பூரான்

பூரான் (Centipede) என்பது பல கால்களுடன், புழுபோல் நீண்ட, ஆனால் சற்றே தட்டையான உடல் கொண்ட, நெளிந்து ஊரும், கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில், உள்ள உயிரினமும் அதன் உயிரின வகுப்பும் ஆகும். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக, ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு, நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கலாம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் (கட்டுக்கும்) இரண்டு கால்கள் என்னும் விதமாக அமைந்துள்ளன, ஆனால் கடைசி இரண்டு கட்டுகளில் கால்கள் இராது ஏனெனில் கடைசி கட்டு இனப்பெருக்க உறுப்புடையது. எல்லாப் பூரான்களின் உடலிலும் அவற்றின் முதற்பகுதியில் (முதற்கட்டில்) கூரான நச்சு உகிர்கள் உள்ளன. தலையில் இருந்து மிக நீளமான உணர்விழைகள் நீட்டி அசைந்து கொண்டிருக்கும். இவ் உணர்விழைகளும் இணைக்கப்பட்ட பல கட்டுகளாக அமைந்துள்ளன (12-100 கட்டுகள்). ஒவ்வொரு கால்களும்கூட பகுதி-பகுதியாக இணைக்கப்பட்ட அமைப்பு கொண்டிருக்கும். பொதுவாக கால்களில் 7 கட்டுகள் இருக்கும். பெரும்பாலான பூரான் இனங்களில் அவற்றின் கால்களின் நுனியில் கூரான உகிர்கள் இருக்கும்.


பூரான்களின் அறிவியல் பெயர் கைலோப்போடா (Chilopoda, Χειλόποδα). கிரேக்க மொழியில் கைலோஸ் (Χειλός) என்றால் உதடு என்றும், போடோஸ் (ποδός) என்றால் கால் என்றும் பொருள். பூரானின் உடல் அமைப்பில், அதன் முன்கட்டின்(முன் பகுப்பு உடலின்) கால்கள், இரையைப் பற்றி நஞ்சு ஊட்டுவதால், வாயின் தாடை போல் இயங்குகின்றது. எனவே, இதனை தாடைக்காலிகள் என்னும் பொருளில், “foot-jaw”, கைலோப்போடா என்று அழைக்கிறார்கள். தமிழில் இதனைத் தாடைக்காலிகள் எனக்கூறலாம். இப்படி ஓர் உயிரின வகுப்பு முழுவதும் இரையைத் தாக்கி உண்ணும் வகையாக இருப்பது அரிது.


உலகில் ஏறத்தாழ 8,000 இனங்கள் உள்ளன தற்பொழுது 3,000 வகைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. உலகில் பூரான்கள் மிகப்பரவலாகக் காணப்படுகின்றன. வடமுனைக்கருகில் ஆர்ட்டிக் வட்டத்தையும் கடந்து இவை காணப்படுகின்றன. இவை மண்ணுலகில் மழைக்காடுகளில் (பொழில்களில்) இருந்து கடும் பாலைவனங்கள் வரை மிகப்பரவலான சூழல்களில் காணப்படுகின்றன. இவை தன் உடலில் இருந்து ஈரப்பதத்தை இழப்பதால், இவை வாழும் இடம் ஈரப்பதம் சூழ்ந்த குறுஞ்சூழலாகவேனும் (microclimate) இருத்தல் வேண்டும். இலைதழை மற்றும் தாவரசிதைபொருளை மாற்றுவதில் பங்குகொள்ளும் முதுகெலும்பில்லா உயிரினங்களில் இவை முதன்மையானவற்றுள் ஒன்றாக உள்ளன.


மாந்தர்களுக்கு நேரும் தீங்கு


சில பூரான் வகைகளின் கடி மாந்தர்களுக்குத் நச்சுத் தீமை உடையது. பூரான்களின் கடி வலி மட்டுமே தருமாயினும், ஒவ்வாமைத் தன்மை உடைய சிலருக்கும் குழந்தைகளுக்கும் கூடிய தீமை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பூரான்களால் பொதுவாக மாந்தர்களின் தோலை துளைத்து கடிக்க இயலாது.


வாழ்க்கைமுறை


பூச்சிக்களுடன் ஒப்பிடுகையில் பூரான்கள் நீண்டநாள் வாழ்கின்றன. 6 முதல் 10 ஆண்டுகள் வரை வாழக்கூடிய பூரான்கள் கண்டறியப்பட்டுள்ளன. மண்ணிலோ மக்கும் மரங்களிலோ பூரான்கள் 10 முதல் 50 வரையிலான முட்டைகளை இடுகின்றன. தாய்ப்பூரான் முட்டைகளை அடைகாக்கும். இது முட்டைகளை பூஞ்சைத் தாக்குதலில் இருந்து காக்கவே. சிலவகைப் பூரான்களில் குட்டிகள் வளர்ந்து தாய்ப்பூரானையே தின்றுவிடும் தன்மையுடையன.


உலகிலேயே பெரிய பூரான்


அமேசான் பெரும்பூரான் எனப்படும் ஸ்கோலோபெண்ட்ரா ஜைகாண்ட்டியா தான் உலகிலேயே இன்றுள்ள மிகப்பெரிய பூரான். இதன் நீளம் 30 செமீ (12 அங்குலம்) ஐ விட கூடுதலானது. இது பறக்கும் நிலையிலேயே வௌவாலைக் கொன்றுண்ணுவது மட்டுமன்றி எலிகளையும் சிலந்திகளையும் உண்ணும்.


வெளி இணைப்புகள்

பூரான் – விக்கிப்பீடியா

Centipede – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.