பேரோந்தி

பேரோந்தி (Iguana) என்பது வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு பல்லி ஆகும். இது நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது. அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது. ஆறு கிலோகிராம் வரை எடை இருக்ககூடியது. பரவலாக அறியப்படும் பச்சைப் பேரோந்திகளில் பெண் பேரோந்திகள் ஆண் எடையில் பாதிதான் இருக்கும். அறிவியல் கண்ணோட்டத்தில் இவ்வினத்தை 1768 இல் சோசப்பசு நிக்கோலாசு லாரெண்ட்டி (Josephus Nicolaus Laurenti) என்பவர் “Specimen Medicum, Exhibens Synopsin Reptilium Emendatam cum Experimentis circa Venena என்னும் தலைப்பிட்ட நூலில் விளக்கினார். பேரோந்திவகையி என்னும் குடும்பத்தில் எட்டு பேரினங்களும் 30 தனி இனங்களும் உள்ளன. ஆனால் அவற்றில் இரண்டு பேரினத்தில் உள்ளவை பரவலாக அறியப்படுவன: இகுவானா இகுவானா (iguana iguaana) என்னும் அறிவியற் பெயர் கொண்ட பச்சைப் பேரோந்தி, மஞ்சள் பேரோந்தி. இவை தவிர புதிதாக மிக அண்மையில் (சனவரி 2009 இல்) இளஞ்சிவப்புப் பேரோந்தி ஒன்று புது இனமாக கலாப்பகசுத் தீவுகளில் உள்ள இசபெல்லாத் தீவில் வல்க்கன் வுல்ஃவு (Volcan Wolf) என்னும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூர்ந்து நோக்கும் டார்வின் இந்தப் பேரோந்தி இனத்தைக் கண்டுபிடிக்கத் தவறினார் என்று கூறுகிறார்கள்.


பேரோந்தியை ஆங்கிலத்தில் இகுவானா (iguana) என்று அழைக்கிறார்கள், ஆனால் அது எசுப்பானிய மொழியில் இருந்து பெற்ற சொல். தென் அமெரிக்காவின் பழங்குடிகளாகிய தைனோ (Taino) என்பவர் மொழியில் இவானா (“Iwana”) என்னும் சொல்லில் இருந்து எசுப்பானிய மொழி இச்சொல்லைப் பெற்றது”. இச்சொல் 16 ஆவது நூற்றாண்டில்தான் ஆங்கிலத்தில் வழங்கத்துவங்கியது.


உணவும் வாழ்வும்


பேரோந்தியின் உணவு பெரும்பாலும் இலைகளும், மலர் மொட்டுகளும், இலைகளும், அத்தி மரம் மற்றும் பிற மரங்களின் பழங்களும் ஆகும் மற்ற பல்லி-ஓந்தி இனங்களைப் போல் அல்லாமல் இந்தப் பேரோந்தியின் உடலில் இலை-தழை உணவுகளைச் செரிக்க உதவும் நுண்ணுயிரிகள் உண்டு. ஒரோவொருக்கால் சிறு பறவைகளையும் இளமைப்பருவத்தில் உள்ள பிற முதுகெலும்பில்லா உயிரினக்களையும் உண்ணும்.


மழைக் காலங்களில் இப் பேரோந்தி இனப்பெருக்கம் செய்கின்றது. இக்காலங்களில் ஆண்கள் கட்சி எனப்படும் தன்னுடைய ஆட்சிப்பகுதியை வரையறை செய்து, மீறி தன் கட்சிக்கு வரும் பிற ஆண் பேரோந்திகளுடன் சண்டையிட்டுத் துரத்தும். மழைக்காலம் முடியும் தருவாயில் பெட்டை ஓந்திகள் 30-50 கருவுற்ற முட்டைகளை மண்ணில் இடும். இவை 70-105 நாட்களில் பொரித்து பேரோந்திப் பார்ப்புகள் (ஊர்வனக்குஞ்சுகள்) வெளிவரும். இவை 7-8 செ.மீ அளவே இருக்கும்.


உடலமைப்பும் உடலியக்கமும்


பேரோந்திகள் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய, முதுகெலும்புள்ள ஊர்வன விலங்கு. இதன் தாடைக்கருகே சதையும் தோலும் மடிப்பு கொண்டிருக்கும், முதுகில் வரிசையாக முட்கள் போன்ற அமைப்பு வால் வரை இருக்கும். இதன் தலையில் இதற்கு மூன்றாவது கண் ஒன்று உண்டு. இந்தக் கண் பார்ப்பதற்கு உடலின் மேல்தோல் மெலிதாக மூடி இருப்பது போல் தோற்றம் அளிக்கும்.


மாந்தனும் பேரோந்தியும்


மாந்தர்கள் வளர்ந்த பேரோந்தியை உணவாக ஆயிரக்கனக்கான ஆண்டுகளாக உண்டு வந்திருக்கின்றனர். இது நிரைய புரதச் சத்து உள்ள உணவாகக் கருதப்படுகின்றது.


பேரோந்திகளின் பட வரிசை


வெளி இணைப்புகள்

பேரோந்தி – விக்கிப்பீடியா

Iguana – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.