சேர்வராயன் மலை மண் பாம்பு

சேர்வராயன் மலை மண் பாம்பு அல்லது யுரோபெல்டிஸ் ஷர்ட்டி (Uropeltis shorttii அல்லது Shevaroy Hills earth snake அல்லது Shortt’s shieldtail snake) என்பது ஒரு நஞ்சற்றப் பாம்பு இனமாகும். அகணிய உயிரியான இது இந்தியாவின், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தெற்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பாம்பு இனத்தை முதன் முதலில் 1863 ஆம் ஆண்டு ஜான் ஷார்ட் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோமின் என்பவர் கண்டறிந்து விவரித்தார். இப்பாம்புகளானது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில், ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் மலைகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தப் பாம்பு வகையானது முதலில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் கேரள வாலாட்டி பாம்பு என நீண்ட காலமாக தவறாக வகைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அண்மையக் காலத்தில் இது வேறு இனம் என்று உறுதி செய்யப்பட்டது. இது மண்ணில் புதைந்து வாழும் ஒரு இரவாடி பாம்பு ஆகும். இதன் முதன்மை உணவு மண்புழுக்களாகும். இது பெரும்பாலும் ஈரப்பதமுள்ள ஆற்றங்கரை, நீரோடை போன்ற பகுதிகளில் மண்ணில் புதைந்து வாழும். இந்த பாம்பு குறித்த போதிய தரவுகள் இல்லாததால் இதன் பாதுகாப்பு நிலை குறித்த மதிப்பீடு செய்யப்படவில்லை.


விளக்கம்


ஒரு சிறிய (< 30 cm (12 in) நீளம்) பாம்பாகும். இது அடர்ந்த பழுப்பு நிறத்தில், நடுவே மஞ்சள் நிற குறுக்குப் பட்டைகளுடன் காணப்படும். இதன் தலை சிறியதாகவும் வால் பகுதி குட்டையாகவும், சாய்வாகத் துண்டிக்கப்பட்டது போலவும் காணப்படும். நுனிப் பகுதி வளைந்தும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். சூரிய ஒளியில் இதன் உடல் மின்னும்.


சொற்பிறப்பு


இந்தப் பாம்பை முதன்முதலில் சேகரித்து ஆய்வு செய்தவர் மருத்துவர் ஜோன் ஷார்ட் என்பவர். இவர் சென்னை இராணுவத்தில் மருத்தவராக இருந்தவர். இவர் இப்பாம்பை இராணுவ கர்னலான ஹென்றி பெட்டோம் என்பவருக்கு பரிசாக வழங்க, பெட்டோம் இப்பாம்பை விவரித்தார். இப்பாம்பை முதலில் கண்டறிந்தவரான ஜோன் ஷாரின் பெயரை இணைத்து யுரோபெல்டி ஷார்ட்டி என்று பெயர் சூட்டப்பட்டது.


வெளி இணைப்புகள்

சேர்வராயன் மலை மண் பாம்பு – விக்கிப்பீடியா

Uropeltis shorttii – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.