளும் முழுமையற்றுள்ளன.” மேலும், கடி நிகழ்வுகளாக “தெரிவிக்கப்பட்ட”வற்றின் அடிப்படையினையே ஆய்வுகள் சார்ந்துள்ளன. இதன் காரணமாகவே,தேசிய நிலவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி டாக் விஸ்பரர், பெரும்பான்மையாக உள்ள வளர்ப்பின நாய்களை விடச் சிறுபான்மையாக உள்ள வளர்ப்பினங்கள் அதிக விகிதத்தில் பொறுப்பாக்கப்பட்டுப் பல வேளைகளில் இவை வெளிப்படுத்தப்படாமல் போகின்றன என்ற முடிவுக்கு வருமாறு நேர்ந்தது. இதற்கும் மேலாக, தேசிய நிலவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான டேஞ்சரஸ் என்கௌண்டர்ஸ் என்பதானது, ரோட்வெய்லரின் 300 பவுண்டு வலிமை கொண்ட கடிதிறன், பிட்புல்லின் 200 பவுண்டுக்கும் மேலான வலிமை கொண்ட கடிதிறன், ஒரு லேப்ரடார் ரிட்ரைவரின் சுமார் 125 பவுண்டு வலிமை கொண்ட கடிதிறன் அல்லது ஒரு மனிதனின் ஏறத்தாழ 170 பவுண்டு வலிமை கொண்ட கடிதிறன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது) ஒரு ஜெர்மன் ஷெஃபர்ட் நாயின் கடி 200 பவுண்டு வலிமை கொண்டுள்ளது என்றும் கூறுகிறது; “அறிவிக்கப்படும்” கடி நிகழ்வுகள் மற்றும் நாய்க்கடியால் விளைந்த கடுமையான காயம் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளைக் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதும் மற்றும் நாய் ‘வலியச் சென்று தாக்குதல்’ என்பதை நாய் தாக்குதல் என்பதிலிருந்து வேறுபடுத்த வேண்டியதையும் இது குறிக்கிறது என்பதும் இதன் பொருளாகும். இவை எவ்வாறு இருப்பினும், 1975வது வருடம் துவங்கி, பொமரேனியன் உள்ளிட்ட சிறு உருவம் கொண்ட வளர்ப்பினங்களையும் சேர்த்து 30 வளர்ப்பினங்களுக்கும் மேலாக வளர்ப்பின நாய்கள், மரணத்தை உருவாக்கும் நிகழ்வுகளை உருவாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு தோற்றுவாய் சுட்டிக் காட்டுகிறது.
மொத்த நாய்த் தொகையில் பிற வளர்ப்பின நாய்களை விட ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் அதிக விகிதத்தில் இருப்பதாகக் கூறப்படும் புள்ளி விபரத்தின் அடிப்படையின் மீதாகவும், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் பாதுகாவல் நாய்களாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக காவல்துறை, ராணுவம் மற்றும் பாதுகாப்பிற்கான பயன்பாடு ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தப்பட்டதாக, “செல்ல நாய்” அல்லது “துணையாக வரும் நாய்” ஆகிய பயன்பாடுகள் மீதான புள்ளி விபரத் தரவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதின் மீதாகவும், மேற்கண்ட கோரிக்கைகள் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 1991வது வருடம் முதலான ஒரு ஆஸ்திரேலிய அறிக்கையானது, மொத்த நாய்த் தொகையில் உள்ள வேறுபாடுகளை புள்ளி விபரங்களில் எடுத்துக் கொண்ட பின்னரும் (இது வழக்கில் இல்லை), ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், ஒரு நாய் வலியச் சென்று தாக்குவதற்கும், ‘நாய்த் தாக்குதல்’ என்பதற்கும் வேறுபாடு உள்ளது என்பதை மீண்டும் கூறவேண்டும். கலப்பின நாய்களில், ஜெர்மன் ஷெஃபர்டுகள் மிகவும் பொதுவானவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். இவற்றின் புகழ் காரணமாக, சாதாரண மனிதர்கள் ஒரு புகாரை எழுதினாலும், அதில் ஜிஎஸ்டியுடன் கலப்பினமாகப் பெறப்பட்ட நாய்களையும் “ஜெர்மன் ஷெஃபர்ட்” என்றே குறிப்பிடுவார்கள்.
மனப்போக்கு
ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. வளர்ப்பினத் தர நிலைகளின்படி இவை மிகவும் தன்னம்பிக்கை கொண்டுள்ளவை எனக் கூறப்படுகின்றன. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விருப்பமும், நோக்கம் ஒன்று வேண்டும் என்ற ஆவலும் இந்த வளர்ப்பினத்தின் முத்திரையாக உள்ளன. ஷெஃபர்டுகள் மிகவும் விசுவாசமானவை; மேலும், தாம் அறிந்த நபர்களிடம் மிகவும் அன்பு பாராட்டுபவை. இருப்பினும், அவை தமது எல்லை மற்றும் குடும்பம் ஆகியவற்றின் பாதுகாப்பைப் பொறுத்த அளவில் மிகு உணர்ச்சி கொண்டவையாகி விடுகின்றன, குறிப்பாக, இவை சரியான முறையில் சமுதாயப் போக்குடையவையாக வளர்க்கப்படாதபோது இவ்வாறு நிகழ்வதாகிறது. விலகியிருக்கும் குண நலன் இவற்றிற்கான அணுகலை அளிக்கிறது; ஆயினும், முன்பின் அறியாதவர்களிடம் இவை உடனடியாக நட்பு பாராட்டுவதில்லை. இயல்பாகவே ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் அந்நியர்களை விரும்புவதில்லை. இருப்பினும், ஒரு முறை நண்பராகி விட்டால், பிறகு அதன் வாழ்க்கை முழுவதும் அந்த நட்பு நீடிப்பதாக இருக்கும். ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகுந்த நுண்ணறிவு பெற்றவை மற்றும் கீழ்ப்படிதல் கொண்டவை. அவற்றை “இரும்புக் கரம்” கொண்டு அடக்குதல் தேவை என்று சிலர் நினைக்கலாம்; ஆயினும், இதற்கான பயிற்சிகளின் மீது அண்மையிலான ஆராய்ச்சியானது அவை, பரிசு அடிப்படையில் அளிக்கப்படும் பயிற்சி முறைமைகளுக்கு, மிகச் சிறந்தது என்று கூற முடியாதெனினும், நல்ல முறையில் அவை பதிலிறுப்பதாக வெளிக்காட்டியுள்ளது.
ஆரோக்கியம்
ஜெர்மன் ஷெஃபர்டுகளின் பெரும்பான்மையான நோய்கள் இதன் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் இது சொந்த இனத்திற்கு உள்ளாகவே இனப் பெருக்கத்திற்கு உட்படுத்தப்படுவதன் விளைவுகளாகவே உள்ளன. இத்தகைய நோய் நிலைகளில் பொதுவான ஒன்று இடுப்பு மற்றும் முழங்கால் இயல்பு பிறழ்ந்த வளர்ச்சியாகும். இது, இந்த நாய் தனது வாழ்க்கையின் பிற்பகுதிகளில் வலியை அனுபவிக்கவும், மூட்டு அழற்சி நோய்க்கு இரையாகவும் காரணமாகிறது. முதுகுத் தண்டு வடத்தை பாதிக்கும் மற்றொரு பிரச்சினை முதுகெலும்புக் குறுக்கம் என்பதாகும். இவை கீழ் நோக்கிச் சரியும் ஒரு பின்னெலும்பு கொண்ட வளர்ப்பினமாக இருக்க வேண்டும் என்னும் திட்டம்தான் இது போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்குக் காரணமாகும். (ஓநாய் போன்ற காட்டு செந்நாய்களில் பின்னெலும்பானது கீழ் நோக்கிச் சரியாது கிடை நிலையில் இருக்கும்).[சான்று தேவை] இவற்றின் காதுகள் பெரிதாகவும், திறந்த வாக்கிலும் இருப்பதனால், செவித் தொடர்பான தொற்றுகளுக்கும் ஷெஃபர்டுகள் ஆளாகின்றன. அனைத்துப் பெரும் உடல் படைத்த நாய்களைப் போலவும், ஜெர்மன் ஷெஃபர்டுகளும் உப்புசம் கொள்ளக் கூடியவை.
ஒரு ஜெர்மன் ஷெஃபர்ட் நாயின் சராசரி வாழ்நாள் 7-10 வருடங்களாகும்; இதன் உருவ அளவை ஒத்த நாய்களுக்கு இது சாதாரணமான வாழ்வளவேயாகும். ஃப்ளோரிடா பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, முன்னேறும் வட நோய் என்பதான டிஜெனரேடிவ் மைலோபதி (டிஎம்) இந்த வளர்ப்பினத்தில் குறிப்பிடும்படியான கால இடைவெளிகளில் நிகழ்வது, ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மரபியல் ரீதியாக இந்த நோய்க்கு ஏதுவான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
மேலும், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் வோன் வில்பிராண்ட் நோய் என்னும் பொதுவாக மரபியல் சார்ந்த ரத்தப் பெருக்குக் கோளாறு நோய்க்கு அதிகத் தாக்கம் கொண்டுள்ளன.
