பிட்டாட்டவா உடும்பு அல்லது சேரா மட்ரே வன உடும்பு (ஆங்கிலம்: Sierra Madre Forest monitor lizard; இலத்தின்: Varanus bitatawa) மரத்தில் வாழும் பழம் உண்ணும் உடும்பு வகையாகும், பிலிப்பைன்சு நாட்டில் லுசோன் தீவில் அமைந்துள்ள சேரா மட்ரே வனப் பகுதிகளில் மட்டுமே வசிப்பவை என அறியப்பட்டுள்ளது. இவை இரண்டு மீட்டர்களுக்கும் (6.6 அடி) கூடுதலாக வளரக்கூடியவை, ஆனால் இவற்றின் எடை ஏறத்தாழ பத்து கிலோகிராம்கள் மட்டுமே (22 இறாத்தல்) என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் செதில் உடல் மற்றும் கால்களில் நீல-கருப்புப் பொட்டுக்களுடன் கூடிய வெளிர் மஞ்சள் மற்றும் பச்சைப் புள்ளிகளையும், வாலில் கருப்பு மற்றும் பச்சை நிறத் துண்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருப்பதையும் காணலாம். ஏனைய சில பல்லி இனங்களைப் போன்று இவற்றின் ஆண் இனத்துக்கும் இரட்டை ஆண்குறிகள் உண்டு. வரானசு பிட்டாட்டவா இந்தோனேசியாவில் வாழும் கொமோடோ டிராகனைப் போன்று இருக்கின்றது. ஏப்ரல் 2010-இல் புதிய உயிரினமாக அறியப்பட்டது; 2011-ம் ஆண்டுக்கான பத்து சிறப்பு உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள்
பிட்டாட்டவா உடும்பு – விக்கிப்பீடியா
Northern Sierra Madre forest monitor – Wikipedia