ஓரினோக்கோ முதலை

ஓரினோக்கோ முதலை (Crocodylus intermedius) என்பது தென்னமெரிக்காவின் வட பாகத்தில், குறிப்பாக ஓரினோக்கோ ஆற்றில் வாழும் மிக அருகிவிட்ட முதலையினம் ஒன்றாகும். இவ்வினத்தின் நன்கு வளர்ந்த முதலைகள் 3-4.8 மீட்டர் (9.9-16 அடி) வரை வளர்ச்சியடைந்து காணப்படும். இவ்வினத்தின் பெண் முதலையின் சராசரி நிறை 200 கிலோகிராம் (440 இறாத்தல்) இருக்கும் அதேவேளை இவ்வினத்தின் ஆண் முதலை சராசரியாக 380 கிலோகிராம் (837 இறாத்தல்) இருக்கும். இவ்வினத்தைச் சேர்ந்த சுடப்பட்ட முதலையொன்று ஆகக் கூடுதலாக 1800 கிலோகிராம் நிறையும் 6.6 மீட்டர் (22 அடி) நீளமும் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. தற்காலத்தில் காணப்படும் ஓரினோக்கோ முதலைகள் 5 மீட்டர் (16.5 அடி) நீளத்திலும் கூடுதலாவதில்லை. ஏனைய முதலைகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு பெரிய மூஞ்சுப் பகுதியையும் கடுங்கபில நிற வளையல்களைக் கொண்ட மஞ்சனித்த தோலையும் கவனித்தால் ஓரினோக்கோ முதலையை எளிதாக வேறுபடுத்திக் காணலாம்.


பரம்பல்


இவ்வினத்தின் பரம்பல் கொலம்பியாவிலும் வெனிசூலாவிலும் ஓடும் ஓரினோக்கோ ஆறு, மெட்டா ஆறு ஆகிவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவை சில நேரங்களில் டிரினிடாட் தீவில் காணப்பட்டதாகக் கூறப்படினும் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. இதனை அங்கு கண்டதாகச் சொல்வோர் ஒரு வேளை அமெரிக்க முதலையைப் பாரத்துத் தவறுதலாக இவ்வினமென நினைத்திருக்கக்கூடும்.


உணவு


எல்லா முதலைகளையும் போல ஓரினோக்கோ முதலைகளிற் பெரும்பாலானவை மீன்களை உணவாகக் கொள்கின்றன. எனினும், இதன் தாக்குதல் எல்லைக்குள் வரும் காட்டு விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற எந்தவொரு விலங்கும் இதன் உணவாக மாறலாம். உணவு கிடைப்பது அரிதாகும் போது இவை ஏனைய கொன்றுண்ணிகளையும் உணவாகக் கொள்வதுண்டு. இவை மனிதர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆயினும், இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவடைந்தும், இவற்றின் பரம்பல் மிகச் சிதைவடைந்தும் காணப்படுவதாலும் இவற்றின் வாழிடங்கள் பெரிய மக்கட் குடியேற்றங்களிலிருந்து தொலைவில் இருப்பதாலும் அதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும்.


இனப்பெருக்கம்


ஓரினோக்கோ முதலைகள் ஆண்டின் வறட்சியான காலங்களிலேயே இணை சேரும். பொதுவாக, இம்முதலைகள் இணை சேர்ந்து பதினான்கு வாரங்களின் பின்னர் பெண் முதலை குழியொன்றைத் தோண்டிக் கூடமைக்கும். குழிக்கூடுகளையே அமைக்கும் இம்முதலைகள் தம் கூடுகளை மணற்பாங்கான ஆற்றங்கரைகளிலேயே அமைக்கும். பின்னர் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் அம்முட்டைகளை அடைகாக்கும். இரவில் பொரிக்கும் இவற்றின் குஞ்சுகள் ஒலியெழுப்பித் தம் தாயை அழைக்கும். பின்னர் தாய் முதலை தன் குஞ்சுகளை ஆற்றுக்குக் கூட்டிச் செல்லும். தாய் முதலை தன் குஞ்சுகளை ஓராண்டுக்குப் பாதுகாக்கும். ஓரினோக்கோ முதலைக் குஞ்சுகள் அமெரிக்கக் கருங்கழுகு, தேகு பல்லி, அனக்கொண்டா, கேமன் அல்லிகேட்டர் போன்ற ஊனுண்ணிகளின் தாக்குதலுக்கு அகப்படக்கூடியனவாகும்.


