வேல்சு கோர்கி நாய்

சில வேளைகளில் தனியே கோர்கி என்று மட்டும் அழைக்கப்படும் வேல்சு கோர்கி (Welsh Corgi) என்பது, சிறிய வகை, மந்தை மேய்க்கும் நாய் ஆகும். இது வேல்சில் தோற்றம் பெற்றது. பெம்புறூக் வேல்சு கோர்கி, கார்டிகன் வேல்சு கோர்கி என இரண்டு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 10 ஆம் நூற்றாண்டளவில், பிளெமிய நெசவாளர்களுடன் பெம்புறூக் வகை கொண்டுவரப்பட்டது. கார்டிகன் வகை நோர்சு குடியேற்றக் காரர்களால் கொண்டுவரப்பட்டது. இரண்டு வகைகளிடையே காணப்படும் ஒற்றுமைகளை விளக்குவதற்காக இரண்டுக்குமிடையே ஓரளவு இனக்கலப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.


இரண்டு வகைகளுள்ளும் பெம்புறூக்கே பெரிதும் விரும்பப்படுகிறது. “கென்னல்” சங்கத்தின் பட்டியலில், கார்டிகன் வேல்சு கோர்கி, பாதிக்கப்படத்தக்க தாயக இனம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கான தர அளவீடுகளின்படி இரண்டு வகைகளுக்கும் இடையே உடல் சார்ந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. கார்டிகன் எடையிலும், உயரத்திலும் பெரியது. மரபுவழியாக வாலின் வடிவங்களும் வேறுபட்டவை. உடல்நலத்தைப் பொறுத்தவரை, இரண்டு வகைகளுமே ஒரே வாழ்க்கைக் காலத்தைக் கொண்டவை என 2004 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது, எனினும் பெம்புறூக் வகையில் சிறுநீரக, சிறுநீர் குழாய்ப் பிரச்சினைகளுக்கு வாய்ப்புக் கூடுதலாக உள்ளது. அத்துடன், பெம்புறூக் வகைக்கு, கார்டிகன் வகையிலும் கூடுதலாகக் கண் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வேல்சு கோர்கியுடன், அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு வலுவான தொடர்பு உண்டு. இவர் 30க்கும் மேற்பட்ட இவ்வகை நாய்களைச் சொந்தமாக வளர்த்து வருகிறார். இவற்றுள் பெம்புறூக் வகையும், கோர்கி-டாசுசான்ட் என்னும் வகையும் அடங்குகிறது.


வரலாறு


வேல்சு கோர்கிகள், வரலாற்றில், மந்தை மேய்ப்புக்கு, குறிப்பாக மாடுகளை மேய்ப்பதற்குப் பயன்பட்டன. இவை தம்மிலும் பெரிய விலங்குகளை நெருக்கமாகத் தொடர்ந்து அவற்றை நகர்த்திச் செல்ல வல்லவை. வரலாற்றில் பெம்புறூக்சயரும், கார்டிகனும் வேல்சின் வேளாண்மைப் பகுதிகள். வேல்சு கோர்கிகளின் குறைந்த உயரம் கொண்டிருந்தாலும், அவற்றின் விரைவு மாடுகளின் குளம்புக்குள் சிக்கிக்கொள்ளாமல் தப்ப உதவுகிறது. “கோர்கி” என்னும் சொல் வேல்சு மொழியில் “குள்ள நாய்” என்னும் பொருள்படும். இது நாயின் உயரத்தைக் குறித்த ஒரு அவமதிப்புச் சொல் அல்ல, வெறுமனே ஒரு விபரிப்புச் சொல்தான். கோர்கி, கானகத் தேவதைகளின் பரிசு என்று சொல்லும் செவிவழிக் கதையும் உள்ளது.


வரலாற்றில், பெம்புறூக்சயரும், கார்டிகன்சயரும் தென்மேற்கு வேல்சில் அருகருகே அமைந்திருந்த நாடுகள். கோர்கியின் தோற்றம் பற்றி வேறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. சிலர், மேற்கூறிய நவீன இனங்கள் இரண்டும் ஒரே மூதாதையில் இருந்து உருவானதாகக் கூறுகின்றனர். ஆனால், வேறு சிலர், பெம்புறூக் வேல்சு கோர்கியே 10 ஆம் நூற்றாண்டில் இருந்து பிளெமிசு நெசவாளர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்கின்றனர். தற்கால செருமனியைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்த நடு ஐரோப்பிய மேய்ப்பு இனங்களில் இருந்தே பெம்புறூக் வகை உருவாகியிருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. எக்காலத்தில் இந்நாய்கள் வேல்சுக்குள் இறக்குமதி செய்யப்பட்டன என்பதைப் பொறுத்து, அவை, டியூச்செசு பிராச்சென் (Deutsches Brachen) ஆகவோ, டாசண்ட் (Dachshund) இனமாகவோ இருந்திருக்கக்கூடும்.


கார்டிகன் வேல்சு கோர்கியின் அறிமுகம் இந்தப் பகுதியில் குடியேறிய நோர்டியக் குடியேறிகளால் ஏற்பட்டது. இதை ஒத்த அளவுகளைக் கொண்ட நாய்கள் தற்கால இசுக்கண்டினேவியாவில் உள்ளன. இவை சுவீடிய வல்கண்ட் (Swedish Vallhund) என அழைக்கப்படுகின்றன. சில வரலாற்றாளர்கள் மேற்படி இரண்டு வகைகளும் ஒரே மூதாதையைக் கொண்டவை என்கின்றனர். கார்டிகன்சயரின் விவசாயிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மாடு வளர்ப்பைக் கைவிட்டு செம்மறிக்கு மாறினர். கார்டிகன் வேல்சு கோர்கி செம்மறிக்குப் பொருத்தமில்லாததால், அவற்றை வேல்சு செம்மறி நாய்களுடன் இனவிருத்தி செய்தனர்.


வெளி இணைப்புகள்

வேல்சு கோர்கி – விக்கிப்பீடியா

Welsh Corgi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.