நில ஆமை (Tortoise) என்பது ஆமை வரிசையைச் சேர்ந்த விலங்குக் குடும்பம் ஆகும். இதுவே உலகில் நீண்ட காலம் வாழும் நில விலங்கு ஆகும். பெரும்பாலான நில ஆமை இனங்கள் சராசரியாக 80 முதல் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
வாழ்க்கை சுழற்சி
பெரும்பாலான நில ஆமை இனங்கள் 1 முதல் 2 முட்டைகள் வரை மட்டுமே இடுகின்றன. எனினும் சில அரிய நேரங்களில் 20 முட்டைகளும் மேல் இடுகின்றன. பெரும்பாலான இனங்கள் நீண்ட காலம் முட்டைகளை அடைகாக்கின்றன. அவற்றின் சராசரியான அடைக்காக்கும் காலம் 100 முதல் 160 நாட்கள் வரை இருக்கும். இரவுப் பொழுதில் முட்டையிட்ட பிறகு பெண் ஆமைகள் அவற்றை மணல், மண் மற்றும் கரிமப் பொருள் ஆகியவற்றைக் கொண்டு மூடிவிடுகின்றன. முட்டைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், அதன் இனத்தைப் பொறுத்து, குஞ்சு பொரிக்க 60 முதல் 120 நாட்கள் வரை ஆகும். அடைக்காக்கும் காலம் முடிவுற்ற பிறகு முழுமையாக வளர்ச்சியடைந்த ஆமைக்குஞ்சுகள் தங்கள் பற்களை பயன்படுத்தி முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும். பிறகு அவை தனியாக வாழப் பழகத் தொடங்கும். முதல் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை பனிக்குடப்பையில் இருந்து பெற்ற சத்துக்கள் ஆமைக்குஞ்சுக்களுக்கு உயிர்வாழ உதவுகின்றன. அவை உணவு தேடி செல்வதற்கான வலிமை மற்றும் நகரும் தன்மை ஆகியவற்றைப் பெற்ற பிறகு உணவு தேடிச் செல்கின்றன. தனக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்காக புழுக்கள் மட்டும் பூச்சி குடம்பிகள் ஆகியவற்றை உண்கின்றன.
நில ஆமைகள் உலகின் அதிக ஆயுட்காலம் கொண்ட விலங்கினம் ஆகும். இவற்றில் சில ஆமைகள் 150 வயது வரை வாழ்பவையாக கருதப்படுகின்றன. இதன் காரணமாக சீனா போன்ற நாடுகளில் இவை ஆயுளைக் குறிக்கும் சின்னமாகக் கருதப்படுகின்றது. இதுவரை பதிவு செய்யப்பட்டவைகளில் மிகப் பழமையான விலங்கான து’இ மலிலா என்ற நில ஆமை, 1777ஆம் ஆண்டு பிறந்தவுடன் ஜேம்ஸ் குக் என்ற பயணி ஒருவரால் தொங்கா அரச குடும்பத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த ஆமை மே 19, 1965ஆம் ஆண்டு தன் 188 வயதில் இயற்கைக் காரணங்களால் உயிரிழந்தது. எனவே இது 226 ஆண்டுகள் வாழ்ந்த அனாகோ என்ற கொய் மீனுக்கு அடுத்தபடியாக உலகில் நீண்ட காலம் வாழ்ந்த முதுகெலும்பி ஆகும்.