பரோசோரசு (Barosaurus) என்பது நீண்ட வால், நீண்ட கழுத்துக் கொண்ட தாவரம் உண்ணும் வகையைச் சார்ந்த மாபெரும் டைனசோராக இருந்தது. இது மிகவும் அறிந்திருக்கும் டிப்லோடோக்கசு இனத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டதாய் இருந்தது.
பெயரீடு
பரோசோரசு (Barosaurus) எனும் பெயர் கிரேக்கச் சொற்களான “கனமான” எனும் பொருள் தரும் பாரிசு (βαρυς) மற்றும் “பல்லி” எனும் அர்த்தம் தரும் சோரசு (σαυρος) என்பவற்றின் சேர்க்கையால் உருவானது; எனவே இது “கனமான பல்லி” ஆகின்றது.
விளக்கம்
இது ஒரு பெரிய உருப்படியான விலங்கினமாகும். முதிர்ந்த இனமொன்று 26 மீற்றர் (85 அடி) நீளத்தையும் 20 மெட்ரிக் தொன் எடையையும் கொண்டிருந்தது. டிப்லோடோக்கசுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் நீளமான கழுத்தையும் (10 மீற்றர் நீளம்) குறுகிய வாலையும் கொண்டிருந்தது, ஆனால் இவை இரண்டும் ஏறக்குறைய ஒரே மொத்த நீளம் உடையவை. இவற்றின் மண்டையோடுகள் இதுவரையிலும் அகழ்வாயிலோ அல்லது தொல் ஆய்விலோ கண்டுபிடிக்கப்படவில்லை.