கியூபா முதலை

கியூபா முதலை (Crocodylus rhombifer) முன்னொரு காலத்தில் கரிபியன் தீவுகளெங்கும் பரவிக் காணப்பட்ட போதும் தற்காலத்தில் கியூபா நாட்டின் சபட்டா ஈரநிலம் மற்றும் இளமைத் தீவு ஆகிய பகுதிகளில் மாத்திரம் காணப்படுவதும், முதலையினங்களில் மிகச் சிறியதும் (சராசரியாக 2.4 மீற்றர் நீளம் கொண்ட), மிக அருகிவிட்ட விலங்கினமாகும். இவற்றின் புதை படிமங்கள் கேமன் தீவுகளிலும் பகாமாசு நாட்டிலும் காணக் கிடைத்துள்ளன.


இந்த முதலையினம் வளர்ச்சியடையும் போது பெறும் ஒளிர் நிறம், கூடுதல் கடினத் தன்மை, தடித்த செதில்கள், நீண்ட, உறுதியான கால்கள் போன்ற சிறப்பியல்புகளால் ஏனைய முதலையினங்களில் இருந்து வேறுபடுகிறது. மேலும், இவ்வினம் முதலையினங்கள் எல்லாவற்றிலும் பார்க்கக் கூடுதலாக தரைவாழ்க்கையைக் கொண்டதாகும் என்பதுடன் மிகவும் நுண்ணறிவுள்ளதாகும். இவற்றின் ஒரு தொகுதி அமெரிக்க ஃபுளோரிடா மாநிலத்தில் காணப்பட்டதாகவும் அவை கூட்டமாகச் சேர்ந்து இரையை வேட்டையாடுவதாகச் சந்தேகிக்கப்பட்டதால் தனித்தனியாகப் பிரித்து விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


வாழிடம்


கியூபா முதலையானது ஈரநிலங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆறுகளில் வாழ்வதையே விரும்புகின்றன. இவை மிக அரிதாக உவர்நீரில் நீந்தும்.


உணவு


சிறு மீன்கள், நன்னீர் கணுக்காலிகள், மூட்டுக்காலிகள் என்பவற்றை இளம் கியூபா முதலைகள் உணவாகக் கொள்கின்றன. சிறிய முலையூட்டிகள், மீன்கள், ஆமைகள் போன்றவற்றை இவ்வினத்தின் வளர்ந்த முதலைகள் உட்கொள்ளும். ஆமைகளை உட்கொள்ளும்போது அவற்றின் கடினமான ஓடுகளை உடைப்பதற்கு இவற்றின் மொட்டையான பின்புறப் பற்கள் உதவும். கியூபா முதலைகள் அமெரிக்க அல்லிகேட்டர் போன்ற முதலைகள் போலவே இரையைப் பாய்ந்து கௌவும் தன்மை கொண்டனவாகும். இவற்றின் வலிமையான வாலைக் குத்தி மேலே பாய்ந்து நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் கிளைகளில் நிற்கும் சிறு விலங்குகளைப் பிடிக்கும் நுட்பம் இவற்றில் காணப்படுகிறது. எனினும், கியூபா முதலைகள் ஒருபோதும் மனிதரைத் தாக்கியதாக அறியப்படவில்லை.


பாதுகாப்பு


கியூபா முதலை மிக அருகிவிட்ட இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் குறுகிய வாழிடம் மற்றும் பரவல் இதன் பிழைத்தலை வலுவற்றதாக்குகிறது. மனிதர்கள் இவ்வினம் கிட்டத்தட்ட முற்றாக அழியும் வரை வேட்டையாடியுள்ளனர். இதன் இயலிடத்தில் எஞ்சியுள்ளவை பற்றி மேலும் கூடுதலான ஆராய்ச்சிகள் நடத்தத் தேவைப்படுகின்றன. இவை ஐக்கிய அமெரிக்காவில் காப்புநிலையில் வளர்க்கப்படுகின்றன. இவ்வினத்தை அமெரிக்க முதலையுடன் சேர்த்துக் கலப்பினமொன்றை உருவாக்கும் முயற்சி கடந்த காலத்தில் தோற்றுப்போயுள்ளது. எனினும், அவ்வாறான செயற்பாடு இவ்வினத்தின் தூய மரபணுக்கள் பாதுகாக்கப்படுவதைக் குறைக்கும்.


வெளி இணைப்புகள்

கியூபா முதலை – விக்கிப்பீடியா

Cuban crocodile – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.