மந்தை நாய் அல்லது மேய்ப்பு நாய் (herding dog, stock dog, working dog) என்பது கால்நடைகளை மேய்க்கும் நாய் வகைகளைக் குறிப்பது ஆகும். இவை மந்தைகளை அல்லது கால்நடைகளை மேய்க்கப் பயிற்றுவிக்கப்பட்டவை ஆகும்.
மந்தை நாய் நடத்தை
அனைத்து மந்தை நாய்களும் வேட்டை நாய்களில் இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த நாய்களானது தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்க முறை மூலமாக உருவாக்கப்பட்டவை. இந்த நாய்கள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இடையிலான இயற்கை சாயல் வேறுபாட்டைக் குறைத்து இவை உருவாக்கப்பட்டன. அதே சமயம் நாயின் வேட்டைத் திறன்களைப் பராமரித்து, பயனுள்ள வேலைக்கார நாய் வகையாக உருவாக்கப்பட்டன.
பிற விலங்குகளைப் பராமரிப்பதில் நாய்கள் பல வழிகளில் ஈடுபடுகின்றன. ஆத்திரேலிய கால்நடை நாய் போன்ற சில இன நாய் வகைகள், பொதுவாக (ஆடுகளை பட்டியில் அடைப்பதற்காக அவற்றை பட்டியினுள் விரட்ட) விலங்குகளின் குதிகால் பகுதியில் கௌவுகின்றன.
மற்ற இனங்கள் குறிப்பாக பார்டர் காலி நாயினமானது செம்மறி ஆடுகளின் முன்பக்கமாக வந்து அவற்றை மடக்கி, ஓட்டிவந்து பட்டிகளில் அடைக்கிறது. ஹீல்ஸ் அல்லது விரட்டு நாய்கள் மாட்டு மந்தைகளை முன்னோக்கி விரட்டுகின்றன. பொதுவாக, இவை மந்தைக்குப் பின்னால் இருந்து இப்பணியைச் செய்கின்றன. ஆஸ்திரேலிய கெல்பி மற்றும் ஆஸ்திரேலிய கூலி இன நாய்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் பின்பற்றுகின்றன. மேலும் இவை செம்மறிகள் வேறு திசையில் சென்றால் அடுத்த முனைவரை, ஆடுகளின் முதுகுகள் மீதே ஓடிச் சென்று சென்று அவற்றைப் பின்னோக்கி விரட்டுகின்றன. நியூசிலாந்து ஹன்டேவே நாயினமானது சத்தமாகக் குரலெழுப்பி ஆட்டு மந்தையைக் கட்டுப்படுத்துகிறது. பெல்ஜியன் மேய்ப்பன், ஜெர்மானிய மேய்ப்பன் நாய், பிரையார்ட்ஸ் போன்றவை வரலாற்று ரீதியாக மந்தை நாய்களாக இருந்து வந்துள்ளன, அவை ஆடுகளுக்கு “உயிர் வேலி” யாகச் செயற்பட்டு வந்துள்ளன. மேலும் ஆடுகள் பயிர்களை மேயாமலும், சாலைகளின் குறுக்கே வராமலும் தடுத்து மந்தையை வழிநடத்துபவையாகப் பயன்பட்டன.
வெளி இணைப்புகள்
மேய்ப்பு நாய் – விக்கிப்பீடியா