பணி நாய்களாகப் பயன்பாடு
பணி நாய்களாக தேர்ந்தெடுக்கப்படுவதில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன. இவை தமது காவற்பணிக்காக, குறிப்பாக குற்றவாளிகளை மோப்பம் பிடிப்பது, பிரச்சினை உள்ள பகுதிகளில் ரோந்து செல்வது மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களைக் கண்டறிந்து பிடிப்பது, ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக் கணக்கான ஜெர்மன் ஷெஃபர்டுகள் ராணுவத்தினால் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக சாரணப் பணிக்காகப் பயிற்சி அளிக்கப்படும் இவை, எதிரிகள் வருகையில் அல்லது கண்ணிப் பொறி அல்லது பிற அபாயங்களின்போது சிப்பாய்களுக்கு எச்சரிக்கை அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. விமானத்திலிருந்து மிதவை கொண்டு குதித்திறங்குவதற்கும் ஜெர்மன் ஷெஃபர்டுகள் ராணுவக் குழுக்களால் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
மோப்பப் பணியை ஈடுபடுத்தும் பலதரப்பட்ட செயல்களிலும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இனங்களில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் ஒன்றாகும். இவற்றில், தேட்டம் மற்றும் இடர்மீட்பு, சவத்தைத் தேடுதல், போதைப் பொருட்களைக் கண்டறிதல், வெடிமருந்துகளைக் கண்டுபிடித்தல், தீ விபத்து ஏற்படுத்தக் கூடிய பொருட்களைக் கண்டுபிடித்தல் மற்றும் கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றில் ஈடுபடும் நாய்களும் அடங்கும்.
இவை தமது கூரிய மோப்பத் திறன் காரணமாகவும் மற்றும் கவனம் பிசகாது பணியாற்றும் திறன் காரணமாகவும், இத்தகைய பணிகளுக்கு மிகவும் உகந்தவையாக உள்ளன.
ஒரு கால கட்டத்தில் பார்வையிழந்தவர்களுக்கு வழிகாட்டு நாய் என்பதாகவே ஜெர்மன் ஷெஃபர்ட் நாய் பிரத்யேக வளர்ப்பினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் இன்னமும் இதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன எனினும், அண்மைக் கால வருடங்களில், லாப்ரடார் மற்றும் கோல்டன் ரிட்ரைவர்ஸ் ஆகியவை இத்தகைய பணிகளுக்காக மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பல்திறன் கொண்ட வளர்ப்பினமான இவை தமது ஆழ்ந்த பணிசார்ந்த புலனாலும், அறிவுத் திறன்களாலும், அச்சமற்ற குணத்தாலும் மற்றும் தமது உரிமையாளரிடம் கொண்டுள்ள நேசத்தாலும் சிறந்து விளங்குகின்றன.
பிரபல கலாச்சாரத்தில்
பல் வேறு வகைப்பட்ட ஊடகங்களிலும், ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. முதன் முதலாக திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நாய்களில் ஸ்ட்ராங்ஹார்ட் ஒன்றாகும்; இதைத் தொடர்ந்து வந்தது, தற்போது மிகவும் பிரபலமான ஜெர்மன் ஷெஃபர்ட் நாயாகப் புகழப்படும் ரின் டின் டின். இவை இரண்டும் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்பதில் நட்சத்திரங்களுடன் கௌரவிக்கப்பட்டுள்ளன.
அண்மைக் காலத்தில் பல படங்களில் ஜெர்மன் ஷெஃபர்ட் நாய்கள் முக்கியமான பாகங்களில் நடித்துள்ளன. இவற்றில், கே-9 (இதில் நிஜமான ஒரு காவல்துறை நாயே நடித்தது), கோடோன், தி ஹில்ஸ் ஹேவ் ஐஸ் மற்றும் ஐ ஆம் லெஜண்ட் , ஜான் கார்பெண்டர்ஸின் (1979வது வருடத்திய திரைப்படம்) ஹாலோவீன் ஆகியவை அடங்கும். அடால்ஃப் ஹிட்லர் வளர்த்த ஜெர்மன் ஷெஃபர்டான ப்ளாண்டி அந்த வல்லாட்சியாளரைப் பற்றிய பல ஆவணப் படங்களிலும், டௌன்ஃபால் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளது. ஆஸ்திரிய காவல்துறை நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் , மிகவும் நுண்ணறிவுள்ள ஒரு ஜெர்மன் ஷெஃபர்டைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது.