சியாமிய முதலை

சியாமிய முதலை (Crocodylus siamensis) இந்தோனேசியா (போர்ணியோ மற்றும் சிலவேளை சாவகம்), புரூணை, கிழக்கு மலேசியா, லாவோஸ், கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் ஆகிய இடங்களுக்கு உரித்தான நன்னீர் முதலை இனமொன்றாகும். மிக அருகிவிட்ட இவ்வினம் இதன் இயல் வாழிடமாயிருந்த பல பகுதிகளிலிருந்து ஏற்கனவே அழிந்துவிட்டது.


இயல்பு


சியாமிய முதலை தன் இயலிடத்தில் சதுப்பு நிலங்கள், ஆறுகள், சில ஏரிகள் போன்ற மெதுவாக நகரும் நீரோட்டங்களையே விரும்புகிறது. இவ்வினத்தின் வளர்ந்த முதலைகளில் பெரும்பாலானவை 3 மீட்டர் (10 அடி) நீளத்துக்கு மேல் வளர்வதில்லை. எனினும், காப்புநிலையில் வளர்க்கப்படும் சியாமிய முதலைகள் ஏனைய முதலைகளுடன் இணையச் செய்யப்பட்டு உருவாகும் கலப்பின முதலைகள் இதனை விடப் பெரிதாக வளரும் தன்மையுடையனவாகும். கலப்பினமல்லாத தூய சியாமிய முதலைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை என்பதுடன் சினமூட்டப்படாமல் தானாகவே இவை மனிதரைத் தாக்கியதாக செய்தி எதுவும் இல்லை.


யூன்-நவம்பர் காலப் பகுதியிலான வலுவான பருவ மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், அக்காலத்தில் சியாமிய முதலைகள் பேரேரிகளுக்கும் ஏனைய நீர்நிலைகளுக்கும் சென்றுவிடுகின்றன. பின்னர் நீர் வற்றத் தொடங்கியதும் தம் உண்மையான வாழிடங்களுக்கு மீண்டு விடுகின்றன.


பரம்பல்


அளவுக்கு மிஞ்சிய வேட்டையாடல் காரணமாகவும் வாழிட இழப்புக் காரணமாகவும் இவ்வினம் மிக அருகிவிட்டது. 1992 இல் சியாமிய முதலை தன் இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் அல்லது அந்நிலையை அண்மித்த இனம் என வரையறுக்கப்பட்டது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இவ்வினத்தின் இரு சிறு குழுக்கள் (அண்மையில் மீள அறிமுகப்படுத்தப்பட்டவை தவிர, பெரும்பாலும் இரண்டிரண்டாக) தாய்லாந்திலும், (நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையிலான தனியன்களைக் கொண்ட) ஒரு குழு வியட்நாமிலும், ஓரளவு பெரிய குழுக்கள் மியன்மார், லாவோசு, கம்போடியா ஆகிய நாடுகளிலும் இருப்பது கண்டறியப்பட்டது. லாவோசு நாட்டின் தெற்கிலுள்ள சவன்னாகேத்து மாகாணத்தில் முதலைக் கூடொன்றில் சியாமிய முதலைக் குஞ்சுகள் பல இருப்பதை உயிரினக் காப்பாளர்கள் 2005 மார்ச்சு மாதம் கண்டுபிடித்தனர். மலேசியா, புரூணை ஆகிய நாடுகளில் இவை அண்மைக் காலத்தில் காணப்பட்டமைக்கான பதிவுகள் எதுவும் இல்லை. இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் மாகாணத்தில் இவை குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் இருப்பது அறியப்பட்டுள்ளது.


பாதுகாப்பு


யயாசான் உலின் (வைரமர அமையம்) என்னும் அமைப்பு இம்முதலைகள் வாழ்வதாக அறியப்பட்ட முக்கிய ஈரநிலப் பகுதியொன்றுக்கான சிறிய பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகிறது. இவற்றில் பெரும்பாலானவை கம்போடியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஏலமலையை அண்மித்த பகுதிகளிலும் அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள விரேயக்சே தேசிய கானகத்திலும் இவை சிறு சிறு குழுக்களாகக் காணப்படுகின்றன. கம்போடியாவின் கோஹ்கொங் மாகாணத்தில் திமோபங் மாவட்டத்தில் தெரிந்த முதலைக் கூடுகளைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு தாவர விலங்கின அமைப்பு ஊர்வாசிகளுக்கு நிதியுதவி செய்கிறது. கம்போடியாவின் திமோபங் மாவட்டத்தில் தாத்தை ஆற்றிலும் சியாமிய முதலைகளின் சிறிய குழுவொன்று வாழ்வதாக நம்பப்படுகிறது.


உலகில் சியாமிய முதலைகளின் சுகம் மிக்க சமுதாயமொன்று வாழும் இடமாக கம்போடியாவின் அராயெங் ஆறு அறியப்பட்டுள்ளது. எனினும், அங்கு எழுப்பப்படும் அணைக்கட்டுக் காரணமாக இந்நிலை மாற்றமடையலாம். அவ்வணைக்கட்டு வேலைத் திட்டம் முடிவடைந்ததும் ஏற்படும் வெள்ளப் பெருக்குக் காரணமாக சியாமிய முதலைகள் பொருத்தமான வாழிடத்தை இழக்க நேர்வதற்கு முன்னர், கம்போடிய அரச திணைக்களங்கள் பலவற்றுடன் சேர்ந்து பன்னாட்டு தாவர விலங்கின அமைப்பு சியாமிய முதலைகளை அராயெங் ஆற்றிலிருந்து பிடித்து பொருத்தமான சூழலியற் தகவுகளைக் கொண்ட வேறு ஆறுகளில் விடுவதற்கான செயற்பாடொன்றைத் திட்டமிட்டுள்ளது.


சட்டத்துக்குப் புறம்பான வகையில் இவற்றைப் பிடித்துச் சென்று கறுப்புச் சந்தையில் சில நூறு அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்வது இவ்வினத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாகியுள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் முதலைகள் முதலைப் பண்ணைகளில் ஏனைய பெரிய இன முதலைகளுடன் கலக்க விடப்படுகின்றன. பயணிப்பது மிகக் கடினமான பின்தங்கிய பகுதிகளில் பெரும்பாலான சியாமிய முதலைக் குழுக்கள் சிதறி வாழ்கின்றமையால் இயலிடத்தில் இவற்றின் எண்ணிக்கை சரியாக அறியப்படவில்லை. காப்பகங்களில் உவர்நீர் முதலையுடன் சேர்த்துக் கலப்பினமாக்கப்பட்ட சியாமிய முதலைகள் பல காணப்பட்ட போதிலும், காப்பகங்களிலும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள முதலைப் பண்ணைகளிலும் இவ்வினத்தின் சில ஆயிரம் “தூய” தனியன்கள் வாழ்கின்றன.


கம்போடிய எல்லைக்கு அருகில் உள்ள, தாய்லாந்தின் பங்சிடா தேசிய கானகத்தில் சியாமிய முதலைகளை இயலிடத்துக்கு மீள அறிமுகப்படுத்தும் திட்டமொன்று உள்ளது. அக்கானகத்திற்கு வருவோர் அணுக முடியாத தொலைவில் உள்ள ஆறொன்றில் இம்முதலைகளின் குஞ்சுகள் பல விடப்பட்டுள்ளன.


2009 ஆம் ஆண்டு, கம்போடியாவில் உள்ள நொம் தமாவோ காட்டுயிர் மீட்பகம் இவ்வினத்தின் 69 தனியன்களிடம் மரபணுச் சோதனை நடத்தியது. அவற்றில் 35 தனியன்கள் “தூய” சியாமிய முதலைகள் எனக் கண்டறியப்பட்டது. பன்னாட்டு தாவர விலங்கின அமையம் மற்றும் காட்டுயிர்க் கூட்டமைப்பு ஆகியன கம்போடிய கானகப் பாதுகாப்பு நிருவாகத்தினருடன் இணைந்து இவற்றைக் காப்பகத்தில் வளர்ப்பதற்கான செயற்பாடொன்றைத் திட்டமிட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

சியாமிய முதலை – விக்கிப்பீடியா

Siamese crocodile – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.