காப்புநிலை


ஓரினோக்கோ முதலையின் தோல் விலை மதிப்புக் கூடியது என்பதால் அளவுக்கு மிஞ்சிய வகையில் இவற்றை வேட்டையாடியமையால் இவை எண்ணிக்கையில் பெரிதும் குறைந்துவிட்டன. 1940 இலிருந்து 1960 வரையான காலப் பகுதியில் ஓரினோக்கோ ஆற்றிலும், லானோசு ஈரநிலத்திலும் ஆயிரக்கணக்கில் வேட்டையாடப்பட்டமையால் இவ்வினம் கிட்டத்தட்ட அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1970 இலேயே ஓரினோக்கோ முதலை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டது. தற்காலத்தில் இவ்வினம் வெனிசூலாவிலும் கொலம்பியாவிலும் பாதுகாக்கப்படுகிறது. தற்காலத்திலும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் இவ்வினம் அதன் தோலுக்காக வேட்டையாடப்படுவதிலும் இவற்றின் குஞ்சுகள் உயிருள்ள விலங்குகள் விற்பனை செய்யப்படும் இடங்களில் விற்கப்படுவதும், சுற்றாடல் மாசடைவதும், ஓரினோக்கோ ஆற்றின் மேற்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அணைக்கட்டுக்களை அமைக்கும் திட்டங்களும் இவ்வினத்துக்கு முதன்மையான அச்சுறுத்தல்களாகியுள்ளன.


இயலிடத்தில் இவற்றின் எண்ணிக்கை சரியாக அறியப்படாதிருப்பினும் கிட்டத்தட்ட 250-1500 தனியன்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. கொலம்பியாவில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அங்கு ஆகக் கூடுதலாக வாழும் இடத்தில் கிட்டத்தட்ட 50 தனியன்கள் காணப்படுகின்றன. இவை மிகக் கூடுதலாக் காணப்படும் இடமான வெனிசூலாவின் கோயெடெசு பகுதியில் ஐந்நூறுக்கும் குறைவான தனியன்களே காணப்படுகின்றன. அங்கு வேறு சில இடங்களில் சிறிய எண்ணிக்கையில் ஓரினோக்கோ முதலைகள் வாழ்கின்றன.


2007 நவம்பர் மாதத்தில் பன்னாட்டு உயிரினங்கள் பற்றிய தகவல் முறைமை எனும் அமைப்பில் பதிவு செய்யப்பட்டு விலங்கினக் காட்சியகங்களில் 50 தனியன்கள் வரை வளர்க்கப்பட்டன. அவற்றில் ஆகக் கூடிய எண்ணிக்கையாக 35 தனியன்கள் டல்லாசு உலக நீர்வாழ்வகம் வளர்த்தது. அதற்கு மேலதிகமாக, ஏராளமான தனியன்கள் வெனிசூலாவில் பிடித்து வளர்க்கப்படுகின்றன. 1990களின் முற்பகுதி முதல் ஏராளமான ஓரினோக்கோ முதலைக் குஞ்சுகள் தனியார் கானகங்களிலும் அரச கானகங்களிலும் (தேசிய வனம்) விடப்பட்டுள்ளன. முக்கியமாக, லானோசு ஈரநிலப் பகுதியில் அப்பகுதியின் பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அங்கு வரும் இயற்கை விரும்பிச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக இவற்றின் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. பெரும்பாலான குஞ்சுகள் வளர்ச்சியடைய முன்னரே இறந்து விடுவதால் பிடித்து வளர்க்கப்பட்ட ஓரினோக்கோ முதலைகளில் 360 தனியன்கள் அவை 2 மீட்டர் (6.5 அடி) வரை வளர்ந்த பின்னரே விடப்பட்டன.


வெளி இணைப்புகள்

ஓரினோக்கோ முதலை – விக்கிப்பீடியா

Orinoco crocodile – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *